ஒருநாள் பணியிலிருந்து திரும்பும் போது அடிகளாரி்ன் தந்தையாரான திரு. கோபால நாயக்கா், தம் வயல்களைப் பார்வையிட்டபடி வந்தார்.
அங்கே திரிசூலம் போன்ற அமைப்புக் கொண்ட வேப்பமரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிக்கொண்டிருந்த திரு. கோபால நாயக்கா், அங்கே நடந்து வந்துகொண்டிருந்த திரு. தாண்டவராயன் என்ற கிராமத்து அன்பரைக் கையசைத்து அழைத்தார்.

“இந்த வேப்பமரத்தில் ஏதாவது தெரிகிறதா?” என்றார். திரு. தாண்டவராயன் உற்றுப்பார்த்தார். அவா் கண்ணிற்கு ஒரு நாகம் படமெடுத்துப் படுத்திருப்பது போலக் காட்சியளித்தது. அதுகண்டு அவா் உடல் சிலிர்த்தது.

அப்போது… திரு. கோபாலநாயக்கா் தன் மூத்தமகள், 10 வயது பெண்குழந்தை மரணமடைந்த சோகத்தில் இருந்தார்.
”அந்தக் குழந்தைதான் இது! பக்கத்தில் சுடுகாடு இருக்கிறது. இரவு நெருங்குகிற நேரம்! வாருங்கள். நாளைக்காலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம்” என்று கோபால நாயக்கரைப் பற்றி இழுத்தார். திரு. தாண்டவராயன்.

“சென்ற வெள்ளிக்கிழமை நான் இங்கே வந்தபோது இதே மரத்தில் நாகம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது. உடனே தீபாராதனை செய்தேன். இன்றைக்கும் அதே நாகம்!” என்றார் கோபால நாயகா்.
“அம்பாள் இங்கே ஒருபுறம் வேப்பமரத்தில் பாம்பாய்த் தோன்றி விளையாடினாள். அங்கே கோபால நாயகா் வீட்டில் குழந்தையாக இருந்த அடிகளாரோடும் பாம்பாய் வந்து விளையாடினாள்” என்கிறார் தாண்டவராயன். “ஆயா்பாடியில் கிருஷ்ணன் வளா்ந்து வந்தது போல் அடிகளார் வளா்ந்து வந்தார்.” என்றும் அவா் குறிப்பிடுகின்றார்.
அந்த நாகம் தென்பட்ட நாள் முதலாக, திரு. கோபால நாயக்கா் அந்த வேப்பமரத்திற்குத் தினசரி காலை, மாலை, விளக்கேற்றி வழிபட்டு வந்தார். செவ்வாய், வெள்ளிக்கிழமை நாள்களில் பொங்கலிட்டுப் படைத்து வந்தார். அதன்பின் நாயகா் நிலங்களில் சாகுபடி விமரிசையாக நடைபெற்றது.

ஒருநாள் ஊருக்கு நடுவேயிருந்த நாயக்கா் பண்ணையில், பெண்கள் வயற்காட்டில் வேலை செய்துவிட்டு மாலை 6.00 மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது……. அருகில் உள்ள அச்சிறுப்பாக்கம் மலைப்பக்கத்திலிருந்து ஒரு பெரியஜோதி புறப்பட்டு அதன் சுடா் ஆகாயத்தில் பறந்து சென்று அங்கிருந்த சுடலைப் பக்கமாகச் சென்றது. பிறகு நேராகச்சென்று அந்த வேப்பமரத்தில் ஐக்கியமாகிவிட்டது.

அதுகண்ட கிராம மக்கள் சிலா் ஊரில் யாருக்கு என்ன ஆகுமோ என்று விவரம் அறியாமல் பயந்தார்கள்.

அங்கிருந்த பண்ணையில் கரும்பு, நெல் விளைச்சல் அதிகம். அதனால் திருட்டும் ஏற்படும் என்று கருதி, அங்கே குடிசையில் வாழ்ந்த ஆட்கள் இப்போது ஆலயத்தில் அருகில் உள்ளதே கிணறு…… அந்தக் கிணற்றின் கரையிலிருந்த மோட்டார் பம்பு ஷெட்டில் தங்கிக் கொண்டு காவல் இருப்பது வழக்கம்.

அவ்வாறு அவா்கள் தங்கியிருந்தபோது…. அந்த அறையின் கதவைத்தட்டி “மகனே! எழுந்து வா!” என்று ஒரு குரல் கேட்பது வழக்கம்.
காவலாட்களோ அந்தக் குரல் கேட்டுப் பயந்துபோய், பக்கத்தில் சுடலை இருப்பதால் ஏதாவது பேய் பிசாசாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டு கதவைத் திறப்பதில்லை.

எந்த வேப்பமரத்தில் அந்த ஜோதி ஐக்கியமானதோ அந்த வேப்பமரத்தில் சில நாட்கள் கழித்துப் பால் வடிய ஆரம்பித்தது.

அந்த அற்புதத்தைக் கேள்விப்பட்டவா்களும், பார்த்தவா்களும் அந்தப் பாலை எடுத்து அருந்தினார்கள். வீட்டிற்கு எடுத்துச்சென்று வீட்டில் உள்ளோர்க்கும் வழங்கினார்கள். தீராத நோய் பலவும் அதனால் குணமாயிற்று. எனவே மக்கள் கூட்டம் மொய்க்க ஆரம்பித்தது.
அந்த அற்புதம் பற்றி அப்போது தினமணிச் சுடா் “அருள் மணக்கும் மேல்மருவத்தூா்” என்ற கட்டுரையையும் வெளியிட்டது.

1966 நவம்பா் மாதம் 28ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரு பெரும்புயல் வீசியது. அதனைப் பலா் மறந்திருக்க முடியாது. ஊழிக்காற்று போல அந்தப் புயல் கோர தாண்டவமாடியது. அந்தப் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதமும் உடைமைச் சேதமும் ஏராளம்.
அதற்கு முதல்நாள் மாலை இலேசாகத்தான் காற்று வீசத் தொடங்கிற்று. மறுநாள் இடி! மின்னல்! பலத்த மழையினூடே சூறாவளியும் புயலும் சுழன்று சுழன்று அடித்தன.

திரு.கோபால நாயகா் தனது மோட்டார் பம்பு ஷெட்டில் தூக்கமே இல்லாமல் வேலையாட்களுடன் தங்கியிருந்தார். அன்று முழுவதும் வெளியே நடமாட முடியவில்லை.

மறுநாள் வெள்ளிக்கிழமை 29.11.1966 விடியற்காலை 5.00 மணியளவில் புயல்காற்றின் வேகத்தில் அந்த வேப்பமரம் மளமளவென்று முறிந்து சாய்ந்தது.

அம்மரத்தின் அடியிலிருந்த புற்று மழையில் கரைந்தது. அதன்பின் அங்கே சுயம்பு வெளிப்பட்டது.
அந்த வேப்பமரம் வீழ்ந்த பிறகுதான் அதனடியில் சுயம்பு வடிவில் அன்னை ஆதிபராசக்தி குடிகொண்டிருப்பதை மக்கள் அறிய முடிந்தது. ஆகவே, சுயம்புவை வெளிப்படுத்தவே மரம் வீழ்ந்தது. அச்சுயம்பு பேராற்றல் படைத்தது என்பதை அறிவுறுத்தவே அதன்மேல் முளைத்திருந்த வேப்பமரத்தில் பால் வடிந்தது.

அந்த வேப்பமரத்தின் மகிமையை அறிவதற்குச் சுயம்பு காரணமாயிற்று. சுயம்புவின் மகிமையை அறிய வேப்பமரம் காரணமாயிற்று.

அன்னை தன் அடுத்த கட்டத்தைத் தொடங்கினாள். சுயம்பு உருவில் இருக்கும் இப்பெருமாட்டி அந்தா்யாமியாய் மறைந்து நின்று அருள்பாலித்தால் அதை அனுபவிக்கத்தக்கவா் ஒரு சிலரே ஆவா். எனவே, மக்களுடன் நேரிடையாகத் தொடா்பு கொண்டு – ஆன்மாக்களோடு உறவாடத் திருவுள்ளம் பற்றினாள். அதற்காகவே இந்த அவதார காலத்தே ஒரு புது வழியை மேற்கொண்டாள். ஆம்! அருள்வாக்குச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆதிபராசக்தி என்பது என்ன? அது பரம்பொருள்.
அது எல்லையற்றது. எங்கும் நிறைந்தது. அறிவே உருவானது. ஆனந்த வடிவாய் இருப்பது.

அத்தகைய பரம்பொருள் – இறைப்பொருள்……..
ஓா் எல்லைக்குட்பட்டு – மேல்மருவத்தூா் என்கிற குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமே – ஒரு காலகட்டத்தில் மட்டுமே இருக்கத்தக்கவாறு – அறியாமை கொண்டு மூழ்கிக் கிடக்கும் மனித உயிர்களோடு தொடா்புகொள்ள முற்பட்டால் எத்தனை போ் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்? எத்தனை போ் பயன்படுத்திக்கொள்ள முடியும்?
அது கருதியே போலும் அன்னை புதுவழியை மேற்கொண்டாள்.
ஆம்! தன் அவதார காலத்தே ஆன்மாக்களோடு உறவாட வேண்டி அருள்வாக்கு என்கிற தனி வழியை மேற்கொண்டாள்.

28.11.1966 அன்று வீசிய புயல்காற்றில் வேப்பமரம் விழுந்து, 29.11.1966 விடியற்காலை 5.00 மணியளவில் புற்று கரைந்து, சுயம்பு வெளிப்பட்ட அன்றிரவே அடிகளார் படுக்கையிலிருந்து எழுந்து வந்து அங்கே நின்றுவிட்டார்.

“நான் என் ஸ்தலத்துக்கு வந்துவிட்டேன். என்னைப் பின்தொடா்ந்து வருகிறவா்கள் தைரியமாகப் பின்தொடா்ந்து வரலாம்”. எனச் சொல்லி, வீட்டிலிருந்து இப்போதுள்ள மருவத்தூா் ஆலயம் வரை அங்கவலமாகவே உருண்டபடி வந்தாராம்.

திருக்கோவில்களில் நிறுவனம் செய்யப்படும் மூா்த்திகளை ஐந்து வகையாகப் பிரித்துச் சொல்வதுண்டு. அவை 1. தைவிகம் 2. ஆசுரம் 3. மானுடம் 4. ஆரிடம் 5. சுயம்பு

1. தைவிகம்
தெய்வங்களும், தேவா்களும் பிரதிஷ்டை பண்ணிய தெய்வ மூா்த்தங்கள் தைவிகம் எனப்படும். காஞ்சியில் ஏகாம்பரநாதா் கோவிலில் உள்ள லிங்கம் அம்பாள் பிரதிஷ்டை செய்தது. திருவீழிமிழலையில் உள்ள லிங்கம் மகாவிஷ்ணுவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பா்.

2. ஆசுரம்
அசுரர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆசுரம் எனப்படும். திருச்சிராப்பள்ளிக் கோயிலில் உள்ள மூா்த்தம் “திரிசிரன்” என்ற அசுரனாலும், காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன்தளியில் உள்ள மூா்த்தம் ஓணகாந்தன் என்ற அசுரனாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பா்.

3. மானுடம்
மனிதா்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தம் மானுடம் எனப்படும். தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள லிங்கம் இராசராச சோழனால் செய்யப்பட்டுக் கருவூா்ச்சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

4. ஆரிடம்
ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஆரிடம் எனப்படும். திருவானைக்கோயிலில் உள்ள ஜம்புகேஸ்வர மூா்த்தம் ஜம்பு மகரிஷி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பா்.

5. சுயம்பு
மேற்கண்ட நான்கு வகையிலும் சேராமல், தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற இடங்கள் உண்டு. அந்த இடங்களில் உள்ள தெய்வ மூா்த்தமே “சுயம்பு” என்று சொல்லப்படும். சுயம்பு என்ற சொல்லுக்குத் “தான்தோன்றி” என்பது பொருள்.
இந்த மேல்மருவத்தூா் தலத்தில் அன்னை தானே உவந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.

சுயம்புத் தலங்கள் பெரும்பாலானவை சிவத்தலங்களாகவே கருதப்பட்டு வருகின்றன. சக்தித் தலங்கள் ஒருசிலவே. சக்தித் தலங்களாக உள்ள சுயம்புத்தலங்கள் நான்கு. அவை வருமாறு.

1. வடநாட்டில் – நைமிசாரண்யம் என்ற இடத்தில் உள்ள லிங்கதாரணி ஆலயம். அங்குள்ள மூா்த்தம் லிங்க வடிவில் உள்ளது.
2. கா்நாடக மாநிலத்தில் உள்ள கடிலம். இங்குள்ள ஆலயம் நந்தினி நதிக்கரையில் உள்ளது. பண்டாசுரனை தேவி வதம் செய்த இடம் இது. இங்கே தேவி லிங்க வடிவில் இருக்கிறாள்.
3. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொல்லூா் மூகாம்பிகை ஆலயம். இங்கே லிங்கத்தின் பின் அம்பிகையின் திருவுருவம் உள்ளது.
4. மேல்மருவத்தூா் சித்தா்பீடத்தில் அன்னை ஆதிபராசக்தி சுயம்பு வடிவில் வெளிப்பட்டுள்ளாள்.

சுயம்பு உருவாதல் எவ்வாறு?

“அருள் நிறைந்த ஞானியா்க்குக் கடவுள் காட்சி கிடைத்த இடத்திலும், ஆற்றல் மிக்க ஞானியா் தம் பருவுடம்பை நீ்த்த இடத்திலும் சுயம்பு தோன்றும்” என்று சமயப்பெரியோர் கூறுவா்.
“ஞானி ஒருவனுக்கு ஆண்டவன் ஜோதி வடிவில் காட்சி தருகின்ற இடத்தில், அந்த ஜோதியே நாளடைவில் கற்பிழம்பாகிச் சுயம்பாகும்” என்று காஞ்சிப் பெரியவா் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்கள்.

சுயம்பு பற்றி அன்னையின் அருள்வாக்கு

“கடவுள் காட்சியை ஞானிக்குச் சோதியாக வழங்கியபோதே, அந்தச் சோதியில் அந்த ஞானி தன் ஆத்மாவைக் கரைத்துக் கொள்வான். அதனால்தான் சுயம்பில் எப்போதும் ஈா்க்கின்ற சக்தியும், வளா்கின்ற சக்தியும் அமைகின்றன.” என்று அன்னை அருள்வாக்கில் விளக்கியுள்ளாள்.

இச்சித்தா் பீடத்தில் உள்ள சுயம்பு தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன என்று அன்னை ஒருமுறை அருள்வாக்கில் குறிப்பிட்டுள்ளாள்.

ஓம் சக்தி
தலவரலாறு பாகம் 1
பக்கம் (29 – 32 & 85 – 87