ஆகமரீதியில் நடைபெறும் தமிழ்நாட்டுக் கோவில்கள் அனைத்தும் சில விதிமுறைகட்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. இன்ன இன்னார் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை வரைச் செல்லலாம் என்ற விதிமுறைகள் உண்டு இந்த விதிகள் எப்பொழுது யாரால் உருவாக்கப் பெற்றன என்பதை இன்னு ஆராயக் கூட இல்லை. எல்லாவற்றிற்கும் மேலான ஒருமுறை இன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

கருவறையின் உள்ளே சென்று வழிபாடு (பூசை) செய்யும் உரிமை பெற்ற ஆதிசைவர்களிலுங் கூடப் பெண்ணாகப் பிறந்தவள் கருவறையினுள் செல்லவோ இறைவனை இறைவியைத் தொட்டுப் பூசிக்கவோ உ ரிமை பெற்றிருக்கவில்லை. ஆகம முறையில் நடைபெறுவதாகக் கூறிக்கொள்ளும் எந்தத் தமிழ்நாட்டுக் கோயிலிலும் பெண்கள் கருவறையினுள் அனுமதிக்கப் பெறுவதில்லை. ஆனால் இந்தப் பழக்கம் மிகப் பிற் காலத்தில்தான் தோன்றி இருக்க வேண்டும். பெரியபுராணம் இதற்கு நேர் விரோதமாகப் பேசுகிறது. திருநீலதக்க நாயனார் என்ற அடியார் தம் மனைவியுடன் இறைவனுக்கு அபிடேகம் செய்யப் புகுந்த நேரத்தில் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சிலந்தி ஊர்வதை அவருடைய மனைவியார் கண்டார். உடனே வாயிலிருந்த எச்சிலை இறைவன் திருமேனியில் தடவினார். இதனால் பெண்கள் கருவறையினுள் போவது அன்றிருந்த வழக்கம் எனத் தெரிகின்றது.

குமரகுருபரப் பெருமானால் நிறுவப் பெற்றதும் புகழ் பெற்றதும் ஆகிய காசிமடம் இருக்கின்ற ஊரின் பெயர் திருப்பனந்தான். ஆனால் அவ்வூரிலுள்ள கோவிலின் பெயர் தாடகேச்வரன். இப்பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? தாடகை என்ற பெண் இறைவனுக்கு அபிடேக ஆராதனை செய்து வந்தாள். ஒரு நாள் அபிடேகத்திற்குப் பெரிய குடத்தை எடுத்து இறைவன் திருமுடிமேல் காய்க்க நினைக்கும் பொழுது அவன் உடை நெகிழ்ந்தது. இரு முழங்கைகளாலும் புடவை நமுவாமல் பிடித்துக் கொண்டாள். ஆனால் எவ்வாறு பெரிய சிவலிங்கத்திற்கு முழுக்குச் செய்ய முடியும்?தவித்த அவள் நிலை கண்டு இரங்கிய இறைவன் தன் திருமுடியை வளைத்து?க் குனிந்து கொடுத்தான். அதனாலேயே தாடகேச்சுரம் என்ற பெயர் உண்டாயிற்று. எனவே மகளிர் கருவறையின் உள்நுழைந்து பூசை புரிவது தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்த வழக்கமாகும்.

இடைக்காலத்தில் மகளிர்க்கு மறுக்கப் பெற்ற இந்த உரிமையை மறுபடியும் மகளிர்க்கு வழங்கி விட்டாள் மருவத்தூர்ப் பெருமாட்டி. ஆம்! தமிழகத்தில் வேறு எங்கும் காணாத காட்சியை எல்லாம், மேல் மருவத்தூரில் அன்னை சுயம்பு அருள்மிகு ஆதிபராசத்தி ஆலயத்தில் காணலாம். கருவறையில் அபிடேகமா? அன்னைக்கு 108, 1008 அருச்சனையா? எல்லாம் மகளிரே செய்கின்றனர்! அது மட்டுமா இன்று நூற்றுக்கணக்கான கோவில்களில் அருச்சனை நடைபெறுகிறதே! அவற்றைப் பார்த்துவிட்டு வந்து மருவத்தூரைப் பார்க்கின்றவர்கள் ஒரு புதுமையை காணமுடியும். பிற ஆலயங்களில் அருச்சனை செய்பவர்கள் வில்வத்தையோ குங்குமத்தையோ கையில் எடுக்கின்ற முறை, மந்திரம் சொல்கின்ற முறை, பிறகு வில்வத்தைப் பாதத்தில் அருச்சிக்கின்ற முறை முதலியவற்றைப் பார்ககும் பொழுது மனத்தில் ஓரளவு வருத்தம்கூடத் தோன்றுவது உண்டு. ஏதோ ஆண்டவன் போpல் கோபித்துக் கொண்டு, கையில் வேறு ஒன்றும் கிடைக்காததால் பூவை அல்லது வில்வத்தை எடுத்து எறிவது போலச் செய்யப்படும் அருச்சனை எங்கே?

மருவத்தூரி ல் ஆண்களாயினும் பெண்களாயினும் அருச்சனை செய்கின்ற அருமைப்பாடு எங்கே? இது எவ்வாறு முடிகின்றது? ஆம்! அன்னை ஆதிபராசத்தியே பலமுறை அருள்திரு அடிகளார் மூலம் பக்தர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எவ்வாறு மலர்களைக் கையில் எடுக்க வேண்டும். விக்ரகத்தின் எந்தப் பகுதிகளின் நேரே இம்மலரை அல்லது குங்குமத்தைக் காட்ட வேண்டும். பிறகு எவ்வாறு கையைத் திருப்பி அந்தக் குங்குமத்தை மலரடிகட்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை அன்னை பலப்பல முறைகள் சொல்லியும், செய்தும் காட்டியுள்ளான்.

மருவத்தூரில் கருவறையினுள் மகளிர் நுழைந்து அபிடேக, ஆராதனைகள் செய்வது புதுமை என்றால் அதைவிடப் புதுமை அவர்கள் அருச்சனை செய்கின்ற அழகும் முறையும் ஆகும்.

மணிவாசகர் என்ற மகாஞானி இந்த அம்மையை ‘முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!” என்று திருவாசகத்தில் குறிப்பிட்டார். அன்னை மிகமிகப் பழமையானவன் என்பதை யாவரும் அறிவர். அவள் எவ்வளவு புதுமையானவள்? புதுமையைப் புகுத்த விரும்புபவள் என்பதை சமீப காலத்தில் அன்பர்கள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.

நீண்ட நெடுங்காலமாக நம்நாட்டைப் பொறுத்தவரை ஒரு பழக்கம் இருந்து வருகிறது. வீட்டுக்கு விலக்கமான பெண்கள் கோயிலினுள் வரலாகாது, பிறரைத் தொடலாகாது என்பன போன்றவை, இன்றுகூடத் தமிழ்நாட்டில் ஓரளவு இருந்து வருகிறது. வீட்டில் இதை கடைப்பிடிக்காதவர்கள் கூட விலக்கான நாட்களில் கோவிலுக்கு வரத் துணியமாட்டார்கள். பொpய தவறானதும், மகாப்பாவமானதும் ஆகிய செயல் இது என்றுதான் நம்மில் பலரும் கருதி வந்தோம்!

அன்னை அன்பர்களிடம் பின்வருமாறு ஒருமுறை அருள்வாக்கில் கூறினாள். ‘’மகனே! இந்த விலக்கம் என்பது பசு முதல் பறை இனம் ஈறாக பெண் உடம்பு எடுத்த எல்லா உயிர்கட்கும் உண்டு. இயற்கையின் ஒரு கூறாகிய உடம்புக்கு உரிய இயல்பான சில குணங்களில் பெண் உடம்புக்கு என்று ஏற்பட்டது இது. இதற்கு ஏன் பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்? இனி என் கோவிலினுள் மகளிர் சாதாரண காலங்களைப் போலவே விலக்கான நாட்களிலும் வந்து விழிபடலாம். அவர்கட்கு வீட்டு விலக்கு என்று கூறப்படும் நாட்கள் எனக்கு விலக்கல்ல. எனவே எல்லா நாட்களிலும் என் கோவிலுக்குள் வந்து வழிபட மகளிர்க்கு உரிமை உண்டு. இதை விளம்பரப்படுத்தி அனைவர்க்கும் கூறிவிடுங்கள்” என்று அன்னை அருள்வாக்கில் ஆணை இட்டாள்.

கருவறையினுள் மகளிர் நுழையக்கூடாது; விலக்கு நாட்களில் கோவிலுக்கும் போகக் கூடாது என்பவை போன்ற பழக்கங்கள் இடைக்காலத்தில் தமிழ்நாட்டில் புகுந்த தவறான பழக்கங்கள். இவற்றைத் தகர்ந்து எறிந்துவிட்டாள் தமிழ்நாட்டுக்கு என்றும் உரிமை பூண்ட அன்னை ஆதிபராசக்தி. கருவறையில் நுழைந்து வழிபாடு செய்யமட்டுமா மகளிர்க்கு உரிமை தந்துள்ளாள் இப்பெருமாட்டி? இல்லை; யாகம் வளர்க்கும்போது பாகத்திற்குத் தலைமை தாங்கி நடத்தவும் மகளிரையே நியமிக்கின்றாள் இந்த அன்னை. பிறர் யாகபுருஷன் என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். இச்சொல்லுக்குப் பெண்பாற்சொல் இல்லை! ஏன் தெரியுமா? யாகத்தைப் பெண்கள் தலைமை தாங்கி நடத்தக் கூடாது என்று வைத்துக் கொண்டமையின் பெண்பாற் சொல் இல்லை.

மருவத்தூரில் இஸ்லாமியப் பெண்கள், ஜைனப் பெண்கள்; கிறித்துவப் பெண்கள் ஆகியோரும் வழிபாடு செய்கின்றதும் யாகம் செய்கின்றதும் ஒரு புதுமைதான். ஆம்! இவள் ‘‘பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியள்.”

ஓம் சக்தி

நன்றி: சக்திஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here