எனது கடைசி மகள் கவிதாவின் பிரசவக்கால நேரம் வந்துவிட்டது. 06 – 09 -1999 அன்று குழந்தை பிறக்கலாம் என்பது மருத்துவர்களின் தேராயக் கணிப்பு.
07 – 09 – 1999 அன்று வரை பிரசவம் ஆகவில்லை. அன்று மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்ற போது “கருப்பையில் வீற்றிருக்கும் ஆண் குழந்தை தலை திரும்பாத நிலையில் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையில் உள்ளுறை நோயாளியாகச் சேர்த்துவிடுங்கள்” என்று மருத்துவர்கள் கூறினார்.
“நாளை வருகிறோம்” என்று சொல்லிவிட்டு மகளும், மாப்பிள்ளையும் வீடு திரும்பினர். மறுநாள் காலையில் என் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். குழந்தை பிறப்பதற்கான முயற்சிகள் பல தொடர்ந்து எடுக்கப்பட்டன. விட்டுவிட்டுப் பிரசவ வலி இருந்ததே தவிர தொடர்ந்து வலி எடுக்கவில்லை.
அன்றிரவு எனக்கு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும் எங்கள் குடும்ப நண்பருமாகிய டாக்டர் ஞானசௌந்தரி அவர்கள் சாதாரண முறையில் பிரசவமாக வாய்ப்பு குறைவு என கூறிய போது நானும், என் துணைவியாரும் மிகுந்த கவலை அடைந்தோம்.
மறுநாள் காலை வழக்கம் போல வேலையில் ஈடுபட்டிருந்தோம்.
அப்போது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பக்தையான திருமதி ஜெயந்தி அவர்கள், கவிதாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பதென்றால், அவளது உடல் நிலை சீராகப் பல மாதங்கள் பிடிக்கும் எனவும், எனவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் 108 போற்றியை தொடர்ந்து படித்து வருமாறும் எங்களுக்கு அறிவுரை கூறினார்.
அவ்வாறே மதியம் சாப்பாட்டிற்கு வீடு திரும்பியவுடன் பலமுறை 108 போற்றி படித்து வந்தேன்.
இரவு 7 மணியளவில் மருத்துவமனையிலிருந்து என் மனைவி தொலைபேசியில் “உடனே புறப்பட்டு வாருங்கள்! அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று கவிதாவை அறுவை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று விட்டனர்!” என்று அழுது கொண்டே கூறவும், நான் ஒரு ஆட்டோ பிடித்துப் புறப்பட்டேன்.
பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்களிடம் மானசீகமாக என்னுடைய வேண்டுதலை வைத்துப் பிரார்த்தனை செய்தேன். என் மகளை அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.
சாதாரண முறையில் மகப்பேறு அவளுக்குச் சம்பவிக்க வேண்டும் என்று என் நெஞ்சார்ந்த வழிபாட்டை நெடுக சொல்லிக் கொண்டே போனேன். மருத்துவமனை வாயிற்கதவுகள் சாத்தப்பட்டிருந்தன.
இரவு எட்டு மணி ஆகிவிட்டதால் எவரையும் அனுமதிக்க மாட்டோம் என்று செவிலியர் கூற, அறுவை சிகிசகிக்காக அனுமதிக்கப்பட்டுள்ள என் மகளது நிலைமை குறித்தாவது சொல்லுமாறு வேண்டினேன்.
தற்போது அறுவை சிகிச்சை எதுவும் நடைபெறவில்லை என்று பதில் வந்தது. “நோயாளிக்குத் துணையாக என் மனைவியும், மூத்த மகளும் இருக்கிறார்கள். அவர்களில் யாரவது ஒருவரை அழையுங்கள்” என்று மன்றாடினேன்.
என் மூத்த மகள் வந்து கூறிய செய்தி வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ‘ஆண் குழந்தை – சாதாரண முறையில் இரவு 8 03 மணிக்குப் பிறந்து விட்டது’ என்பதே அந்த இனிய செய்தி.
குழந்தை மூச்சுத்திணறல் இருப்பதால் தனியாக இரண்டு நாட்கள் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்துள்ளோம் என்று மருத்துவர் கூற ஆறுதல் அடைந்தோம்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் நேரில் எங்கள்
குறைகளை எடுத்துச் சொல்ல
முடியாத சூழ்நிலையில், பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் ” பாரத்தை நீ தான் இறக்கிவிட வேண்டும்”என்ற உளமார மன்றாடினால் நினைத்தது கை கூடும் என்பதற்கு என் வாழ்க்கை நிகழ்ச்சி ஓர் இனிய சான்று.
ஓம்சக்தி!
பக்கம் 174 – 176
சக்தி வி. விஷ்ணுகுமார், எம்.கே.பி. நகர், சென்னை
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து….