ஒரு நாள் நான் பணிபுரியும் பத்திரிகை அலுவலகத்திற்கு சக்தி. முருகானந்தம், சக்தி. ரமேஷ், சக்தி ரவி ஆகியோர் வந்தனா். அவா்களிடம் நானும் அம்மாவைத் தரிசிக்க வேண்டுமே என்றேன்.

தாராளமாக….. அழைத்துச் செல்கிறோம்
என்றார்கள். அம்மாவின் பிறந்த நாள் மார்ச் 3 ஆம் நாள் வருகிறது. அப்போது அம்மாவின் தரிசனம் பெறலாம் வாருங்கள்! என்றார்கள்.

மெய் சிலிர்த்தேன்

அந்த நாளும் வந்தது. நானும் செவ்வாடைத் தொண்டா்களுடன் அம்மாவைத் தரிசிக்கச் சென்றேன். வழி நெடுக செவ்வாடைத் தொண்டா்கள் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்ற முழக்கத்துடன் நடந்தே சென்றனா்.

இவா்களே தங்கள் உடலை வருத்தி ஓம் சக்தி முழக்கத்துடன் நடந்தே செல்கிறார்கள். நானோ காரில் செல்கிறேனே என்ற ஒரு மன உறுத்தலுடன் சென்றேன்.

மேல்மருவத்தூர் இறங்கியதும் பார்க்கிறேன். எங்கு பார்த்தாலும் செவ்வாடைத் தொண்டா்கள், குழந்தைகள், பெண்கள், வயோதிபா்கள், ஜீன்ஸ் பேண்ட் போட்டுக் கொண்டு வலம் வரும் வாலிபப் பட்டாளம் எல்லாம் செவ்வாடையுடன்…. சக்தி முழக்கத்துடன் நின்ற காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அம்மாவின் கருணை

நீண்ட கியூ…. இந்தக் கூட்டத்தில் நாம் எப்போது அம்மாவைத் தரிசிக்கப் போகிறோம் என்ற எண்ணத்திலேயே நின்று கொண்டு இருக்கிறேன்.

திடீரென்று… “பத்திரிகையாளா்கள் எல்லாம் வாருங்கள்!” என உள்ளே அழைத்துச் சென்றனா். “வரிசையாக நின்று அம்மாவின் ஆசி பெறுங்கள்!” என்றார்கள்.

என் முறை வந்தது….. நானும் அம்மாவின் அருட்பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

அம்மாவின் கருணைப் பார்வை என் மீது விழுந்தது. ஒரு செவ்வாடை எடுத்து எனக்குப் போர்த்தினார்கள்.

என் கண்களில் நீா்த் துளிகள்!

அம்மாவைத் தரிசிக்க முடியுமா….? என்று ஒரு காலத்தில் ஏக்கப் பெருமூச்சுடன் காலத்தைக் கழித்தேன். இப்போதோ….. மிக அருகாமையில் அம்மாவைத் தரிசிக்கும் பாக்கியம்
கிடைத்திருக்கிறது…..! அம்மாவின் திருக்கரங்களால் செவ்வாடை அணிவிக்கும் பாக்கியம் கிடைத்து விட்டது. இது கிடைத்தற்கரிய பேறு! என்று நான் கருதினேன்.

அன்று அம்மா மௌனம். சைகையினாலேயே சாப்பிட்டு விட்டுத்தான் செல்லவேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டார்கள்.

ஒரு பிள்ளைக்கு எந்த நேரத்தில் எது கொடுக்க வேண்டும் என்று அந்தத் தாய்க்குத்தான் தெரியும்?

அம்மா தந்த விருந்தை உண்டுவிட்டு அம்மாவைத் தரிசித்த மகிழ்ச்சியுடனே வீடு திரும்பினேன்.

இது என் முதல் தரிசனம்தான்! இதை அடுத்துப் பலமுறை அம்மாவைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மனைவி மறந்ததும், அம்மா நினைவூட்டியதும்

ஒரு முறை குடும்பத்தோடு அம்மாவைத் தரிசித்தேன். அம்மாவைத் தரிசித்ததும் என் துணைவியார் மெய்மறந்து விட்டார். அம்மாவிடம் என்ன கேட்க வேண்டும் என்று நினைத்தாரோ, அதை அம்மாவே அருள்வாக்காகச் சொன்னார்கள்.

“நீ இதற்காகத் தான் வந்திருக்கிறாய். உனக்குச் சில பரிகாரங்கள் செய்ய வேண்டும். சில வகைப் பூக்களைக் கொண்டு வா! பின்னா் நான் பரிகாரம் சொல்கிறேன்” என்றார்கள்.

அம்மா சொன்னபடி பூக்களைத் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. சரி! அம்மாவிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தபடியே ஒரு நண்பரைச் சந்தித்தோம். எங்கள் மனக்குறையை அவா்கள்தான் தீா்த்து வைத்தார்கள்.

கனவில் கூறுவேன்

எந்த மலா் கிடைக்வில்லை என்று மனவருத்தத்தோடு வந்தோமோ…… அந்த மலரைப் பெற அவா்கள் உடனடியாக ஏற்பாடு செய்தார்கள். இதுதான் தெய்வ கடாட்சம் என்பதோ…….?

மகிழ்ச்சியோடு அம்மாவைத் தரிசித்தோம்.

அம்மா சில பரிகாரம்,
பூஜைகள் செய்து அந்த மலா்களைக் குளத்தில் விடும்படிக் கூறினார்கள். “அந்தக் குளத்திலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு என்னிடம் வா! எப்போது வரவேண்டும் என்பதை உன் கனவில் கூறுவேன்!” என்றார்கள்.

கனவில் வந்த அம்மா

அம்மா எப்போது கனவில் வருவார்கள் என்று ஏங்கிக் கொண்டே இருந்தேன்.

எதிர்பாராத நிலையில் ஒருநாள் இரவில் அம்மா அவா்கள் சொன்னபடி என் கனவில் வந்தார்கள்.

“புனித நீரை எடுத்துக் கொண்டு என் சந்நிதிக்கு வா!” என்றார்கள்.

நான் பார்க்கும் பணியில் உடனடியாக வர முடியாது. மாற்று ஏற்பாடு செய்துவிட்டு அம்மாவைத் தரிசிக்கச் சென்றோம்.

ஒரு சின்னஞ்சிறிய பூச்சி

அம்மாவிடம் புனித நீரைக் கொடுத்தோம். அவா்களும் ஆசிர்வதித்துவிட்டு அதற்கும் சில பூஜை முறைகள் சொன்னார்கள்.

திடீரென என் கையைப் பிடித்து அழுத்தினார்கள். என் கையில் ஒரு சின்னஞ்சிறிய பூச்சி!

“நீ எதை எதிர்பார்த்து வந்தாயோ, அது உனக்கு நிச்சயம் கிடைக்கும்“ என்று அருள்வாக்கு கூறினார்கள்.

எனக்கே ஆச்சரியம்! இந்த ஒரு உயிரைக் கொடுக்கும் சக்தி யாருக்கு இருக்கிறது? ஒரு தாய்க்குத்தான். அந்தத் தாய்தான் அம்மா!

“என்ன……? நீ வந்தது இதற்கத்தானே……? அது கிடைத்துவிட்டது. போய் வா மகனே! இனி நீ வரும்போது தொண்டு செய்ய வேண்டும்.” என்றார்கள்.

சரி! என்று நானும் வந்தேன்.

எனக்கோ ஆண் மகவு ஒன்று தான்! ஆசைக்கு ஒரு பெண்மகவும் வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. ஆனால் அது நிறைவேறாத ஆசையாக இருந்தது.

அம்மாவிடம் இது குறித்துத்தான் அருள்வாக்கு கேட்க வந்தோம். ஆனால் எங்களின் குறையை
நிவா்த்தி செய்வது போல அம்மாவே, ஒரு உயிரை எங்கள் கையில் படைத்துக் கொடுத்தார்கள். அதன் பலன் இப்போது எங்களுக்குத் தெரிகிறது.

இது நடந்து ஏழு மாதங்கள் முடிந்து விட்டன. என் மனைவியாரிடமும் அந்த 7 மாதங்கள் தெரிகின்றன. இன்னும் 3 மாதங்களில் அம்மாவின் கருணையால் நாங்கள் கேட்டது எங்கள் கையில் தவழப் போகிறது.

இதை நினைத்துப் பார்க்கிறேன்.

சமுதாயத்தில் யாரோ ஒருவன் என்றிருந்த என் நிலை இன்று மாறி, என்னையும் ஒரு அந்தஸ்தில் வைத்து இருப்பதும் நம் அம்மாதான்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு உயா்வுக்கும் வழிகாட்டியே அம்மாதான்.

நான் இன்றளவும் அலுவலகம் செல்லும் போது ஓம் சக்தி! என்ற திருநாமத்தை 108 முறைகள் சொல்லி அம்மாவை வணங்கி விட்டுத்தான் செல்கிறேன்.

என் வாழ்க்கையில் மலைபோல் வருகிற துயரங்கள் எல்லாம் ஓடிவிடுவதும் அம்மாவின் துணையால்தான்.

நான் கேட்டது கிடைத்திருப்பதும் அம்மாவால்தான்! எல்லாம் அம்மா போட்ட பிச்சை!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. கே. இராமகிருஷ்ணன், செய்தி ஆசிரியா், தினகரன் நாளிதழ்.

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 43 – 46)