அருள்திரு அம்மா அவர்கள் ‘ஆட்காட்டி விரல்’ காட்டினால் ‘நாட்காட்டி’  யில் கூட சூட்சுமமான பலன் கிடைக்கிறது என்பதனை நாம் அனைவரும் நன்கறிவோம்.

1986 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் அடுத்த வந்த 1987 ஆம் ஆண்டிற்கான கலண்டர்கள் தயாரான நேரம். அந்த டிசம்பர் மாதத்தில் அன்னை கோவை மாவட்டத்தில் ஆன்மிகப் பயணம் அருளுவதற்காகக் கோவை மாநகரில் எழுந்தருளி இருந்த நேரம் . வழக்கமாக நமது நாட்காட்டியிலே அன்னையின் கருவறைக் கோலம் மட்டுமே அதுவரை வந்து கொண்டிருந்தது. முதன் முதலாகக் கருவறைக் கோலம் (அம்மா, அடிகளார், சுயம்பு இம்மூன்றையும் உள்ளடக்கியது) கொண்ட கலண்டரோடு அருள் திரு அம்மா அவர்களின் குரு வடிவத் திருமேனி தாங்கிய கலண்டர்களும் வெளிவந்திருந்தன.

அருள்திரு அம்மா அவர்களே ஒரு தொண்டரை அழைத்து, அங்கே கலண்டர்களை எல்லாம் அன்னை பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் விற்று வரும்படி அன்புக் கட்டளையிட்டார்கள். ஒரு கலண்டரைக் கூட விற்க முடியாமல் அத் தொண்டர் தவியாய்த் தவித்த போது அருள் திரு அம்மா அவர்களே அத் தொண்டரை அழைத்து, “இந்தக் கலண்டர் (குருவடிவான அன்னையின் திருவடிவம்) எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கெல்லாம் பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஏவல் இவையெல்லாம் நுழையாது என்று சொல்… ” என்ற மாபெரும் சூட்சும பலனைத் தம் வாய்வழியாகவே தந்தருளினார்கள்.

அதன் பின்னர் அத்தனை கலண்டர்களும் விற்றுத் தீர்ந்ததும் பிறகு அருள்திரு அடிகளார் அவர்கள் அனந்த சயனக் கோலத்தில் அருள்வாக்கும், அமுதவாக்கும் என மாறிமாறிப் பொழிந்ததை அனைவரும் அறிவீர்கள். பயண முடிவில் அன்னை அத் தொண்டரைச் சுட்டிக் காட்டி, ‘அவரைப் பார்த்தீங்களா சார்…மான அவமானம் பார்க்காமல் அம்மாவுக்குத் தொண்டு செய்கிறார் என்று மகிழ்ந்து கூறினார்களாம்.

அன்னையின் வழிமுறைகளே அலாதியானவை. அவை ஆராய்ச்சிக்கும் அறிவிற்கும் எட்டாதவை; மற்றும் அப்பாற்பட்டவை. பொதுவாக அன்னையின் ஆன்மிகப் பயணங்களில் நிகழ்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சிக்குமே ஒரு மாபெரும் பலனைச் சூட்சுமமாக அம்மா அவர்கள் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக அம்மாவின் ஆன்மிகப் பயணங்களில் எல்லாம் கலந்துகொள் உன் கணக்கை நேர் செய்து விடுகிறேன் என்று அன்னையே நேரில் கூறியதுண்டு.

அதேபோல, இந்தக் கலண்டர் விற்பனைக்கும் ஏதோவொரு சூட்சும பலன் இருக்கின்றது. தொடர்ந்து அதே தொண்டருக்கு ஒவ்வொரு ஆண்டும் அன்னையின் கலண்டர்களை விற்பதற்கான வாய்ப்பினை ஏதோவொரு வழியில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள்.

1992- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அத் தொண்டரிடம் கலண்டர்விற்கும் பணி கொடுக்கப்பட்டிருந்தது. அப்பொழுது ‘கருவறைப் படம்’  மட்டுமே அச்சிடப் பட்டிருந்த நேரம். குருவடிவந்தாங்கிய கலண்டர் இன்னும் தயாராகவில்லை. வருகின்ற செவ்வாடைத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் மற்ற பாமர மக்களும் சேர்ந்து கொண்டு ‘அடிகளார் படம் போட்ட கலண்டர் இன்னும் வரவில்லையா?’  இன்னும் வரவில்லையா என்று கேள்விக் கணைகளைத் தொடுத்த வண்ணமிருந்தார்கள். “அடியே…..இன்னா நீ முழிக்கிற ……அடிகளார் படம் போட்டு வந்தா வாங்கிக்கலாம்… என்று கிராமத்து நல்ல உள்ளங்கள் கூறக்கேட்கும் போது உண்மையிலேயே இன்பமாயிருந்தது.

அன்றொரு நாள் இரவு வேளை . ஆலயப் பொறுப்பாளர் ஒருவர் அத் தொண்டரையும் அவரோடு வேறு சிலரையும் அழைத்துச் சென்று கலண்டர் அட்டைகளில் நாட்காட்டிவில்லைகளைப் பொருத்தச் சொல்லி ஆணி, சுத்தியல் போன்றவற்றைத் தந்தார்கள். அந்தப் பண்டல்களைத் பிரித்துப் பார்த்த போது ஒரே சந்தோசமாக இருந்தது. ஏனென்றால் அது குருபிரானின் திருமுகம் பொலிவுடன் கொண்ட கலண்டராகும். மந்தகாசப் புன்னகையுடன் அஞ்சேல் எனவும் “யாமிருக்க பயமேன்” என்பது போன்றும் வலக்கரத்தைக் காட்டும் எழில் வடிவம்….ஆஹா! நமக்குக் கிடைத்தது எப்பேர்பட்ட கிடைத்தது எப்பேர்பட்ட பொன்னான வாய்ப்பு என்று அவர்கள் அசந்த பொழுது அடுத்த பண்டலைப் பிரித்த பொழுது வெடித்து வந்தது இன்ப அதிர்ச்சி.

ஆம்! அது ஓங்கிய திருவடியால் உலகளந்த பெருமானாம். திருமாலும் காணாத செவ்விய “அன்னையின் திருவடியாகும்”. மூவர்களுக்கும் எட்டா முன்னைப் பரம் பொருளாம் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரத்துதித்த நமது குருபிரான் அவர்களின் ‘பொன்மலர்ப் பாதங்களை’  மட்டுமே காட்டுகின்ற கோலத்தை வெகு அற்புதமாய் வண்ணமயமாய் அச்சிட்டிருந்தார்கள்.

அதனையும் முதன்முதலாக விற்கின்ற பேறும் நமக்குக் கிடைத்ததே….! என்னே அன்னையின் கருணை…! என்று போற்றிப் புகழ்ந்தவண்ணம் தயார் செய்தார்கள். அப்பொழுது அக்கலண்டரை வாங்கிச் சென்ற பல தொண்டர்கள் கேட்டது, “ஏங்க சக்தி…. குருநாதர் படம் போட்ட கலண்டருக்கு அம்மா சொன்ன பலன் மாதிரி, இந்தத் திருவடிப் படம் பொறித்த கலண்டருக்கும் ஏதாவது பலன் அம்மா சொன்னாங்களா…..?இதில் ஏதாவது மறைமுகமான பலன் பொதிந்திருக்கின்றதா…? என்று அர்த்தத்துடனும், ஆர்வம் மிளிரவும் கேட்ட வண்ணம் இருந்தனர்.

அன்னையின் தொண்டர்கள் இளைஞர் அணியினர் மற்றும் பாமரர்கள் கூட விளக்கம் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டார்கள்.மிகவும் கேட்ட பொழுதெல்லாம் அத் தொண்டர்களுக்கு பதில் தெரியவில்லை என்னும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.

ஒரு வழியாக இத்தனை நல்ல உள்ளங்களைத் திருப்திபடுவதற்காகவாவது நாமே இதனை “அம்மாவிடம் அருள்வாக்கின் போது கேட்டுவிடலாம் என்று அத் தொண்டர் நினைத்தார். ஏற்கனவே பொதுநலன் கருதி அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வியொன்று அத்தொண்டரிடத்தில் பாக்கியிருந்தது. அக்கேள்வியினைக் கேட்டுவிடலாம் என்று முயற்சித்தபொழுது முதல் முறையில் அபிடேக அருள்வாக்கு கிடைக்காமலே போய்விட்டது. விடாப்பிடியாக அடுத்தொரு அபிடேகம் செய்து அருள் வாக்கிற்காக அன்னையிடம் சென்ற போது அன்னை இரண்டு முறை எழுந்து விட்டது. தளரா முயற்சியோடு மூன்றாம் முறை உள்ளே சென்று அன்னையின் முன் மண்டியிட்ட போது அன்னை வேறு சில தத்துவங்கள் மட்டும் கூறி, கேள்வி கேட்பதற்கு முன்னர் உத்தரவு கொடுத்து வெளியே அனுப்பி விட்டார்கள்.

இம்முறையாவது அக்கேள்வியை விடாப்பிடியாகக் கேட்டுவிடலாம் என்று அடுத்த அருள்வாக்கு நாளுக்காக ஏங்கிக் கொண்டிருந்த வேளையில் இப்படியொரு சோதனை வருகின்றதே……என நினைத்து “சரி…..என்னதானிருந்தாலும் பொது மக்களுக்காகத்தானே வேறு ஒரு கேள்வியைக் கேட்கிறோம். அதுவும் நன்மைக்குத் தான்”  எனத் தேற்றிக் கொண்டு கடந்த 29. 12. 1992 ஞாயிறன்று அருள் வாக்கில் அன்னையின் முன் மண்டியிட்ட போது, அன்னை தத்துவ மயமாகப் பொழிந்து தள்ளினார்கள். அது பற்றிப் பிறகு விவரமாகக் காண்போம். அடுத்தடுத்து வார்த்தைகளால் வர்ணஜாலம் காட்டிய அன்னை அத் தொண்டரை நோக்கி, இன்னும் என்ன கேட்கிற கேள் மகனே!

“என்றதும் அத் தொண்டரும் மிகப் பணிவோடு “அம்மா …. குருநாதர் திருவடி படம் போட்ட கலண்டர் இருக்கின்றதே …..அதற்கு ஏதேனும் சூட்சுமப் பலன் இருக்கின்றதா..?. அதனை எல்லோரும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றார்களே…?  என்ற போது, அன்னையின் கண்கள் ஆனந்தத்தால் விரிந்து குவிந்தன. இதழ்களில் ஒரு மென் முறுவல். குருநாதரைப் பற்றி வெள்ளை மனதோடு நாம் கேள்வி கேட்டாலே அம்மாவிற்கு ஆனந்தம் பொங்கிக் கொண்டு வந்துவிடும் போலிருக்கின்றது. இதனை நாம் பலமுறை கண்டிருக்கின்றோ மல்லவா….. அதே போல் இம் முறையும் அன்னை அளவிலா மகிழ்ச்சி கொண்ட காட்சி காணற்கரியது. அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். மகிழ்ந்த அன்னை மொழிந்தது மகனே!  இதுவரை அடிகளாரைப் பார்க்கும் பொழுதுதலையைக் பார்த்தார்கள். கண்களைப் பார்த்தார்கள். அள்ளிக்கொடுக்கின்ற கைகளைப் பார்த்தார்கள். இப்பொழுது எந்தன் (அடிகளாரின்) திருவடியைப் பார்க்கின்றார்கள். அந்த அளவிற்கு மாறியிருக்கின்றார்கள் பார்த்தாயா…..?

மகனே ! கண்ணால் பார்ப்பது பாவத்தையே;  காதால் கேட்பது மோசத்தையே ; மனதால் நினைப்பது மோகத்தையே ; உடலால் கேட்பது போகத்தையே; தலையிலிருந்து கண், காது, மூக்கு, மனது, போன்ற அத்தனை உறுப்புக்களாலும் நீ பாவம் செய்தாலும், புண்ணியம் புண்ணியம் செய்தாலும், தலையிலிருந்து கால்வரை அத்தனையும் தாங்கிக் கொள்வது எது தெரியுமா மகனே!  என்று அன்னை வினவ…….

அத் தொண்டரும் “அம்மா……அது திருவடி… ” என்று சொல்லியது அன்னை மறுபடியும் அது யாருடைய திருவடி? என்று மறு வினாத் தொடுத்தார்கள்.

“அம்மா…. அது உங்களுடைய திருவடி” என்றதும் அம்மா அவர்கள் “திருவடியை எங்கு வைக்க வேண்டும் என்று கேட்கின்றயா?  தலையில் வை;  கண்ணில் வை ; உள் நெஞ்சில் வை ; அல்லது எங்கு வேண்டுமானாலும் வை. வாயிலில் வை; பூஜை அறையில் வை;  இல்லையெனில் கூடத்தில் வை!  பின் எங்கு வேண்டுமானாலும் வை.  நீ எந்த இடத்தில் வைக்கின்றாயோ…. அந்த இடத்திற்கான பலனைத் தருவேன். உன் எண்ணத்தில் திருவடிக்கு என்ன இடங்கொடுக்கின்றாயோ அதற்கான பலனைத் தருவேன்.

மகனே! திருவடியைப் பொறுத்தமட்டில் உன் எண்ணத்திற்கேற்றாற் போலப் பலனளிப்பேன். மகனே!

பற்றுக பற்றுக பரம்பொருளின் பாதத்தினை;

அற்றது அற்றது அனைவரின் பாவவினை;

உற்றது உற்றது உயரிய பலனதாம்

அது அது அவனவன் எண்ணும் எண்ணமே

எனக் கூறி , ‘உத்தரவு’ கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஒவ்வொரு தொண்டனும் சென்னியில் வைத்துப் போற்ற வேண்டியது அன்னையின் திருவடி.

ஒவ்வொரு தொண்டனாலும் பாதபூஜை செய்யப்பட வேண்டியது அன்னையின் திருவடி, நமது பாவங்களையும், பிணிகளையும், வினைகளையும் நசுக்கிப் பொசுக்கவல்ல இணையடி……அம் மலரிணையடிகள் சரணம், சரணம்!

 ஓம் சக்தி!

 நன்றி

அவதார புருஷர் அடிகளார்

(பாகம்- 6, பக்- 46- 51)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here