விந்தையிலும் ஓர் விந்தை!

0
657

“நான் தான் கூறிவிட்டேனே – ஏன் இணைந்திருக்கிறாய் மகனே?” என அருள்வாக்கின் போது என் மகனிடம் அன்னை கேட்டாள் – பரிவுடன்.

“ஆமாமம்மா, நீ கூறியபடி நானும் காத்திருந்தேன். பயன் ஒன்றும் வரவில்லையே! கல்லூரியில் இடம் கிட்டவில்லையே இந்த ஆண்டு!”

“உனக்குக் கோவையிலேயே படிக்க ஏற்பாடு செய்கிறேன்!” என்றாள் அன்னை.

“எப்போது தாயே?”

“பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் எனக்கு எதை எப்போது தர வேண்டும் எனத் தெரியாதா மகனே?”

“போதும் நிறுத்திக் கொள்!” என்று கூறும் வகையில் மகனை நான் இடிக்கிறேன்.

மேற்படி நிகழ்ச்சி நடந்தது 1982 பிப்ரவரி 19ஆம் தேதியாகும்.

இந்த ஆகஸ்டுமாதம் 25ஆம் தேதி “கிட்டார்” இசைக் கலைஞனான என் மகன் விசுவநாதன் சீர்காழியில் ஒரு இசை நிகழ்ச்சிக்குப் போயே ஆக வேண்டும் என்ற நிலை. திடீரெனக் கல்லூரியிருந்து மகனுக்கு 18.8.82 அன்று M.Sc படிப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் வரத்தவறி விட்டால் அதற்குப் பதிலாக இவனுக்கு ஒரு வேளை வாய்ப்புக் கிட்டக் கூடும் என்ற அறிவிப்பு வருகிறது. 26.8.82 அன்று காலை 10.30க்கு நேர்முகத் தேர்வு (Interview) எனக் கூறப்பட்டது. 25.8.82 அன்று இரவு இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறும் அறிவுரை வழங்கப்பட்டது. எண் கணித முறைப்படியும் சோதிடக் கணக்குப்படியும் மேற்படி 25,26 தேதிகள் தடங்கல்கள் மட்டுமல்ல ஆபத்துக்களையும் உண்டுபண்ணக் கூடியவை என நான் உணர்ந்தேன். ஆயினும் இவற்றுக்கெல்லாம் மேம்பட்ட நிலையிலிருந்து வழங்கப்பெற்ற அருள்வாக்கு ஒன்றே எனக்கும் என் மகனுக்கும் துணிவு தந்தது. என் மனைவி, மகனிடம் அன்னையுடன் அமர்ந்திருக்கும் அடிகளாரின் படத்தைப் பாதுகாப்பாகத் தந்தாள். மகனும் சீர்காழி புறப்பட்டான்.

26.8.82 அன்று காலை 10.15 வரை மகன் வீடு திரும்பவில்லை. அவளது தாயார் கவலையுடன் என்னைக் கல்லூரிக்கே செல்லுமாறு கேட்டு கொண்டாள். 10.30க்கு கல்லூரி வாயிலை நான் அணுகுகிறேன் கல்லூரியில் மகன் இல்லை. நேர்முகத் தேர்வு நடக்கும் அறைநோக்கி நான் விரைகிறேன். பின் வாயில் வழியாக அவசர அவசரமாக மகன் வேகமாகவே படிகளைத் தாண்டி ஏறுகிறான். விசாரணைகளுக்குப் பின் கல்லூரிப் பேராசிரியர் என்னுடன் கைகுலுக்குகின்றார். இடம் கிடைத்து விட்டது!

இடையில் சீர்காழியிலிருந்து புறப்பட்ட அந்தப் புத்தம் புதிய பேருந்து 26.8.82 அதிகாலைதான் கோவை வந்து சேர்ந்தது. அதற்கு நேர்ந்த கோளாறு சாதாரணமானது அல்ல. பேருந்தின் இதயமான “பிஸ்டன்” நொறுங்கி விட்டதாம்! அதிசயிக்கதக்க வகையில், வண்டி நடமாட்டமே இல்லாத அந்த இரவு வேளையில் வந்த லாரி ஒன்று என் மகனையும், உடன் மற்றுமொரு அன்பரையும் ஏற்றிக் கொண்டு திருச்சி வந்து சேர்ந்த நேரம் காலை 7.00 மணியாகும். திருச்சியிலிருந்து ஒருடாக்சி (Taxi) ஓட்டுநர் 80 மைல் வேகத்தில் 3 மணி நேரத்தில் கோவை வந்து சேர்ந்தது பற்றிய அதிசயத்தை மகன் ஆர்வத்தோடு வருணித்த போது எனக்கு நெஞ்சம் உருகியது. இடம் கல்லூரியில் கிடைத்தது ஒரு அதிசயம்! அதைவிடக் குறிப்பிட்ட நேரத்திற்கு வினாடிப்பிசகாமல் கல்லூரிக்கே மகனைக் கொண்டுவந்து சேர்ந்தது பெரிய அதிசயமல்லவா? அந்த 25,26 ந் தேதிகளில் அதே பேருந்து குழுமத்தின் மற்றொரு பேருந்து குழுமத்தின் மற்றொரு பேருந்து வேறொரு இடத்தில் பெரும் விபத்துக்குள்ளாகி பொருளுக்கும் உயிருக்கும் ஆபத்து நேர்ந்ததாகத் தகவல் வருகிறது. சில தினங்களுக்கு முன் தன் கனவில் அடிகளார் தோன்றி “26ந் தேதி நான் செல்ல வேண்டும். வேலை இருக்கிறது!” என்று கூறினார். என என் மனைவி சொன்னதை நான் நினைவு கூர்கிறேன்.

அன்னையின் வழிமுறைகள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலென்ன? அவளது அருள்வாக்குப் பலிக்கும் அதிசயத்தை நாம் காணும் பேறு பெற்றிருப்பதை விட உயர்ந்தது வேறொன்றுமில்லை அல்லவா?

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 11 (1982)
பக்கம்: 29