நமது மனம் அடிக்கடி சலனங்களுக்கும் சபலங்களுக்கும் ஆட்படுகிறதே… இவற்றைத் தவிர்க்க என்ன வழி?

மனதில் ஏற்படும் ஒவ்வோர் எண்ண அலையும் அது மறைவதற்கு முன் அதன் விளைவாக சமஸ்காரத்தை ( மனப்பதிவை) மனதில் விட்டு வைக்கிறது. இத்தகைய பதிவுகளின் கூட்டுத் தொகையே நமது குணம் ஆகும்.

எந்த அலை அதிகமோ அந்தக் குணம் நிலைப் பெறும்.

நல்ல பதிவை அதிகம் கொள்கிறவன் நல்லவன் ஆகிறான்.
தீய பதிவை அதிகம் கொள்கிறவன் தீயவன் ஆகிறான்.
மகிழ்ச்சியான பதிவுகளைப் பெறுகிறவன் ஆனந்தம் பெறுகிறான்.

தீய பழக்கங்களை நீக்குவதற்கு ஒரே வழி நல்ல பழக்கங்களை இடைவிடாது பழகி வருதலே.

அவ்வாறு செய்தால் தீய பழக்கங்களால் ஏற்பட்ட தீய பதிவுகள் நல்ல பழக்கங்களால் அடக்கப்பட்டு மாற்றப்படும்.

தியானத்தின் போதும், இடைவிடாத மந்திர ஜெபத்தின் போதும் நம் உள்ளிருந்து எவ்வளவுக்கெவ்வளவு அருவெறுப்பான எண்ணங்கள், தீய எண்ணங்கள் பொங்கி வருகின்றன என்பதை நமக்குள் நாமே அனுபவித்து உணரலாம். முற்பிறவி வாசனைகள் என்பவை இவைதான்.

இரமணர் ஒரு புதுவழியைச் சொல்லிக் கொடுக்கிறார்.

எந்த எண்ணமும் புறப்படுகிற போதே தொடக்க நிலையில் உற்று கவனி!

இந்த எண்ணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? இதன் மூலம் என்ன? நான் யார் ?
என்று கேள்வி மேல் கேள்வி போட்டுச் சிந்தித்து வா!

எண்ணங்களின் மூலஸ்தானம் இதயம். காலப்போக்கில் மனம் நசிவதற்கு இது ஒரு வழி என்றார்.

தினம் காலை, மாலை இரண்டு வேளை தியானம் செய்! மனத்தை அதன் போக்கிலே போகும்படி விட்டு விடு! அடக்க நினைக்காதே! படிப்படியாக உன் மனம் ஒடுங்கும்.
என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.

தியானமும் செய்ய சக்தி இல்லையே என்று புலம்புகி்றவர்கள் இருக்கிறார்கள்.இவர்கள் தொண்டினை அதிகப்படுத்திக் கொண்டு அன்னை ஆதிபராசக்தியிடம் உறுதியான பக்தி செலுத்தி வந்தால் நன்மை உண்டு. விரதக் கட்டுப்பாடுகளும் தேவை.

அரசியல், சினிமா, நாவல், பத்திரிக்கைகள், பெண்கள் கூட்டம், தீய நண்பர்கள் சேர்க்கை, ஆடம்பர வேட்கை, என்பன காசு ஆசையையும், காம எண்ணத்தையும் தூண்டி சலனத்தையும், சபலத்தையும் வளர்ப்பன.

எனவே இந்தச் சூழல்களைத் தவிர்ப்பது முக்கியம்.

இன்றைய நிலையில் இவை சாத்தியமா? எனக் கேட்பீர்கள்?

திருவருள், குருவருள், தெய்வபலம்,ஆன்ம முன்னேற்றம் என்ற நிலையான, உறுதியான நன்மைகள் தேவையென்றால் சில அற்ப சந்தோஷங்களைத் தியாகம் செய்யத் தான் வேண்டும்.

கூடுமானவரைத் தனிமையில் இருந்து கொண்டு நம்மை நாமே சுய சோதனை கொண்டு நம் மனத்தையும் அதிலிருந்து எழுகின்ற எண்ண அலைகளையும் ஒரு அந்நியனாக இருந்து கொண்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும்.

ஒன்றை அடிக்கடி நினைத்துப் பழகிக் கொள்ள வேண்டும்.
அன்னை ஆதிபராசக்தி(ஆன்மிககுருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) மேல்மருவத்தூரில் மட்டும் நடமாடிக் கொண்டு இருக்கவில்லை.
நம் ஒவ்வொருவர் உள்ளேயும் ஆன்மாவாகக் குடிகொண்டு நம் எண்ணங்களை உற்றுக் கவனித்தபடி இருக்கிறாள். என்பதை எண்ணிப் பழகினால் போதும்.

அதையும் மீறிக்கொண்டு பொல்லாத எண்ணங்கள் பொங்கி வந்தால் என்ன செய்வது?

தாயே! எனக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணங்களெல்லாம் வருகின்றன? இவற்றை மாற்றக் கூடாதா?
உன்னை விட்டு என் மனம் விலகிப் போகிறதே என்ன செய்வேன்? என்று அழுது மன்றாடி மானசீகமாக – ஆத்மார்த்தமாக கேட்டால் அன்னை ஆதிபராசக்தி உங்கள் மனதை மாற்றுவாள்.

இது தான் வழி!

நன்றி சக்திஒளி செப் 92.