ஓம் நிம்மதி தருவாய் போற்றி ஓம்! என்ற மந்திர வரிகள் காதிலே விழுகிறது.

நிம்மதி தேடி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிற நமக்கு……

ஆசையே அலைபோல

நாமெல்லாம் அதன் மேலே

ஓடம்போல ஆடிடுவோமே

வாழ்நாளிலே..!

என்ற பாடல் காதிலே ரீங்காரமிடுகிறது.இன்னும் சிறிது தூரம் செல்லுகிறோம்.

“கடலிலே விழுந்த துரும்பு போல இங்கும் அங்கும் அலைந்தாய்.  இப்போது நீ வர வேண்டிய இடத்துக்கு வந்துவிட்டாய்.  இனி உனக்கும் உன் குடும்பத்துக்கும் நான் பொறுப்பு மகனே” என்ற அன்னையின் அருள் வாக்கு நெஞ்சிலே நிழலாடுகிறது.

“செல்லுகின்ற பாதையில் எண்ணச் சுழல்கள் வட்டமிட்ட வண்ணம் உள்ளன.

நாம் ஏன் பிறந்தோம்? என்ன சாதிக்கப்போகிறோம் ? ஏன் நமக்கு இந்தப் பிறப்பு?  ஏன் உலகம் படைக்கப்பட்டது ? என்றெல்லாம் மனம் நிலை தடுமாறுகிறது.

n

“தன்னைத்தானே அறிவது, தன்னுள்ளே இறைவனை அறிவது, இறுதியில் இறைவனோடு கலப்பது என்பதைத் தெரிந்து கொள்வதற்கே ஆன்மிகம்” என்ற அன்னையின் வரிகளை நினைத்து மனதில் தெளிவு ஏற்படுகிறது.

ஆசாமிகளை நம்பி அயர்வுகள் பலவற்றிற்கு ஆளானதால் மனம் நிலையின்றித் தவிக்கிறது.

“என்னை நம்பிச் சரண் அடைந்தவர்களை என்றும் நான் கைவிடுவதில்லை ” – என்று சொல்கின்ற அன்னையின் வாக்கில் மனம் நிலைப்படுகிறது.

சொத்து இல்லையே என்று ஒரு புறம் . சொத்து இருந்தும் நிம்மதி இல்லையே என்று இன்னொரு புறம் மனதிலே பேதம்.

“நீ செய்த பாவம் இல்லை இது. உன் முன்னோர்கள் செய்த பாவம்.  பெற்றோரின் சொத்தில் உனக்குச் சரி பங்கு இருப்பது போல அவர்களது பாவ புண்ணியத்திலும் உனக்குப் பங்கு உண்டு . அதனால் தான் துன்பப்படுகிறாய் இந்த மண்ணை மிதி. மற்றவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்பது அன்னை சொன்ன வேதம்.

பொருளைச் சேர்ப்பது தான் உலகியல் வாழ்விலே சுகம் பெற வழி. பணத்தைப் பெருக்குவதும், பகட்டாக வாழ்வதும் தான் உயர்ந்தது என்று நினைப்பது உலகின் போக்கு.

“ஈட்டி இயன்றவரை செல்லும்

பணம் பாதாளம் வரை செல்லும்

பக்தி அதற்கு மேலும் பாயும் மகனே”

பக்தி தான் உலகத்திலேயே சிறந்தது. பக்தியைத் தவிர மற்றவைகளை வளர்த்தால் ஆணவம் பெருகி அழிவு உண்டாகும் ” என்று சொல்லி நம்மை வழிப்படுத்துவது அன்னையின் வாக்கு.

வாழ்வில் சொத்து தான் ஆதாரம் என்ற நம்பிக்கை நமக்கு.

வாழ்வில் ஆன்மிகமும், அதைச் சார்ந்த அருளும் தான் ஆதாரம் அதன் படி நாம் நடக்க வேண்டும் என்ற விருப்பம் அன்னைக்கு.

உலகியலில் உள்ளுணர்வுகளைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் வெளி அங்க வேலைகளை ரசித்து, வெளிப்பகட்டை நம்பி ஏமாந்து, மாயைக்கு மயங்கிச் செய்வதையே செய்து சலித்துப் போனது நம் மனம்.

“வெளி அங்க வேலைகளை, நடிப்பை, உலகம் கண்டு ஏமாறலாம். அவனவன் மனதிலே என்ன நினைத்துச் செயல்படுகிறான் என்பதற்கேற்பவே நான் முன்னேற்றம் தருவேன்”. என்ற அவள் வாக்கைப் புரிந்து கொண்டால் நலம் பெறப் போவது மனித இனம்.

மனவழி சென்று நாம் வாழ்வைச் சீரழிக்கிறோம்.

அருள்வழி காட்டி அவள் நம் வாழ்வைச் சீராக்குகிறாள்.

அதிகாரத்திற்கு நாம் கட்டுப்படுகிறோம்

அன்பிற்கு அவள் கட்டுப்படுகிறாள்.

முட்செடிகளைத் தின்று வாயில் இரத்தம் வடிந்த போதிலும் முட்செடிகளைத் தின்பதை விட்டுவிடாத ஒட்டகத்தை போலத் தொடர்ந்து துன்பங்களைப் பெருக்கிக் கொள்வது மனித இயல்பு.

வந்த துன்பங்களைக் களைந்து நம் மீது மனங்கனிந்து அருள்வது அன்னையின் இயல்பு.

நம் உடலாவது நிம்மதி பெற வேண்டி மருத்துவரைத் தேடவைக்கிறது.

அவள் அருளானது மன நிம்மதி பெற வேண்டி மருவூர் மண்ணை நாட வைக்கிறது.

பணத்தை வைத்து எடைபோடுவது மனித இனம். பக்தியையும் தொண்டையும் வைத்து எடைபோடுவேன் என்று சொல்கிறாள் அவள் தினம்.

மாத்திரைகளைத் தின்று வினை அறுக்க முற்படுவது நம்மவர் நினைப்பு.

விரதம், பாதயாத்திரை, மனக்கட்டுப்பாடு, உணவுக்கட்டுப்பாடு ஆகிய இந்த சக்தி மாத்திரைகள் தான் நம் வினை அறுக்கும் என்பது அவள் தம் முடிவான தீர்ப்பு.

நாம் சுகம் பெற வேண்டி, ஜம்புலன்களின் வாயிலாக மனதை வெளிப்பொருட்களின் மீது திருப்புகிறோம்.

நாம் நித்திய சுகம் பெற வேண்டி தியானம் என்பதின் வாயிலாக ஜம்புலன்களை அடக்க வைத்து உள்முகமாக அவள் நம் மனதைத் திருப்புகிறாள்.

வயிற்றுப் பிழைப்பு என்ற பெயரில் வாழ்வில் நாம் ஏதேதோ பயிற்சிகளுக்கு ஆளாகிறோம்.

“அ, ஆவன்னா படிக்கும் போது அதன் அருமை தெரியாது. பின்னால் மொழி வளர்ச்சிக்கு அது எவ்வளவு உதவும் என்பது உனக்குப் புரியாது.”

“சிலையைச் செதுக்கும் போது அது கல்லாகத் தான் தெரியும். கடைசியில் கண் திறக்கும் போது தான் அது பலபேர் வணங்கும் தெய்வச் சிலையாகும் என்பது தெரியும். பாலகனைக் குருவாக வைத்து நான் கொடுக்கிற பயிற்சிகளின் அருமை, பெருமைகள் பின்னால் தான் உனக்குப் புரியும்” என்று சொல்லி நம்மைப் பல நற்பயிற்சிகளுக்கு ஆளாக்குகிறாள்.

நினைப்பது நடக்கவில்லையே என்று மனம் அமைதி இழந்து தவிக்கிறது.

குழந்தையாகிய உனக்கு எதை எப்போது தர வேண்டும் என்று தாயான எனக்குத் தெரியும் என்ற வார்த்தைகள் அமைதி தந்து நம்மைக் காக்கிறது.

நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!

யானையின் பலம் தும்பிக்கையிலே!

மனிதனின் பலம் நம்பிக்கையிலே!

அன்னையின் வார்த்தைகளிலே நம்பிக்கை வைப்போம்.

தாயின் கையைப் பற்றிக் கொண்டு செல்லும் குழந்தைக்கு எதுபற்றியும் கவலை இல்லை.

“நீங்கள் எல்லாம் துடுப்பு இல்லாத படகுகள், உங்களைக் கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்று சொன்னவள் நம் அன்னை.

அவள் தம் பாதம் பணிந்து நாம் அவள் வழி செல்வோம். எப்படியும் அவள் நம்மைக் கரை சேர்ப்பாள்!

ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி 1991 யூலை பக்கம் 30-33.  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here