ஆன்மா என்ற ஒன்று உண்டு. எல்லா உயிரினங்களிலும் பரம்பொருள் ஆன்மா என்ற வடிவில் உறைகிறது.

எல்லா உயிர்களுமே ஆண்டவன் உறையும் கோயில்கள் என்கிறபோது, சாதியாலோ, குலத்தாலோ, இனத்தாலோ உயர்வு, தாழ்வு கற்பிக்கக் கூடாது.

உலகில் பிறந்த ஆன்மாக்கள் தத்தம் முந்தைய வினைகளுக்கு ஈடாகவே வந்து பிறந்து இன்ப, துன்ப அனுபவங்களைப் பெறுகின்றன. எனவே மற்ற உயிர்கட்குத் துன்பம் செய்யக் கூடாது.

தன் முன்னை வினை காரணமாக மனிதன் துன்புற்றாலும், அவன்பால் இரக்கம் காட்டி அவனுக்குத் தொண்டு செய்து உதவ வேண்டும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

ஏழைகளுக்கு கொடுப்பது இறைவனுக்குப் போய் சேரும். இறைவனுக்குக் கொடுப்பது ஏழைகளுக்குச் சேராது. ஆகவே ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். தொண்டு செய்யுங்கள் என்று இயக்கம் வலியுறுத்துகிறது.

பக்தியும், தொண்டும் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் இரண்டு கண்கள்.

சித்தர்களின் கோட்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் நோக்கம். ஆன்மிகம் பற்றிய கருத்துகள் மலை போலக் குவிந்துள்ளன. அவற்றைப் படித்தும் பேசியும் மட்டும் பயன் என்ன? அவை செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார் அடிகளர். அடிகளார் பேசிச் சாதித்தவைகளை விடப் பேசாமலே சாதித்தவை எராளம் ஏராளம்.

உயிர் வாழ்க்கை போராட்டமானது தான். இந்த வாழ்க்கைப் போராட்டத்துக் கிடையில் இன்ப, துன்ப அனுபவங்களைப் பெறுகின்ற மனிதன், ஆன்ம விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்கு நாம் வந்து பிறந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவனவன் செயல்கட்கும், அவனவன் துன்பங்கட்கும் அவனவன் பொறுப்பாளி!

வாழ்வில் எதிர்ப்படும் துன்பங்களைக் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இவற்றின் துணையைக் கொண்டு தவிர்த்துக் கொள்ள முடியும் என்று ஆன்மீக நெறி அழுத்தம் திருத்தமாகவே சொல்கிறது.

ஆன்மாக்களின் அறிவும் பல வகை; அவற்றின் உணர்வும் பல வகை; எனவே அவரவர் சார்ந்துள்ள சமயங்கள் எவை எவையோ அவற்றினை உண்மையாக மேற்கொண்டு நடைமுறையில் தூய வாழ்வு வாழ வேண்டும் என்பதை இந்த இயக்கம் வலியுறுத்துகின்றது.

சமுதாயத்தில் பெருகி வரும் வன்முறைகள், சாதிச் சண்டைகள், மதச் சண்டைகள், அரசியல் கலவரங்கள், ஒழுக்கக் கேடுகள், ஊழல்கள், கிளர்ச்சிகள்- இவையெல்லாம் ஆன்மிக உணர்வு நலிவுற்றதால் வந்த விளைவுகள்.

இவற்றையெல்லாம் நீக்க வேண்டுமானால் எல்லாச் சமயங்களும், சமய நிறுவனங்களும் சமயம் என்ற வேலியைத் தாண்டி வந்து ஆன்மிகம் என்ற பெயரில் ஒன்றுபட வேண்டும் என்று கருதுகிறது.

ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சித்தர்களின் கொள்கைகளை நடைமுறைப் படுத்துகின்ற இயக்கம். சித்தர்கள் சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லாவற்றையும் கடந்தவர்கள். இந்த ஆன்மிக இயக்கமும் சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லைகளைக் கடந்தது.

எவ்வளவு காலம் இருப்போம் என்பது நிச்சயமில்லை. போவதற்கு முன் உன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்து விட்டுப் போ! அடிகளார் கூறும் எளிய போதனை.

ஒரு காலத்தில் வேதங்களை மறுப்பவன் நாத்திகன் எனப்பட்டான். அடுத்து வந்த காலத்தில் கடவுளை நம்பாதவன் நாத்திகன் எனப்பட்டான். இன்று பொது நல உணர்வே இல்லாத ஒவ்வொருவனும் நாத்திகனே என்கிறார் அடிகளார்.

மனித நேயம், ஆன்ம நேயம், என்ற இரண்டு உணர்வுகளை வளர்க்கவே தொண்டு நெறியைக் காட்டி வருகிறார் அடிகளார்.

ஓம் சக்தி

நன்றி

அவதார புருஷர் அடிகளார்

பாகம்-1

பக்கம் 25-27.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here