அன்னை தனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று அங்கலாய்க்கின்றவர்கள் வியாபார நோக்கத்தில் தான் இவ்வாறு பேசுகிறார்கள்.

*” நான் இவ்வளவு செலவு செய்து அபிடேகம் செய்தேன், இவ்வளவு செலவு செய்து இந்த திருப்பணியை செய்து முடித்தேன் ஆனாலும் தாய் என்னைக் கண் திறந்து பார்க்கவில்லையே”* என்று கூறுகின்றவர்கள் இன்னும் நிரம்ப உண்டு. இதுதான் வியாபாரம் எனப்படும். அன்னை கண் திறந்து பார்க்கவில்லை என்று எப்படி இவர்கள் கண்டார்கள்?

அவள் பாராதிருந்தால் இன்று இவர்கள் உயிருடன் இருந்திருக்க கூட முடியாமல் போயிருக்கலாம். அந்த நுணுக்கத்தை அவர்களால் அறிய முடியவில்லை. அறிய முடியாமல் போனது கூட பெரியது இல்லை. தவறாகவும் அன்னையைக் குறை கூறுகிறார்கள்.

*உனக்கு உன் தொழில் பெரிது ; எனக்கு உன் உயிர் பெரிது*

ஓர் அன்பர் அன்னையிடம் வந்து, தாயே! மிகப்பெரிய என் தொழில் மூன்று மாதமாக படுத்துவிட்டது. மிகவும் கஷ்டப்படுகிறேன். எப்படியாவது என் தொழிலை கை தூக்கி விடவேண்டும் என்று வேண்டுகிறார். அவர் தமிழ் மொழியை நன்கு புரிந்து கொள்ள முடியாதவர்.

எனவே, அன்னை கோவில் தொண்டர் ஒருவரை உடன் வைத்துக்கொண்டு, அவரை நோக்கி *”மகனே! உனக்கு உன் தொழில் தான் பெரியதாகப் படுகிறது. எனக்கு நீதான் பெரிதாக படுகிறாய். இன்னும் மூன்று மாதங்களுக்கு உன் உயிரை காப்பதுதான் எனக்கு பெரிய வேலை. வாகனங்களில் செல்லும்போது மிக வேகமாகப் போகாதே”* என்று கூறுகிறாள்.

எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அந்த அன்பர் புரிந்து கொள்ள மறுக்கிறார்.

“என் உயிரும் உடம்பும் நன்றாகத்தான் இருக்கின்றன. இவற்றை என்ன காப்பாற்றுவது? என் தொழிலை அல்லவா கைதூக்கி விட வேண்டும்? என்று அதையே திரும்பத் திரும்ப பேசுகின்றார்.
இப்படித்தான் எமது அறியாமை உள்ளது.