பிரமாண்டங்கட்கு வெளியே, அமுதக் கடல் என ஒன்று உண்டு. அதன் ‘நீர்’ பிரமாண்டங்கட்கு ஜீவ சக்தியைப் பரப்பும் ‘அமுதம்’ ஆகும். அதன் நடுவே உள்ள தீவு ‘மணித்தீவு’ எனப்படும். இந்தத் தீவு ரத்தினங்களால் உருவான தரையைக் கொண்டது. ஆதலின் மணித்தீவு எனப்படும். தீவின் கரையில் தெய்வ மரங்கள் நிறைந்த காடு அமைந்துள்ளது. மந்தாரம், பாரிஜாதம், சந்தனம், ஹரி சந்தனம், கற்பகம் என்ற மரங்கள் ‘தெய்வ மரங்கள்’ எனப்படும். இந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்கு நடுவே கதம்பவனம் என்ற தோட்டம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி என்ற திருமாளிகை உள்ளது. அந்த மாளிகை நடுவே ஒரு மகா மண்டபம் உள்ளது. அதைச் சுற்றிலும் ஒன்பது வரிசைகளாக அமைந்த படிகள் உள்ளன. அதன் நடுவே வட்ட வடிவமான மேடை உள்ளது. அந்த மேடையில் சிவம் என்ற பெயருள்ளா மஞ்சம் உள்ளது. அது நான்கு கால்கள் கொண்டது. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன் என்ற நால்வரும் அந்த ஆசனத்தின் கால்களாகத் தாங்குகின்றனர். அந்த மஞ்சத்தின் பலகையாக சதாசிவன் இருக்கிறார். இவற்றின் மேல், இவைகளைக் கொண்டு ஐந்தொழில்களை நடத்தி வைக்கும் இச்சா சக்தி, காமேசுவரர் வடிவில் அமர்ந்துள்ளார். அவன் மடியில் காமேசுவரியாக தேவி அமர்ந்திருக்கிறாள். மேலே கூறியவாறு ஆதி சங்கரர், தேவியின் இருப்பை அழகுபட சௌந்தரிய லஹரியில் வருணிக்கிறார். தேவியின் மற்றொரு இருப்பிடம் ஶ்ரீ நகரம். அது மேரு மலையில் உள்ளது. பண்டாசுரனை அழிப்பதற்காக, தேவர்களின் யாக குண்டத்தில் தேவி தோன்றினாள். பின் பேரரசியாக முடி சூட்டிக் கொண்டாள். அவளுக்காகத் தேவலோகச் சிற்பியான விஸ்வக்ர்மா ஒரு நகரத்தையே உருவாக்கினார். அதுவே ஶ்ரீ நகரம். அதன் முற்புறத்திலும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவரது நகரங்கள் உள்ளன. அந்நகரத்தின் வெளியே க 25 மதில்கள் அமைந்துள்ளன. அவை வெளிப்புற மதில்கள், உட்புற மதில்கள் என இருவகையில் அமைந்துள்ளன. இரண்டிற்கும் இடையே ஏழு யோசனை (சுமார் 85 கி.மீ) தூரம் இடைவெளி உள்ளது. இந்தப் பிரகாரத்தில் தேவியின் பரிவாரங்களான சக்திகள் வசிக்கின்றனர். இந்தப் பிரகாரங்களை அடுத்து தோட்டங்கள், அகழிகள், ஓடைகள் போன்றவை அமைந்துள்ளன. இந்தப் பிரகாரங்களில், தேவியின் பிரதான சக்திகளின் ஆளுகைக்குட்பட்டு, யோகினிகள் மற்ரும் சில பரிவார தேவதைகள் வசிக்கின்றனர். மற்றும் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் முதலியவர்கள் வசிக்கின்றனர். 25 – ஆம் மதிலுக்கு உள்ளே மகா பத்மவனம் உள்ளது. அதன் நடுவே சிந்தாமணி கிரகம் உள்ளது. அதனைச் சுற்றி வரும்போது சிதக்னி குண்டம், பர தேவதையின் ரதம், மந்திரிணியின் மாளிகை, தண்ட நாதையின் மாளிகை முதலியன அமைந்துள்ளன. சிந்தாமணி கிரகத்தின் நடுவில் ஶ்ரீ சக்கர உருவில் அமைந்த மஞ்சத்தில், பஞ்சப் பிரும்மாசனத்தில் தேவி வீற்றிருக்கிறாள். 1008 போற்றி மலர்கள் விளக்கவுரை நூல் பக்கம் (13 – 14)

]]>