ஞானம் என்றால் மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடியே அறிவது ஆகும். ஞானம் என்பதற்கு “வீடு பயக்கும் உணர்வு” என்கிறார் பரிமேலழகர்.

*கடவுளைப் பற்றிக் கொண்டு இந்தப் பிறவியோடு நம் கணக்கை முடித்துக் கொள்ள வேண்டும். முக்தி பெற வேண்டும். ஆன்ம விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வு யாருக்கு வருகிறதோ அந்த உணர்வே ஞானம் எனக் கூறப்படுகிறது.*

இந்த ஞானம் வரவேண்டுமானால் வழி என்ன? உண்மை உணர்கின்ற நாட்டம் வரவேண்டும்.

*எது உண்மை? எது பொய்?*

*எது நிலையான இன்பம்?*

*எது நிலையற்ற இன்பம்?*

*நமக்கு நிரந்தரமான துணை எது?*

*தற்காலிகத் துணை எது?*

*எது உண்மை அறிவு?*

*எது போலியான அறிவு?*

என்று பிரித்துப் பார்க்கிற உணர்ச்சி வேண்டும். இதனையே “மெய் உணர்தல்; மெய்ப்பொருள் அறிதல்” என்பார்கள். தத்துவ ஞானம் என்பார்கள். இது தான் உண்மையான பகுத்தறிவு.

அந்தத் தத்துவ ஞானம் இருவகை:

1. ஒருவன் தன்னை அறியும் ஞானம் ஆத்மஞானம் எனப்படும்.
2. தன் தலைவனை அறியும் ஞானம் பிரும்ம ஞானம் எனப்படும்.

*இந்த இரண்டும் புத்தக அறிவால் பெறத்தக்கவை அல்ல. சுயமாக உணரத்தக்கன. அவ்வாறு சுயமாக உணர்வதற்குக் குருவின் துணை தேவை.*

தன்னை அறியும் ஆத்ம ஞானம்……

மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளாத காரணத்தால் தான் அல்லல்படுகின்றான். அவன் தன்னைத் தானே அறிந்து கொண்டால் துன்பம் இல்லை.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்” என்கிறார் திருமூலர்.

*தன்னை அறிவது என்றால் என்ன?*
—————————————-

“நமக்குள்ளே ஒளிப்பொருளாக ஆன்மா உள்ளது. அது என்றும் இருப்பது. ஆனந்தமயமாக உள்ளது. பேரறிவுப் பொருளாக இருப்பது. அது கடவுளின் கூறாக இருப்பது.

உள்ளே கிடக்கிற அந்த ஒளிப்பொருளை – சோதியை அறிந்தால் நாமும் என்றென்றும் கவலையில்லாமல் ஆனந்தமயமாய் இருக்கலாம். அந்த அறிவு இல்லாததால் உடம்பையே நாம் என்று கருதுகிறோம். மனமே நாம் என்று கருதுகிறோம். உண்மையில் இந்த உடம்பும், மனமும் நாமல்ல. அவை நம் ஆத்மாவுக்கு வெறும் கருவிகளே!

பொன் ஆபரணங்களை ஆபரணங்களாகப் பார்க்கிற போது அவற்றின் அழகிலும், நேர்த்தியிலும் மனத்தைப் பறிகொடுக்கிறோம். அப்போது அவை பொன் என்ற உணர்ச்சியே வருவதில்லை. அவற்றைப் பொன்னாகவே பார்க்கிற போது அவை ஆபரணம் என்ற உணர்ச்சி வருவதில்லை. அதுபோல ஒருவன் தன்னை உடம்பாகவும், மனமாகவும் கருதும்போது தன் இயல்பு புலப்படுவது இல்லை. தன் இயல்பு புலப்படும் போது உடம்பும், மனமும் மறந்துவிடுகின்றன” என்கிறார் திருமூலர்.

தலைவனை உணரும் பிரும்ம ஞானம்
——————————————–

தன்னை உணர்ந்த பின் தலைவனை உணரும் ஞானம் பிரும்ம ஞானம் எனப்படும். மரத்தால் செய்யப்பட்ட யானைப் பொம்மையைப் பார்க்கிறோம். அதனை யானையாகவே பார்க்கிற போது அது யானை என்ற உணார்வு போய்விடுகிறது. அதுபோல மனிதன் உலகப் பொருள்களின் கவர்ச்சிகளில் சிக்குண்டு கிடப்பதால் இறைஞானம் வருவதில்லை. இறைஞானம் வந்தவர்களுக்கு உலகப் பொருள்களின் கவர்ச்சி வருவதில்லை என்கிறார் திருமூலர்.

*தன்னை அறியும் ஆத்ம ஞானமும் இறைவனை அடைகின்ற பிரும்ம ஞானமும் ஆகிய இரண்டையும் பெற விரும்புகிற ஒருவன் ஒரு குருவைத் தேடிச் சரண் அடைய வேண்டும். குரு உபதேசம் பெறவேண்டும். தவம், ஜெபம், தியானம், யோகம் முதலிய ஆன்மிகப் பயிற்சிகளைப் பெறவேண்டும். இவற்றுக்கெல்லாம் குருவின் துணை இன்றியமையாதது. ஆதலில் மெய்ப்பொருள் அறிந்த ஞான முதிர்ச்சியும், உள்ளொளியும் பெற்ற ஒரு குருவின் துணையில்லாமல் உலக ரகசியங்களை அறிய முடியாது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.*

மேல்மருவத்தூர் அன்னையின் அற்புதங்கள்
பக்கம் (360 – 362)