பிறப்பிறப்பில்லாப் பெற்றியளாம் அன்னை ஆதிபராசக்தியின் அருளனைத்தும் தம்முள் வாங்கி வரம் தரும் அன்னையாக தம்மை நாடி வந்தவர்களுக்கெல்லாம் அருள் செல்வத்தை அள்ளித் தரும் அம்மாவாக காட்சி தரும் பங்காரு

அடிகளாருக்கு அகவை அறுபத்து ஒன்பது ஆகின்றது. அவர் தம் அருள் நெறிக்கோ அகவை ஏது? வாழையடி வாழையென வந்த திருக்கூட்டத்தில் கண்ணெதிரே நடமாடும் சித்தராய் காட்சிதரும் அருள் திரு.பங்காரு அடிகளாரின் அருள் பிறப்பு குறித்து அறியாதோர் சிலரே.  இன்று இலட்சோப இலட்சம் மக்கள் “அம்மா’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் பங்காரு அடிகளார் 03.03.1941 ஆம் ஆண்டு கோபாலநாயக்கருக்கும் திருமதி. மீனாம்பாள் அம்மையாருக்கும் அருந்தவப் புதல்வனாக மேல்மருவத்தூர் என்ற சிற்றுரில் அவதரித்தார். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து ஆன்மிகம் என்றால் என்ன என்பதை அறியாமலேயே வளர்ந்து வந்த நேரம், திருஞானசம்பந்தருக்கு உமாதேவியார் திருமுலைப்பால் ஊட்டி ஆட்கொண்டது போல சிறுவனாய் இருந்த அடிகளார் தாகத்தில் தவித்தழுதபோது அன்னை ஆதிபராசக்தி அருள்நீர் கொடுத்து மறைந்துவிட்டாள். சிறுவனாய் இருந்தபோதே அவர் திருமேனியில் நாகபாம்பு ஊர்ந்து அவர் நெஞ்சின் மேல் படமெடுத்தாடியதைக் கண்ணுற்ற இவர் பெற்றோர் இவர் ஒரு தெய்வக் குழந்தை என்பதை உணர்ந்தனர். 1966 ஆம் ஆண்டு திரு கோபலநாயக்கரின் குடும்பவிழா ஒன்றில் யாரும் எதிர்பாராத வேளையிலே இளைஞர் பங்காருவை அன்னை ஆதிபராசக்தி ஆட்கொண்டபோது யாராலும் எளிதில் வளைக்க முடியாத தீபாராதனை தட்டை வளைத்து அருள் நிலைக்காளானார். பங்காரு பாலகன் மூலமாக உலக மக்களின் துயர் தீர்க்கப் போவதாகவும் அவ்வூரிலே அற்புதம் ஒன்று நிகழப் போவதாகவும் அன்னை அவ்வூரில் கோயில் கொள்ளப் போவதாகவும் பங்காரு பாலகன் மூலம் திரு கேபாலநாயக்கருக்கு அன்னை அறிவித்தாள். பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த இளைஞர் பங்காரு, பரவசமூட்டும் பற்பல அனுபவங்களைப் பெற்று படிப்படியாக ஆன்மிக நிலைக்குப் பக்குவமானார். மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் தோன்றுவதற்கு முன்னோடியாக வேப்ப மரத்தில் பால் வடிந்ததும், புயல் காரணமாக வேப்ப மரம் வீழ்ந்து மரத்தடியில் வளர்ந்திருந்த பெரும் புற்று மழையில் கரைந்து அங்கே அன்னை ஆதிபராசக்தி சுயம்பாக வெளிப்பட்ட வரலாற்றையும் நாம் அறிவோம். மேல்மருவத்தூர் ஆலயம் தோன்றி நான்கு தசாப்தங்களுக்கு மேலாகி விட்டன. பேருந்து கூட நிற்காத சிற்×ராய், பொட்டல் வெளியாய் ஒரு காலத்தில் இருந்த மேல்மருவத்தூர் மண், இன்று ஆன்மிகத்தின் தொட்டிலாகவும் தொழிற்கல்வி, விஞ்ஞானக் கல்வி, மருத்துவக் கல்வி என கல்விக்கூடங்கள் சிறப்பான மருத்துவமனை என இன்னோரன்ன பிற கல்வி நிறுவனங்களை தன்னகத்தே கொண்டு யாராலும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாத வளர்ச்சிப் படிகளோடு பல மாற்றங்களையும் ஆன்மிக எழுச்சியையும் பெண்களுக்கு யாருமே வழங்காத உயர்ந்த இடத்தையும் வழங்கி போற்றுதற்குரிய பேரூராகத் திகழ்கின்றது. அருள் திரு அம்மா அவர்கள் ஆற்றி வருகின்ற பலவகையான சீரிய தொண்டுகளால் தான் சிற்×ராக இருந்த மேல்மருவத்தூர் இன்று சர்வதேச மக்கள் அனைவரும் வந்து செல்கின்ற பேரூராக வளர்ந்து ஒளிர்கின்றது. இது சாதாரண மனிதனால் செய்ய முடியாத மகத்தான ஆற்றலாகும். தெய்வமே இதனைச் செய்வதாகவே மக்கள் கருதுகின்றார்கள். அருள் திரு பங்காரு அடிகளாரை அன்னை ஆதி பராசக்தியின் மறு உருவமாகக் காணுகின்றார்கள். அவரை வழிபடுகின்றார்கள். அவர் கூறுகின்ற வார்த்தைகளை தெய்வ வாக்காக ஏற்று நிறைவேற்றி வருகின்றார்கள். புற்றீசல்கள் போல் உலகெங்குமுள்ள மக்கள் இவரை நோக்கி அணிதிரண்டு வருவதே இதற்கு சான்று பகருகின்றது. இன்றைக்கு ஆன்மிகத்தை வளர்க்கும் ஆச்சாரிய பீட நாயகராக, ஆச்சாரிய அபிஷேகம் பெற்ற ஆன்மிக குருவாக உயர்ந்துள்ள பங்காரு அடிகளார் ஒரு யுக புருஷர் என்பதில் ஐயமில்லை. ஆன்மிக ஞானிகளில் இல்லற சுகதுக்கங்களை அனுபவித்து பிறகு ஞானியானவர்கள் ஒரு வகை இல்லறத்தை ஏற்று அதன் பின் அதனை வெறுத்தொதுக்கி ஞானியானவர்கள் ஒருவகை. இந்த நூற்றாண்டில் இல்லறமல்லது நல்லறமன்று என்று இல்லறத்தில் இருந்து கொண்டு நல்லறமாகிய ஆன்மிகத்தை வளர்த்து வருபவர் அருள்திரு அம்மா அவர்களாவார். சமயம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடுவதும் பக்குவப்படுவதுமாகிய குறிக்கோளை உடையது என்ற உண்மையை உணர்த்தும் வகையில் ஒரு உதாரண புருஷராக அம்மா வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு பேதங்களாலும் வெறிகளாலும் இன்று மனித குலமே அழிந்து போகக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. இன்றைய உலகை ஆன்மிக வழிக்குத் திருப்பி இவ்வுலகை சீரமைப்பது என்பது இலகுவான காரியமல்ல. ஆனால் தெய்வத்தின் அம்சமாய் அன்னை ஆதிபராசக்தியின் மறு உருவாய் மனிதரோடு மனிதராய் எளிமையே தோற்றமாய், கருணையே வடிவாய் ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாமல் அமைதியாய் மௌனமாய் மருவத்தூரில் ஒரு ஆன்மிகப் புரட்சியை மனிதனை மனிதன் மதிக்கும் மாண்பு மிக்க மனித நேயத்தை பெண்களுக்கு முதலிடம் கொடுத்து பெண்மையைப் போற்றும் நன்னெறியை அருள்திரு அம்மா அவர்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் சிலை என்றால் அது சிலைதான்! அதுபோல அருள்திரு பங்காரு அடிகளாரை தெய்வம் என கருதி போற்றி வழிபடுபவர்களுக்கு தனது தெய்வ சக்தி மூலமாக உணர்த்தி தெய்வமாகவும் குரு என ஏற்று வழிபடுபவர்களுக்கு குருவாக நின்று நல்வழி காட்டுபவராகவும் “அம்மா’ என்று அøழத்து வருபவர்களை அணைத்துக் காக்கும் தாயாகவும் ஞானியர்க்குள் ஞானியாகவும் அருள் திரு பங்காரு அடிகளார் திகழ்கின்றார்கள். இப்படி பல கோடி பக்தர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்துவரும் தமிழிலே மந்திரங்களை பொருளுணர்ந்து கூறுவதற்கு அறிமுகப்படுத்தியவரும் பெண்களை கோபுரத்தில் ஏற்றி வைத்து கும்பாபிஷேகம் செய்ய வைத்த புரட்சியையும் செய்து வைத்த எமது குருநாதருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிப் பெருக்கை எப்படி அர்ப்பணிக்கப் போகின்றோம்? ஆம், ஆலயத்திலே நடைபெறுகின்ற மற்றெல்லா விழாக்களும் ஆன்மாக்கள் ஈடேறும் வகையில் எமது ஆன்மிகக் குரு எமக்கு ஏற்படுத்தித் தந்தவை. எமது குருநாதன் இம் மண்ணிலே தோன்றிய மார்ச் மாதம் 3 ஆம் திகதி மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி செந்நிற ஆடை பக்தர்களுக்கு பொன்னான நாள். குருவிற்கு பக்தர்கள் காட்டும் நன்றிப் பெருவிழா, உணர்ச்சிப் பெருவிழா, உணர்வுப் பெருவிழா, ஒரே தாய், ஒரே குலம் என்ற அன்னையின் தாரக மந்திரத்தை தலைமேல் ஏற்று கொழும்பு 3, இல 12, பாடசாலை வீதியில் அமைந்துள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தோடு இணைந்து அதன் கிளை வழிபாட்டு நிலையங்களான இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி (கொழும்பு 4) பக்தர்கள், இல: 34/12அ, ஹேகித்த வீதி, வத்தளை வழிபாட்டு நிலையத்தினர் மற்றும் இல. 168/6, பிக்கரிங்ஸ் வீதி, கொட்டாஞ்சேனை வழிபாட்டு நிலைய பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அருள்திரு பங்காரு அடிகளாரின் 69 ஆவது அவதாரத் திருநாளை பெருவிழாவாக நாளை மறுநாள் 03.03.09 செவ்வாய்க்கிழமையன்று வத்தளை நகரில் அமைந்துள்ள நகர சபை மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து குருவுக்கு பாத பூஜை மற்றும் கலச விளக்கு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள், அன்னதானத்துடன் விமர்சையாக கொண்டாடவுள்ளனர். இத்தருணத்தில் இலங்கை வாழ் பக்தர்கள் அனைவரும் சொல்லொணா துயரில் மூழ்கியுள்ள மக்களுக்காகவும் அவர்களின் சுபீட்சத்துக்காகவும் பிரார்த்திப்பதோடு சகல இன மக்களும் சமத்துவமாய் சாந்தியுடன் வாழ குருவருள் துணையுடன் அன்னை ஆதி பராசக்தியின் அருள் வேண்டி தொழுவோமாக.

 

வீரகேசரி வாரவெளியீடு
1-03-09
]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here