மேல்மருவத்தூரில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விசேட தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில். ஆங்கிலப்புத்தாண்டு (2009) விழா இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றன.



இந்த வைபவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தும், ஆன்மீக குரு பங்காரு அடிகளாரிடம் ஆசியும் பெற்றனர். டிசம்பர் 31 ஆம் திகதியன்று விடியற்காலை 3மணியளவில் மங்கள இசையுடன் புத்தாண்டு  விழா தொடங்கியது. 4மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. 

அன்று மாலை 4மணியளவில் கருவறையில் முன்பாக நடைபெற்ற கலச, விளக்கு, வேள்வி பூசையை லெட்சுமி பங்காரு அடிகளார் தொடக்கி வைத்தார்கள். இரவு 8 மணியளவில் “யட்சகானம்’ எனும் கர்நாடக மாநிலத்தில் பராம்பரிய இசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கருவறையில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அந்த தருணத்தில் தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.. அதனைத் தொடர்ந்து சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். பின்பு 8 மணிக்கு சிறப்பு அன்னதானம் தொடங்கியது. அன்று மதியம் 12 மணியளவில் சித்தர் பீடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த மேடையில், பங்காரு அடிகளார் முன்னிலையில் புத்தாண்டு விசேட நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த விழாவிற்கு இந்திய பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய மத்திய அமைச்சருமான அனந்தகுமார் தலைமை வகித்தார்.

மேலும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான சங்கமேஸ்வர், ராமலிங்க ரெட்டி, பி.என்.விஜயகுமார். நரேந்திரபாபு உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பெற்றனர். அந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கணினிகள், மாவரைக்கும் இயந்திரங்கள், தையல் இயந்திரங்கள், வெல்டிங் கருவிகள், துளையிடும் கருவிகள், சக்கர நாற்காலிகள் மற்றும் 20 க்கும் மேற்பட்ட இதய நோயாளிகளுக்கு, இதய அறுவை சிகிச்சைக்கான உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆன்மீக குரு பங்காரு அடிகளார் வழங்கினார். விழாவின் நிறைவுரையாக லட்சுமி பங்காரு அடிகளாரின் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த புத்தாண்டு சிறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கமும், அதன் கர்நாடக மாநில ஆதிபராசக்தி மன்றங்களும் செய்து இருந்தன.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here