அறிவும் உணர்வும்

0
1251

ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே அவனுக்கு உணர்வுகளும் உடன் இருந்து வந்தன. மிக அடிப்படையான பசி, தாகம், பாலுணர்ச்சி என்பவற்றுடன் வளர்ச்சி அடைந்த உணர்வுகளான கோபம், வெறுப்பு, அன்பு முதலியவைகளும் அன்றே தோன்றியவை என்று கூறுவதில் தவறு இல்லை. இதன் எதிராக ஆதிமனிதனிடம் அறிவும் உடன் வளர்ச்சி பெற்று இருந்தது என்று கூற முடியாது. ஏறத்தாழ விலங்கை ஒத்த வாழ்க்கை வாழ்ந்த ஆதிமனிதனுக்கு அறிவும் விலங்கறிவின் அளவே அன்று இருந்திருத்தல் வேண்டும். இந்த அறிவும் பரிணாம முறையில் (Evolution) அவன் பெற்றதேயாகும். பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதன் வாழ்ந்த இடைக்காலத்தில் அவனுடைய அறிவும் படிப்படியாக வளர்ந்தது; சக்கரத்தையும் நெருப்பையும் கண்டுபிடித்த ஆதிமனிதன் அன்றைய நிலையில் பெரிய அறிவாளிதான். இன்று அணுகுண்டைக் கண்டுபிடித்த மனிதன் இன்றைய நிலையில் பெரிய அறிவாளிதான்.

நாளும் வளரும் இயல்புடைய இந்த அறிவின் துணை கொண்டு இன்று காணப்பட்ட மெய்ம்மைகள் நாளையும் மெய்ம்மையாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரு காலத்தில் அறிவின் துணை கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட அணுவும் அது பற்றிய மெய்ம்மைகளும் இன்று முற்றிலும் மாறிவிட்டன. ஒரு நூற்றாண்டுக்குள் இவ்வளவு மாற்றம் ஏற்படக் கூடிய மெய்ம்மைகளையும், அவற்றைக் கண்டுபிடித்த அறிவையும் நிலையானவை என்று எப்படிக் கூற முடியும்?

என்றும் நிலைத்ததாய், தோற்றம், அழிவு இல்லாததாய் இருக்கும் சத்தியப் பொருளை இந்த அறிவின் துணை கொண்டு ஆராய முடியாது. அப்படி ஒரு வேளை ஆராய்ந்து யாராவது ஒரு முடிவைக் கூறி இருந்தால் அந்த முடிவும் மாற்றத்துக்கு உரியது என்பதையும் மறந்துவிடக் கூடாது. அறிவு வளர வளர முன்னர்க் கண்ட முடிவுகள் மாறுபாடு அடைவதும், புதிய முடிவுகள் கிடைப்பதும் இயற்கைதான். ஒன்றை மட்டும் இதன் மூலம் அறிந்துகொள்ள வேண்டும். அறிவின் துணை கொண்டு காணப்பட்ட எந்த முடிவும் நிலையானது அன்று. அது மாறுதலுக்கும், புறக்கணிப்புக்கும் உட்பட்டதாகும்.

இத்தகைய அறிவின் துணை கொண்டு, என்றும் நிலை பேறுடைய சத்தியப் பொருளை ஆராயத் தொடங்குவது தண்ணீருக்குள் இருக்கும் பொருளை கைவிளக்கை எடுத்துக்கொண்டு தேடப் போவது போலாகும். அப்படியானால் அறிவின் துணை கொண்டு பரம்பொருளை, சத்தியத்தைத் தேடி ஆராயக் கூடாதா என்ற வினா நியாயமானதே! உபநிடதங்கள், சமய சாத்திரங்கள் அனைத்தும் அறிவின் துணை கொண்டுதான் பரம்பொருள் பற்றிய விளக்கம் தர முற்பட்டன. இந்த நிலையில் அறிவின் துணைகொண்டு ஆராயப்படும் எதுவும் மாற்றத்துக்குரியன என்று முன்னர்க் கூறப் பெற்ற முடிவு என்ன ஆவது?

பல்வேறு சமயங்களைச் சேர்ந்த அறிஞர் பெருதமக்கள் தம் ஆராய்ச்சியின் பயனாகக் கூறிய முடிவுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம் அல்லவா? பரம்பொருள் ஒன்றுதான் என்று எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். அப்படி இருந்தும், அடிப்படையிலேயே மாறுபாடுகளை உடைய அத்வைதம், துவைதம், விசிட்டாத்வைதம், சைவ சித்தாந்தம் என்ற கிளைகள் தோன்றி உள்ளன. இதில் இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால் “அத்வைதம்” என்ற ஒரு சொல்லை மேலே கூறிய அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் அந்த ஒரு சொல்லுக்குப் பொருள் செய்வதில்தான் எத்தனை மாறுபாடுகள்? இவை எல்லாம் எப்படித் தோன்றின? ஆம்! அறிவின் துணை கொண்டு ஆராயப் புகுந்தால் இந்த மாறுபாடுகள் வரத்தான் செய்யும். ஒரே மனிதனுக்குக் கூட இன்று தெரியும் மெய்ம்மைகள் நாளை தெரியும் மெய்ம்மைகளிலிருந்தும் இன்னும் 50 ஆண்டுகள் கழித்துத் தெரியும் மெய்ம்மைகளிலிருந்தும் மாறுபடுவதில் வியப்பில்லை.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் நம் பெரியோர்கள் நித்தியப் பொருளை அறிவின் துணை கொண்டு அதிக தூரம் ஆராய வேண்டாம் என்று கூறினார்கள். “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா” என்று கூறினார் திருஞானசம்பந்தர். அறிவு முதலிய அனைத்தையும் கடந்து நிற்பதால்தான் அப்பொருளுக்குக் “கடவுள்” என்று பெயரிட்டனர். கடந்த பொருளை முழுவதும் அறிவால் கண்டுவிட முடிந்தால் கடந்து நிற்பது என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். மனிதன் தனக்குக் கொடுக்கப் பெற்றுள்ள அறிவைப் பயன்படுத்தாமலும் இருக்க முடியாது; எனவே அவன் பரம்பொருளையும் ஆராயத்தான் செய்வான். ஆனால் அவ்வாறு ஆராயத் தொடங்கும் பொழுது அறிவின் குறைபாடுகள், எல்லை, அளவு முதலியவற்றை அறிந்து ஆராய்ச்சியில் இறங்க வேண்டும். அப்பொழுது அதனால் ஒன்றும் தவறு நிகழ்ந்துவிடாது. இதனை நன்கு உணர்ந்தமையின் தம் முன்னோர் ஆராய்ச்சியின் முடிவில், இப்பொருள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது என்பதை விடாமல் கூறிச் சென்றனர்.

இனி அடுத்து மனிதனிடம் உள்ள உணர்வு ஏறத்தாழ மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது. பசி, பால்உணர்வு போன்றவை ஆதிமனிதமனிடம் இருந்தது போலவே இன்றும் இருந்து வரக் காண்கிறோம். எவ்வளவு அறிவு வளர்ந்தாலும் நாகரிகம் மிகுந்தாலும் இதில் வேறுபாடு ஒன்றும் இருக்கக் காணவில்லை. அறிவினால் அறிய முடியாத ஒன்றை உணர்வினால் அனுபவிக்க முடியும். பாலுணர்வின் அடிப்படையில் தோன்றும் காதலைப் பற்றிக் கூற வந்த நம் முன்னோர் “இன்னார்க்கு இன்ன விதமாய் இருந்தது என்று எடுத்து உரைக்க முடியாத ஓர் அனுபவம்” என்று கூறினார்கள். இதேபோல பக்தி என்பதும் ஓர் உணர்வாகும். இதன் அடிப்படையில் பரம்பொருளை நன்கு தெரிந்துகொள்ளவும் அனுபவிக்கவும் முடியும். “பக்தி வலையில் படுவோன் காண்க” என்று பரம்பொருளைப்பற்றி நம்முன்னோர் கூறியுள்ளனர். அன்பு என்ற உணர்வு ஒன்று இருந்துவிடுமாயின் அறிவு காண முடியாத ஒன்றை அன்பு காண முடியும். பரம்பொருளைக் காணவும் அதனுள் ஈடுபடவும் மிகவும் தேவை அகங்கார மமகார அழிவு. தான் என்ற ஆணவமும், எனது என்ற பற்றும் அற்றால் ஒழியப் பரம்பொருளை நெருங்க முடியாது. அறிவை வளர்ப்பதால் இவை இரண்டையும் உறுதியாகப் போக்க முடியாது. அன்பு என்ற ஒன்றால்தான் அகங்கார மமகாரங்களைப் போக்க முடியும். எனவே உணர்வுதான் மனிதனை மனிதனாக வாழச் செய்வது. எத்துணை வளர்ந்தாலும் அறிவு உணர்வுக்கு ஒருபடி தாழ்ந்ததாகவே இருக்கும். கல்விக் கடலான விவேகானந்தர் உணர்வுக் கடலான இராமகிருஷ்ண பரம ஹம்ஸரிடம் சரணடைந்தது இக்கருத்தை வலியுறுத்தும்.

ஓம் சக்தி!

நன்றி

பக்கம்: (3-7).

சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 9 (1982).