சக்தி யார்?

0
1699

உலகம் படைக்கப்பட்டும் பல கோடி ஆண்டுகள் ஆனபிறகுதான் இந்த உலகில் உயிர்கள் தோன்றின. ஓரறிவு உயிரில் தொடங்கிப் பரிணாம வளர்ச்சி (Evolution) முறையில் ஆறு அறிவு படைத்த மனிதன்வரை உயிர்கள் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இந்தப் பரிணாம வளர்ச்சியை, ஓர் அறிவுடைய உயிருக்கும் கீழ்ப்பட்டே தொடங்குகிறார் மாணிக்கவாசகர் என்ற பெரியார். ‘‘புல்லாகிப்பூடாகிப் புழுவாய் மரமாகி பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் போயாய்க் கணங்களாய் வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்.” (சிவ.புரா.26-31)

பாடல் முறைக்கேற்ப முன்பின்னாகக் கூறியுள்ளார் என்றாலும் இதில் பரிணாம வளர்ச்சி முறை கூறப்பெற்றுள்ளதை அறியலாம். ஆனால் இத்தனை மாறுபட்ட உடம்புகள் உள்ளன என்றாலும் இந்த உடம்புகளுள் புகுந்து புறப்படும் உயிர் ஒன்றுதான் என்பதையும் பெரியார் அறிவிக்கின்றார். ‘‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று அவர் கூறுவதால், இந்தப் பிறப்பு முறை ஒவ்வொன்றிலும் தாம் ஒருவரே பிறந்து, இறந்து மறுபடியும் பிறந்து வருவதாகக் கூறுகின்றார். அப்படியானால் எத்தனை உடம்பெடுத்தாலும் அந்த உடம்பை விட்டு மறுபடி வேறு உடம்பினுள் புகுந்து பிறந்தாலும் உடம்பளவில் மாறுதல் இருக்கிறதே தவிர
உயிரில் மாறுதல் இல்லை என்பது புலப்படுகிறது. எந்த ஒரு இனத்தை எடுத்துக்கொண்டாலும் அந்த இனத்துள்கூட ஆயிரக் கணக்கான உடல் பேதங்கள். எத்தனை விதமான பறவைகள்? எத்தனை விதமான பறவைகள்? எத்தனை விதமான மிருகங்கள்? மனிதர்களில் கூட எத்தனையோ வகையினர் இருக்கிறார்கள். எனவே ஒன்றுக்கொன்று பெரிதும் மாறுபாடு கொண்ட உடல் அமைப்புடன் உள்ள இனங்களைக் காண்கிறோம்.

இந்தப் பல்வேறு உடல் மாறுபாட்டுடன் கூடிய உயிரினங்களை அன்றாடம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் என்ன? ஒரு வினாடி நின்று நிதானித்து இந்த வேறுபாடுகளின் இடையே உள்ள ஒற்றுமைபற்றி நாம் சிந்தித்தது உண்டா? இங்கு ஒற்றுமை என்று கூறுவது இன ஒற்றுமையைக் குறிக்கவில்லை. ஒற்றுமை என்று கூறும் போது இந்த மாறுபட்ட உடல்களுக்குள் தங்கிவாழும் உயிர் இனத்தையே குறிப்பிடுகிறோம். உயிர்வாழும் விலங்கு, பறவை முதலியன இனங்களின் உடல் அமைப்பில் வேறுபாடு இருப்பினும் அவற்றை ஒவ்வோர் இனமாகப் பிரித்துவிடுகிறோம் அல்லவா? பறப்பதில் தன்னிகரற்ற கழுகு, கருடன் போன்றவற்றைப் பறவைகள் என்று கூறுவதுடன் பறக்கவே முடியாத கோழி, நெருப்புக் கோழி முதலியனவும் பறவை இனம் என்றே குறிக்கப்படுகின்றன.

பறப்பதும், முட்டை இட்டுக் குஞ்சு பொறிப்பதும் பறவை இனத்திற்குப் பொது இயல்பு என்று கூறுகிறோம். ஆனால் பறக்க முடியாத நெருப்புக் கோழியும் முட்டையிடாமல் குட்டிபோடும் வௌவாலும் பறவை இனம் என்றே கூறப்படுகின்றன.

இவ்வளவு வேறுபாடுகளைப் பார்த்தும் இவற்றை ஓர் இனம் என்று கூறுகின்ற விஞ்ஞானம் இந்த உடம்பினுள் இருக்கும் உயிர் பற்றி ஒன்றுங் கூறுவதில்லை. காரணம் விஞ்ஞானத்தின் சோதனைக் குழாயினுள் உயிர் அகப்படுவதில்லை. இவ்வளவு மாறுபட்ட உடம்புகள் மரியாதை, வாழ்வு எல்லாம். உயிர்
பிhpந்துவிட்டால் உடம்புக்குப் பெயர் பிணம்.

உயிர்த் துடிப்புடன் இருக்கும் எந்த உடம்பும் ஒரு விநாடிக்கூடச் சும்மா இருப்பதில்லையே! மூச்சை உள்ளுக்கு இழுத்து வெளியேவிடும் தன்னிச்சைச் செயலிலிருந்து கை கால்களை அசைத்தல்வரை உடம்பு செயல்படுகிறது. அடுத்து ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லும் (LOCOMOTION) செயல் நடைபெறுகிறது.

உயிர் தனியே இருக்கும்பொழுது இச்செயல்களைச் செய்வதாகத் தெரியவில்லை. காரணம் அசைப்பதற்கு அந்த உயிருக்கென்று எந்த உடம்பும் இல்லை. தனியே கிடக்கும் உடம்புக்கு (பிணம்) அசைவே இல்லை. என்றால் இந்த உயிரும் உடம்பும் சேரும்பொழுது மட்டும் இந்தச் செயல்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

ஆறு அறிவு படைத்த மனிதன், விலங்குகள் செய்யும் இச் செயல்கள் தவிர சிந்திக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளான். விலங்குகட்கு ஆராயும் அறிவு இல்லை. அதனை அதிகமாகப் பெற்றிருத்தலின் மனிதன்மட்டும் ‘‘நான்யார்? நினைக்கின்ற செயல் எங்கே நிகழ்கின்றது? மனம், உள்ளம் முதலியவை எங்கே உள்ளன?” என்ற ஆராய்ச்சியில் இறங்குகிறாள். ‘‘நான் கட்டைபோல உறங்கினேன்” என்று கூறும் பொழுதும், ‘‘நான்யார்” என்று கேட்கும் நான் யார்? இந்த உடம்பா மூச்சுக் காற்றா? என்று ஆராயும்பொழுதும் ஒன்றை அறியலாம். கட்டைபோல உறங்குவதை ஏதோ ஒன்று உறங்காமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நான்யார் என்ற ஆராய்ச்சி செய்யுமாறு தூண்டிவிட்டு அதன்பின்னர் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒன்றைத் தூண்டிவிட்டு அதன்பின்னர் ஒன்று பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒன்றைத் தூண்டிவிட்டு இவ்வித ஆராய்ச்சியில் இறங்குமாறு செய்வது எதுவோ? ஓய்ந்து கிடக்கும் உறுப்புக்களைத் தொழிற்படுமாறு செய்வது எதுவோ? அணுவினுள்ளும்,
அண்டத்தினுள்ளும் பேராற்றலாய் அதனுள்ளேயே ஒளிந்து நிற்பது எதுவோ அதுவே சக்தி எனப்படும்.

இந்தச் சக்தியின் உதவியும் அருளும் இல்லையானால் அண்ட, பிண்ட, சராசரம் அனைத்தும் ஒரே வினாடியில் அசைவற்று தின்று நசித்துப்போகும். எந்த ஒன்றும் நிலைக்க வேண்டுமானால் அந்தப் பொருள் இயங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும். இயக்கம் நின்றால் எஞ்சுவது அழிவுதான். சிறியதுன் சிறியதாகிய அணுவினுள் மிகப்பெரிய இயக்கம் இருக்கிறது. ஆகப் பெரிதாகிய இந்த அண்டத்திலும் (UNIVERSE) இயக்கம் இருந்து வருகிறது. எந்த ஒன்றும் சலிக்காமல் இருக்க முடியாது. அந்தச் சலிக்கும் செயலை, இயக்கத்தைத்தான் சக்தி என்று கூறுகிறோம். அணுவினுள் இருக்கும் சக்தியும் அண்டத்தை இயக்கும் சக்தியும் ஒன்றுதான். இந்தச் சக்தி உள்ளடங்கி நிற்கையில் அதனை அடங்கு ஆற்றல் (POTENTIAL EN ERGY) என்றும் வெளிப்பட்டுத் தொழிற்படுகையில் இயங்கும் ஆற்றல் (KINETIC ENERGY) என்று கூறுகிறோம்.

(வளரும்)

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி.

பக்கம்: 33-35.
விளக்கு -1 சுடர் 3 (1982).