கோடிக்கணக்கான ஜீவராசிகள் இந்த உலகத்தில் வாழ்கின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்று.

மனிதன் பாவமும் செய்கிறான். புண்ணியமும் செய்கிறான். பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி அடுத்தடுத்துப் பிறவி அனுபவங்கள் வந்து வாய்க்கின்றன. ஆறு அறிவு பெற்ற மனிதன் மனித நிலையைக் கடந்து மேலும் முன்னேறி, பரம் பொருளோடு ஜக்கியமாகிவிட வேண்டும். அதற்குத் தக்கபடித் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தெய்வ நிலையை அடைய வேண்டும்.

முக்தி – வீடு பேறு தான் முடிவான லட்சியம்

தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ. அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி!  அதுவே மோட்சம்!  அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!

அந்த ஒரு லட்சியத்தை மையமாக வைத்தேபரம்பொருளான ஆதிபராசக்தி இந்த உலக நாடகத்தைத் தொடர்ந்து நடத்திய படி இருக்கிறாள்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள்.

நாமோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என மனம் போன போக்கெல்லாம் வாழ்ந்து, பாவ புண்ணியங்களைச் செய்தபடிச் செத்துச் செத்துச் பிறந்து கொண்டே இருக்கிறோம். இப்படியே பிறவிச் சக்கரமும் சுழன்று கொண்டே வருகின்றன.

பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி உலக அனுபவங்கள்

பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம்.  பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டுமாம். அதனால் தான் இந்தப் பூமியைக்’ கரும பூமி’  என்கிறார்கள்.

ஏதோ ஒரு யுகத்தில் எப்படியாவது இந்த உயிர் மோட்சம் பெற்றே ஆக வேண்டும். அது வரை பிறவிகளும் தொடர்கதை!  நமது பயணங்களும் தொடர்கதை. இவற்றையெல்லாம் தெளிந்து அறிந்து செயல்பட வைக்கத்தான். இந்த ஆறாவது அறிவுள்ள இந்த மனிதப் பிறவி.

நாம் கடந்த பிறவிகளில் செய்த பாவங்களில் பலன்கள் நம்மைத் துன்புறுத்தினாலும் இந்தப் பிறவியிலாவது கரையேற வழி தேட வேண்டும்.

இந்த நுட்பமான ஆன்மிக உண்மைகளையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கரையேற்ற குரு ஒருவர் தேவை. தெய்வத்தை நமக்குக் காட்டிக் கொடுப்பவர் குரு. நம்மைக் கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் சக்தி பெற்றவர் குரு. நாம் பரிசுத்தமான ஆன்மாக்களாக ஆனால் மட்டுமே மோட்சம் பெற முடியும் அப்படிப் பரிசுத்தமாகாத நம்மைச் நம்மைச் சுத்தப்படுத்துபவர் ஆன்மிக குரு.

அதனால் தான் குரு மூலமாக ஞானம் பெற்றுப் பரிசுத்தம் அடைந்து, அதன் பிறகு என்னிடம் வா!  என்று ஆதிபராசக்தி ஆன்மிக உலகில் ஒரு சட்டம் போட்டு வைத்திருக்கிறாள். குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்று நம் அன்னை ஆதிபராசக்தியே அருள்வாக்கில் சொல்லிக் காட்டியிருக்கிறாள்.

கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பவர் குரு. தெய்வமே குருவாக நம்மிடம் வந்திருப்பது நம் அதிர்ஷ்டம்.

குருவை விட குருவின் திருவடிக்கே மதிப்பு அதிகம்.

நம் இஷ்ட தெய்வமே குருவடிவாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வரவேண்டும். குருவையும் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பவனுக்கு எளிதில் முக்தி கிடைக்காது. பல பிறவிகள் எடுத்து அலைய வேண்டியது தான். ஆன்மிக உலகில் உள்ள ரகசிய உண்மை இது

குருவின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டால் சகலமும் கிடைக்கும் காரணம் குருவின் திருவடிச் சிறப்பு அத்தகையது.

குருவடி சரணம்! திருவடி சரணம் என்கிறோம். குருவின் திருவடிகளே நம் இஷ்ட தெய்வமான ஆதிபராசக்தியின் திருவடி!

நம் கண்களுக்குப் புலப்படாத அதிபராசக்தியின் திருவடிகளை நம்மால் பற்றிக் கொள்ள முடியாது. அவளே மானிடமாக பங்காரு பகவானாக, ஆன்மிக குருவாகத் தன்னைஒளித்துக் கொண்டும், பக்தி மிக்கவர்க்கு பக்குவம் கொண்டவர்கட்கு தன்னை வெளிப்படுத்தி கொண்டும் நாடகமாடி வருகிறார்.

அவள் பாதங்களைப் பற்றிக் கொள்ள அவளே வழி சொல்கிறாள். அவளே நமக்கு வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாள். அவளே பாதை காட்டுகிறாள். அவளே நமக்கு வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கிறாள். உளவு சொல்கிறாள். ஆன்மிகப் பரம்பரையில் வந்தவனுக்குக் குருவின் மகத்துவம் தெரியும். நாம் தான் ஆன்மிகத்தில் அநாதைகளாகத் திரிகிறோமே…..சில உளவுகளை எல்லையில்லாக் கருணையோடு சொல்லிக் கொடுக்கிறாள்.

அவளது எல்லையில்லாத கருணையைத் தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் அகம் பாவம் கொண்டு வாழ்ந்தால் அவதிப்படப் போகிறவர்கள் நாம் தான்.

ஆதி சங்கரர் அம்மாவின் திருவடிகளை செளந்தர்யலகரியில் புகழ்ந்து போற்றுகிறார்.

“அம்மா!  உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன.உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்?  கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ!  உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.

குருவடி என்பது அவரவர் இஷ்ட தெய்வத்தின் திருவடி!  இது தான் சூட்சமம்! ரகசியம்! புரிந்து கொள்ளுங்கள்.

விடியலில் படுக்கையை விட்டு எழுகிற போதும்… அன்றாடக் கடமைகளை முடித்து இரவு உறங்கச் செல்லும் முன்பும் அம்மாவின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துங்கள். மூலமந்திரமோ 108 போற்றியோ சொல்லும் போது மானசீகமாகத் திருவடிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

குருவை இறுகப் பற்றிக் கொள்வது இப்படித்தான்…

“பெளர்ணமியின் போது, செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பாத பூஜை செய்வது நல்லது !”- என்று ஒரு அன்பருக்கு அருள் வாக்கில் கோடிட்டுக் காட்டினாள் அன்னை.

இனி பார்வையும், பாதமும் கிடைப்பது அரிது!  என்றும் சொல்லிக்காட்டியிருக்கிறாள்.

வேதங்களின் முடிவாக இருப்பது திருவடி

நாலு மறைகாணா அகப்பேய்

நாதனை யார் அறிவார்?

நாலு மறைமுடியும் அகப்பேய்

நற்குரு பாதமடி!

– என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நால் வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார்.

ஆண்டவனையும், குருவையும் திருவடிகள் என்னும் பாதுகைகள் மூலம் வழிபடுவது ஒரு ஞான மரபு! இது அருவுருவ பூஜை!

சமண மதத்தில் திருவடி

சமண மதத்தவர்கள் தம் குருவின் திருவடிகளையே வைத்துப் பூசை செய்வது வழக்கம். திண்டிவனம் அருகே விழுக்கம் என்ற ஊரில் குணசாகரர் என்ற சமணத் துறவியின் சமாதி பீடத்தின் மேல் தாமரை மலர் மேல் இரண்டு திருவடி அமைத்து இன்று வரை வழிபட்டு வருகிறார்கள்.

பெளத்த மதத்தில் திருவடி

புத்தரின் திருவடி பதித்த பீடத்திற்குப் ‘பாத பீடிகை ‘ என்று பெயர். பெளத்தர்கள் வழிபாட்டுக் குரியது இது!

இலங்கையில் 

இலங்கையில் உள்ள ஒரு மலைக்குச் சிவனடி பாதமலை என்று பெயர் வைத்து, அதன் உச்சியில் இரண்டு திருவடிகளை அமைத்துச் சிவனுடைய பாதமாக மதித்து வணங்குகிறார்கள்.

இராமர் பாதம்

தஞ்சை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் ஒரு இடத்தில் இராமர் படம் வைத்து வணங்கும் வழக்கம் இன்னமும் உள்ளது.

வைணவ சமயத்தில்….

வைணவர்கள் நெற்றியில் இடும் நாமம் திருமாலின் பாதம் என்பர். ஸ்ரீ பாதம் என்பர்.

ஆண்டவன் திருவடியினையே குருவின் திருவடியாகப் போற்றுவது வைணவ சம்பிரதாயத்தில் உள்ள சிறப்பு அம்சம்!

வைணவர் கோயில்களில் பக்தர்கள் தலைமேல் சடாரி வைத்து ஆசி வழங்குகிற வழக்கம் இன்னும் உண்டு! சடாரியின் அமைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா?

வரிசை வரிசையாக மலர்கள் மேல் உயரமாக அடுக்கி வைத்தது போன்ற தோன்றம். கடைசியாக 12 இதழ்க் கமல அடுக்கு! இது துவாத சாந்தத் தலத்தைக் குறிப்பது. இதன்மேல் சிறிய திருவடி இரண்டு காட்சி தரும். இத் திருவடிகளே ஆசாரியன் திருவடி! அதாவது குரு பாதம் சகஸ்ர தளத்தில் குருவின் Y திருப்பாதம் உள்ளது என்பது குறிப்பு.

சக்தி வழிபாட்டில்…

சக்தி வழிபாட்டில் ஆதி குரு அம்பிகை!  குரு பிரியா!  தட்சணா மூர்த்தி ரூபிணி! என்கிறது லலிதா சகஸ்ர நாமம்.

சக்தியம்சம் கலவாத சிவனுடைய குரு வடிவம் தட்சணா மூர்த்தி!

சிவனுடைய அம்சம் கலவாத சக்தியில் குருவடிவம் காமாட்சி!

திருப்பாத வழிபாட்டில் மிக உன்னதமான விஷயங்கள் பல உள்ளன.

வேதாந்த தேசிகர் என்ற வைணவப் பெரியவர் ஒருவர், ஆண்டவன் பாதுகைகளை மட்டும் புகழ்ந்து ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். ‘பாதுகா’  சகஸ்ரம் என்பது அந்த நூலின் பெயர்.

குருகீதை சொல்வது

“தியானத்திற்கு மூலம் குருவின் “மூர்த்தி!  பூஜைக்கு மூலம் குருவின் பாதம்”.  மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம் [1-74]

குருவின் பாத பூஜை தீர்த்தம்

‘குருவின் பாத பூஜை தீர்த்தத்தைப் பருகி மிகுதியைத் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்’

அஞ்ஞானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், காமத்தையும் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ஞானம் பெற வேண்டியும், வைராக்கியம் வர வேண்டியும் ஒருவன் பருக வேண்டும்”

– என்றெல்லாம் குரு கீதை சொல்கின்றது.

திருவடியின் மகிமைகளை அம்மா இந்த அவதார காலத்தில் பக்தர்கள் சிலருக்கு அனுபவ பூர்வமாகவே உணர்த்தியிருக்கிறாள்.

தியானத்திலிருந்து திருவடி தீட்சை

தஞ்சை மாவட்டம் – செம்போடையில் ஆசிரியர் ஒருவர்; பெயர் இராஜகோபாலன் அவருக்குத் தியானத்தில். சிலம்பு அணிந்த தன் சிவந்த திருவடிகளில் ஒன்றை மட்டும் காட்சி கொடுத்துக் காட்டினாளாம் அன்னை.

அது பற்றி அருள் வாக்கில் விளக்கம் கேட்ட போது, ‘திருவடி தீட்சை’  என்று சொல்வார்கள் அல்லவா…? அதனை உனக்குக் கொடுத்திருக்கிறேன்’  என்றாளாம் அன்னை.

திருவடியிலிருந்து இரண்டு ஒளி வட்டங்கள்

மலேசியாவிலிருந்து முதியவர் ஒருவர் மேல் மருவத்தூர் வந்தார். பெயர் கனகசபை பிள்ளை.

அம்மா யார் யாருக்கோ என்னென்னவோ சித்தாடல் செய்கிறார்களே நமக்கு ஒன்றும் செய்து காட்டவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு நாள் அருட் கூடத்தில் ஆன்மிக குரு. அருள்திரு அடிகளார் அவர்களைத் தரிசிக்கச் சென்றார். திருவடிகளில் அவர் விழுந்து எழுந்த போது அம்மா தன் பாதங்கள் இரண்டில் இரண்டு ஒளி வட்டங்களைக் காட்டினார்கள். அதிசயப்பட்டு நின்ற அவரைப் பார்த்து,  என்ன பார்க்கிறாய்…?  என் கண்களில் இருப்பதைக் கால்களில் காட்டினேன்”  என்றார்களாம் அடிகளார்.

லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பிகையின் வலது கண் சூரியன்; இடது கண் சந்திரன்; நெற்றிக் கண் அக்கினி என்று குறிப்பிடுகிறது!

அடிகளார் நம்மிடம் எந்த ஒரு சித்தாடலும் செய்யவில்லையே என்று ஏங்கியபடி இருந்த அவர் ஏக்கத்தைப் போக்கவே, தன் திருவடிகளிலிருந்து இரண்டு ஒளி வட்டங்களைக் காட்டினார் நம் குரு பகவான்!

ஓம் சக்தி

நன்றி

அவதார புருஷர் அடிகளார்

பாகம்- 6

பக்கம் 39- 45.

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here