மேல்மருவத்தூர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனதலைவர் அர்ஜூன்சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் தேதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமாவாசை வேள்வி நடந்து கொண்டிருக்கும் போது, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் என சொல்லிக்கொண்ட சிலர் ஆய்வு செய்வதாக கூறி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட பக்தர்களிடம் கடும் கொந்தளிப்பையும் மனவேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு இந்து அமைப்புகள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்து மக்கள் கட்சி நிறுவனதலைவர் அர்ஜூன்சம்பத் இது குறித்து கூறுகையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமாக தமிழகத்தில் 40 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இதில் பல கோவில்களில் அடிப்படை வசதிகள், விளக்கு வசதிகள் இல்லை. அறநிலையத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் இப்போது வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதை மீட்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. நலிந்த கோவில்களில் பூஜைகள் செய்ய வருமானம் உள்ள கோவில்களில் இருந்து பணம் எடுத்து பூஜை செய்ய இந்து அறநிலையத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

வேலூர் பொற்கோவில், திருமலைதிருப்பதி தேவஸ்தானம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஆகியவை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் சிறப்பாக இயங்கி வருகிறது. இது போல் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்தனர். ஆனால் சுப்பிரமணியன்சுவாமி உச்சநீதிமன்றம் சென்ற வாதாடி அறங்காவலர்களே கோவில்களை நடத்தலாம் என்ற தீர்ப்பை பெற்று தந்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் எவ்வித ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றாக பாவித்து, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரே தாய், ஒரே குலம் என்ற கோட்பாட்டுடன் இயங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் நல்ல நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கோவில் மட்டும் இல்லையென்றால் பல பேர் மதம் மாறியிருப்பார்கள்.

அங்கு கல்வி மட்டுமின்றி அனைவருக்கும் அன்னதானம், கல்வி மற்றும் மருத்துவசேவை ஆகியவை இன்றளவும் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. மேல்மருவத்தூர் கோவிலில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததற்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறோம். இது போல் தொடர்ந்து நெருக்கடி அளித்தால் தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.