வைணவ சமயத்தைப் பரப்பியவருள் சிறந்த இடம் பெற்றவர் ஆளவந்தார். இவருக்குச் சீடர் பலர். அவருள் மன்னேறி என்ற ஊரைச் சார்ந்த அரிசனம் தொண்டரும் ஒருவர். மன்னேறி நம்பி என்று அவருக்குப் பெயரிட்டு அன்போடு அழைப்பது வழக்கம். சிறந்த அடியவர். பெரியதம்பி என்பவர் மற்றொரு அடியார். மன்னேறி நம்பிக்கு இந்தப் பெரியநம்பி நோயுற்ற காலத்தில் உணவு கொண்டு சென்று உண்பித்தார்.
நோய் மிகுதியால் மன்னேறி நம்பி காலமானார். பெரிய நம்பி, சிறந்த வைணவ அடியார்கட்குச் செய்யப்படும் முறையில் சரம கைங்கரியம் என்ற அந்திமக் கிரியைகளைச் செய்தார். அரிசன வகுப்பினர்க்கு இப்படிச் செய்தது குறித்து சாதிவெறி கொண்ட வைணவர்கள் பெரிய நம்பியின் வீட்டு வாசலில் முட்களைப் போட்டு ஒருவரும் அவர் வீட்டுக்குப் போகாமலும் அவரை ஒருவர் வீட்டுக்கும் வரவிடாமலும் விலக்கி வைத்தார்கள்.
இந்த நிலையில் திருவரங்கப் பெருமானுக்கு விழா வந்தது. திருத்தேரில் பெருமானை வைத்து ஊர்வலம் வந்தார்கள். பெரிய நம்பி வசிக்கும் தெரு வழியே தேர் வந்தது. பெரிய நம்பிக்கு மகள் ஒருத்தி உண்டு. பெருமாளிடம் மிகுந்த பக்தி கொண்ட பெண் அவள்; “அத்துகுழாய்” என்பது அவளின் பெயர்.
ஊரார், தன்னையும், தன் தந்தையினையும் விலக்கி வைத்து அவமானப் படுத்துவதை அத்துழாய் என்ற அந்தப் பெண்ணால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தன் வீட்டு வழியே தேர் வந்தது. அத்துழாய் ஓடி வந்து நேர் எதிரில் நின்றாள். “திருஆணை” தின் ஆணை கண்டாய் என்று சொல்லிக் கொண்டே இரதத்தை நிறுத்தினாள். பெருமானை நோக்கி, “நீ மாடு மேய்க்கும் பிள்ளைகளுடன் ஒன்றாகக் கலந்து உணவு கொண்டாயே! மேலும், தாழ்ந்த வகுப்பினர் என்று ஒதுக்கப்பட்ட திருப்பாணாழ்வானை ஏற்றுக்கொண்டு பக்கத்தில் வைத்துக் கொண்டாயே! இப்படியெல்லாம் நடந்து கொண்டு நீ மன்னேறி நம்பிக்கு என் தந்தை செய்த அந்திமக் கிரியைகளை ஏற்றுக் கொள்ளவில்லையா? இந்த ஊரில் உள்ளவர்கள் எங்களை விலக்கி வைத்துத் தெரு வாசலில் முன்னைப் போட்டிருக்கின்றார்களே” என்று முறையிட்டாள்.
என் தந்தை செய்தது “சரி” என்றோ அல்லது “சரியல்ல” என்றோ முடிவு கட்டிய பின்பேதான் தேர் அப்பால் செல்ல வேண்டும் என்று மறித்துக் கொண்டு நின்றாள். அவளை அப்புறப்படுத்த யாருக்கும் தைரியம் இல்லை. வடம் பிடித்தவர்கள் வடத்தைக் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டார்கள். தேர் நகராமல் மாலை வரை அங்கேயே நின்றுவிட்டது.
அப்பால் அர்ச்சகர் ஒருவர்க்குப் பெருமானின் ஆவேசம் வந்துவிட்டது அவர், பெரிய நம்பியை விலக்கி வைப்பதற்குக் காரணமாக இருந்தவரை நோக்கி “பெரிய நம்பியை உமது தோளின் மீது தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்பது பெருமானின் ஆணை” என்றார்.
அப்படியே அவரும் முன்னை ஒதுக்கிக்கொண்டு பெரிய நம்பியின் வீட்டுக்குள் புகுந்து அவரைத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு தேர்த் தட்டில் இறக்கிவிட்டார். உடனே “மன்னேறி நம்பிக்கு இறுதி கைங்கரியம் புரிந்ததற்கு பெருமாள் உகந்து அருளினார்” என்றார் அர்ச்சகர். பிறகு மாலை முதலான வரிசைகள் பெரிய நம்பிகட்கு வழங்கப்பட்டன. முன்பு போல வைணவ அடியார் குழுவில் இடம்பெற்றார். தேர் நிலைக்கு வந்தது.
குலச்செருக்கு, செல்வச்செருக்கு கல்விச் செருக்கு ஆகிய இந்த மூன்றையும் “முக்குறும்புகள்” என்பது வழக்கம். இம் மூன்றும் உடையவர்கள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் இறைவனை அடைய முடியாது என்பது நிலையான உண்மை. பரம்பொருளை அடைய வேண்டும் என்பவன் சாதிச் செருக்கை நீக்க வேண்டும். சாதி பாராமல் உண்மைத் தொண்டு செய்பவனை பரம்பொருள் ஏற்றுக்கொண்டு மகிழ்கிறது என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.
குறிப்பு: திரு.பி.ஸ்ரீ.அவர்கள் எழுதிய ஸ்ரீ ராமானுஸஜர் என்ற நூலில் இந்நிகழ்ச்சி உள்ளது.
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 10 (1982) பக்கம்: 38-39
]]>