சென்னையைச் சேர்ந்த அன்பர் ஒருவர் அன்னையின் அற்புதங்களை மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டு மருவத்தூர் வந்தார்.அவருக்கு ஏராளமான பணம் இருந்தும் மனநிம்மதி மட்டுமில்லை.

அந்த அன்பர் சென்னையில் பிரபல சினிமா நடிகர் ஒருவர் வீட்டுக்கு எதிரே 12 லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு பங்களா வாங்கினார். அந்த வீட்டில் ஏற்கெனவே ஒருவர் வாடகைக்குக் குடியிருந்தார். அவரைக் காலி செய்து தரும்படி கேட்டார் . குடியிருந்தவர் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் தான் காலி செய்ய முடியும் என்று கூறிவிட்டார்.

அந்த அன்பருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சென்னையில் இத்தகைய சிக்கல்களைத் தீர்த்து வைக்கக் கட்டைப் பஞ்சாயத்து நடத்துகின்ற ரௌடிகள் இருக்கிறார்கள். அதற்கென ஒரு கமிஷன் தொகை கொடுத்துவிட்டால் போதும். அங்கெல்லாம் சென்று பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. வக்கீல் நோட்டீஸ் கொடுத்து நீதிமன்றம் மூலம் அணுகலாம் என்றால் இந்தக் காலத்தில் அவ்வளவு சுலபத்தில் வழக்குகள் முடிவதில்லை. கோர்ட் வாசலுக்கும் வீட்டிற்கும் நடையாக நடக்க வேண்டும். என்ன செய்வதென்று புரியாமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் அன்னையை பற்றி கேள்விப்பட்டு அருள்வாக்கு கேட்டார்.

அவரிடம் அன்னை, *மகனே! உன் மனத்தில் உள்ள குழப்பத்தை நீக்கு! நானே அந்தக் குடித்தனக்காரனை சில வாரங்களில் காலிபண்ணச் செய்கிறேன். நீதிமன்றத்திற்கு மட்டும் போகாதே! உத்தரவு* என்றாள்.

அந்த அன்பருக்கோ குழப்பமாக இருந்தது. வாடகை இருப்பவனோ மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் தான் காலி செய்வேன் என்கிறான். அன்னையோ நீதிமன்றம் போகாதே! என்கிறாள். இந்தச் சிக்கல் தீருவது எப்படி? இந்த நிலையில் மனக்குழப்பத்தை நீக்கு என்கிறாளே! முடியவில்லையே! என்று மேலும் குழம்பினார்.

அன்னை கூறியபடி இரண்டாவது வாரத்திலேயே அந்தக் குடித்தனக்காரர் வீட்டைக் காலி செய்து விட்டு வீட்டுச் சாவியை அந்த அன்பரிடம் கொடுத்துவிட்டு, வீட்டைக் காலி செய்துவிட்டேன் என்றுவிட்டு வேறு எந்த விபரமும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

அன்பருக்கு ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது. அவ்வளவு பிடிவாதமாக மறுத்தவன் எப்படி மனம் மாறினான்? போகிற போக்கில் வீட்டின் ஒருபுறத்தில் ஏதாவது இடித்துவிட்டுச் சென்றிருப்பானோ? அவசர அவசரமாக வீட்டாரைக் காரில் அழைத்துக் கொண்டு நேரில் போய் வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டைப் பார்த்தால் எல்லா அறைகளும் ஒழுங்காகவே இருந்தன.

அவர் அன்னையிடம் மீண்டும் அருள்வாக்கு கேட்கச் சென்றார்.

அன்னை, *என்ன மகனே! அவன் வீட்டைக் காலி செய்து விட்டானா? உன் குழப்பம் தீர்ந்ததா?* என்று கேட்டாள்.

அதற்கு அவர், ஆமாம் தாயே! காலி செய்துவிட்டான். அவன் எப்படிக் காலி செய்தான் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும்மா! என்றார்.

*உன் வீட்டின் பின்புறம் போய்ப்பார் மகனே! அதன்பிறகு விஷயம் புரியும்!* என்றாள் அன்னை.

அருள்வாக்கு கேட்டுவிட்டு கோயிலைச் சுற்றிவிட்டு குங்குமப் பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு நேரே அந்த வீட்டிற்குப் போய்ப் பார்த்தார். பின்புறம் சென்று பார்த்தபோது தான் விஷயம் புரிந்தது. அது அவரை பிரமிக்க வைத்தது.

அங்கே…
*இரண்டடி உயரத்திற்கு மேல் கம்பீரமாகப் புற்று ஒன்று உருவாகி இருந்தது.* திடீரெனப் புற்று உருவாகி, அங்கே நாகத்தையும் பார்த்த உடன் அங்கே குடியிருந்தவர்களுக்குப் பயம் வந்துவிட்டது. இடத்தை காலிசெய்து விடுவதுதான் நல்லது என்ற முடிவுடன் காலி செய்துவிட்டனர்.

மூன்று லட்சம் கொடுத்தால் தான் காலி பண்ண்ணுவேன் என்று அடாவடித்தனமாகப் பேசியவனுக்குப் பாடம் புகட்டினாள் அன்னை. தன் பக்தனுக்குப் பிரச்சனையைத் தீர்த்தாள் அன்னை.

நவம்பர் 97
சக்திஒளி