மந்திர விளக்கம்-பாகம் – 2

பாகம் – 2

மந்திரங்கள் பேராற்றல் உடைய சப்தங்களின் கோவையேயாகும் என்பதைச் சென்ற கட்டுரையில் கண்டோம் அல்லவா? இந்த மந்திர ஒலி அதிர்வுகளைப் (Vibration) பற்றி நம் முன்னோர் கண்டு கூறிய சில அற்புதங்களையும் நாம் அறிந்திருப்பது நல்லது. ஒலி அல்லது சப்தம் என்பது இருவகைப்படும். நம்முடைய காது கேட்கக் கூடிய ஒலிகளைக் கேட்கக் கூடிய ஒலி (Audible Sound) என்றும் மற்றொன்றைக் கேட்க முடியாத ஒலி (Inaudible Sound) என்றும் கூறுகிறோம். நம் காதுகள் கேட்க முடியவில்லை என்பதால் ஒரு குறிப்பிட்ட ஒலியை இல்லை எனக் கூறுவது பெருந் தவறாகும்.

மந்திரங்களைப் பொறுத்தமட்டில் அவை தோன்றுமித்திலிருந்து நாலாவது இடமாகிய வாயில் நாவின் உதவி கொண்டு வருகின்றவரை நான்கு பெயர்களைப் பெறுகின்றன. எல்லா ஒலியும் தோன்றுமிடம் மூலாதாரமே என்று நம் பெரியோர் கூறினர். அங்கே இந்த ஒலி எவ்வித வடிவமும் இல்லாமல் அதிர்வுகள் மாத்திரமாக இருக்கின்றன. இந்த நிலையில் இதற்கு “பரா வாக்” என்ற பெயரைத் தந்துள்ளனர். ஒலிகள் மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவை என்று கண்டோம். பொருள்களின் தோற்றத்திற்கு ஆதாரம் ஒலியே என்றும் பெரியோர் கூறினர். இவ்வளவு ஆற்றல் பொருந்திய ஒலி மூலாதாரத்தில் இருப்பதுதானே முறை? அங்கேதான் குண்டலினி சக்தியும் சுருண்டும் இருக்கின்ற பாம்பின் வடிவில் உறைகின்றது.

ஆற்றல்கட் கெல்லாம் மூலமான குண்டலினி சக்தி உறைகின்ற அதே மூலாதாரத்தில் மற்றோர் ஆற்றலான ஒலியும் உறைவது சாலப் பொருத்தமாகும். இந்த ஒலி வெளிப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும் பொழுது வடிவு பெறாத இந்தப் பிண்ட ஒலி மூலதாரத்தைவிட்டு நாபிக் கமலத்தை (தொப்புள்) அடைகிறது. அப்படி அடைந்த பொழுது இந்த வடிவு பெறாதது மட்டுமன்று, மிக நுண்ணியதாக (சூட்சம தரலமாகவே) உள்ளது. அடுத்து இது அடையும் இடம் இருதய ஸ்தானமாகும். ஓரளவு வடிவு பெற்றுவிட்ட இந்த ஒலிக்கு இப்பொழுது “மத்திமா” என்ற பெயர் சூட்டப்படுகிறது. இப்பொழுதும் இது ஓரளவு சூட்சம நரமாகவே உள்ளது. இறுதியாக இந்த ஒலி கண்டம் எனப்படும் கழுத்தை அடையும் பொழுது வடிவைப் (ஸ்தூல சப்தம்) பெறுகிறது. இப்பொழுது இதற்கு “வைகரீ” என்ற பெயர் தரப் பெறுகிறது. இந்த ஆதி நாதத்தையே “ஓங்காரம்” என்று சொல்வார்கள்.

மந்திரங்கள் இவ்வாறு தோன்றுகின்ற காரணத்தால் “சூட்சமதமம்”, “சூட்சமதாம்”, “சூட்சமம்” என்ற சலனங்கள் முறையே பராவிலும், பஸ்யந்தியிலும், மத்தியமாவிலும் தோன்றுகின்ற காரணத்தால் பல்வேறு மந்திரங்கள் பல்வேறு பயனை அளிக்கின்றன. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் அணுவடிவாய் அமைந்திருக்கின்றன என்றும், அந்த அணுக்கள் ஓயாது சலித்துக் கொண்டே இருக்கின்றன என்றும் விஞ்ஞானம் கூறுகிறது அல்லவா? வேறொரு வகையாகக் கூறுமிடத்துக் குறிப்பிட்ட எந்த ஒரு பொருளும் அணுக்களின் சேர்க்கையால் ஆன காரணத்தால் குறிப்பிட்ட அதிர்வுகளை (Vibrations) உண்டாக்கிக் கொண்டே இருக்கும் அல்லவா? அதாவது பொருள்கள் குறிப்பிட்ட அதிர்வுகள், இந்த முறையை மாற்றி மந்திரங்களின் மூலமாகக் குறிப்பிட்ட அதிர்வுகளை உண்டாக்கினால் அதன் எதிராக இந்த அதிர்வுகளுக்குரிய பொருள் எதுவோ அதை உண்டாக்க முடியும். இதனை விஞ்ஞானம் Riversible Reaction என்று கூறும். இதனை விஞ்ஞான வாய்ப்பாட்டால் கூறவேண்டுமானால் பொருள்கள் –> அதிர்வுகள் –> பொருள்கள் என்று கூறலாம். மந்திரங்கள் மூலமாக மழையைக்கூட வருணசெப மந்திரத்தை ஓதுவதாலும் திருஞான சம்பந்தருடைய “மேகராகக் குறிஞ்சிப்” பண்ணை ஓதுவதாலும் உண்டாக்க முடியும் என்பதை அனுபவ ரீதியாக நம்மில் பலரும் கண்டுள்ளோம் ஒரு குறிப்பிட்ட மந்திரத்தைப் பல்லாயிரக் கணக்கான முறை ஓதி – அதன் ஆற்றலைத் தம்முள் அடக்கிக் கொண்டிருப்பவர்கள் அந்த மந்திரத்தை ஓதிக் குறிப்பிட்ட காரியத்தை நம் கண்முன் செய்துகாட்ட முடியும் உதாரணமாகப் பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் உள்ளவர்களை எங்கோ இருக்கும் ஒருவர் “கருட மந்திர” த்தைச் செபிப்பதன் மூலம் உயிர் பிழைக்கச் செய்கிறார் மந்திரங்களின் ஆற்றலுக்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.

மந்திரங்கள் ஆற்றல் உடையவை என்பதனால் அதனைப் பயன்படுத்துகிறவர் நல்வழியில்தான் பயன்படுத்துவர் என்று சொல்வதற்கில்லை, ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளைப் பிறருக்குச் செய்பவர்களும் – மந்திரங்களின் ஆற்றலை நம்பித்தான் செய்கின்றனர். இதனை எடுக்கின்றவர்களும் மந்திரங்களின் ஆற்றலையே நம்பிச் செய்கின்றனர். எனவே ஆற்றலுடைய மந்திரங்கள் ஒரு மனிதனுடைய உடம்பிலுள்ள ஆற்றல் போலவும், அவன் கையிலுள்ள பணம் போலவும் ஆகும். அவனுடைய ஆற்றலையும், பணத்தையும் துன்பமுற்ற ஒருவரின் துயர் துடைக்கவும் பயன்படுத்தலாம். இதன் எதிராக நன்றாய் இருப்பவர்கட்குத் துன்பம் உண்டாக்கவும் இவற்றைப் பயன்படுத்தலாம்.

அதாவது நன்மை, தீமை என்பவை உடல் வலிமையிலோ, பணத்திலே அடங்கியிருக்கவில்லை. அவற்றைப் பெற்றுள்ளவன் நல்லவனாயின் நற்பயனையும், தீயவனாயின் தீப்பயனையும் விளைவிக்க முடியும். அதேபோல மந்திரங்களை உருவேற்றி ஆற்றலைப் பெறுகின்றவர்கள் – அந்த ஆற்றலை எந்த வழியில் பயன்படுத்துகிறார்கள் என்பது, அவர்கள் பண்பாட்டைப் பொறுத்ததாகும்.

நூற்றி எட்டுப் போற்றித்திருவுருவில் உள்ள இரண்டாவது மந்திரம் “ஓங்கார ஆனந்தியே போற்றி ஓம்” என்பதாகும். அன்னை ஓங்கார வடிவினன் என்பதை “மகா மந்திராயை” என்ற 226 ஆவது லலிதா சகஸ்ரநாம மந்திரமும், “ஏகாட்சர்யை” என்ற லலிதாதிரிசதி 22 ஆவது மந்திரமும் கூறுவதைக் காணலாம். மூலாதாரத்திலும், நாபிக் கமலத்திலும் மந்திர ஒலி இருக்கும்போது சூட்சுமதா வடிவில் உள்ளன என்று கூறினோம் அல்லவா? இந்த இரண்டுமே அம்பாளின் சொரூபம் என்பதைச் “சூஷ்ம ரூபிண்யை” (467”) “நாத ரூபிண்யை” என்ற லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் இரண்டும் வலியுறுத்துவதைக் காணலாம். இனி, அன்னை, சித்து வடிவமாக இருத்தலின் – அதற்கு இயல்பாக அமைந்த ஆனந்த வடிவாகவே உள்ளான். “சச்சிதானந்த ரூபிண்யை” என்ற லலிதாசகஸ்ர 700வது மந்திரம் கூறுவதையும் காணலாம். ஒரு பொருள் எந்த இயல்பு பெற்றிருக்கிறதோ – அந்த இயல்பைத்தான் அதனிடத்தில் இருந்து பெறமுடியும் என்பது தர்க்கம். எனவே “ஆனந்த ரூபிணி”யாக இருக்கின்ற அன்னையிடம் அடைக்கலம் புகுகின்றவர்கள் ஆனந்தத்தைப் பெறுவதில் ஐயம் இல்லை.

இங்கு ஆனந்தம் என்று கூறப்பெறுவது நம் அன்றாட வாழ்வில் அனுபவிக்கின்ற மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம் என்பவை போன்ற நன்று மகிழ்ச்சி முதலிய அனைத்தும் அதன் முடிவில் துயரம், கவலை முதலியவற்றைத் தந்தே தீரும். இவற்றை இரட்டைகள் என்று கூறுனர். ஒன்றின் முடிவு அதன் எதிர்மறையாகத்தான் இருக்கும். இதன் எதிராக ஆனந்தம் என்பது எதிர்மறை இல்லாதது. துன்பக் கலப்பே இல்லாதது. இதனை ஒருவன் பெற வேண்டுமானால் இறையருள் மூலமாகத்தான் பெற முடியும். இறைவன் ஒருவன்தான் இயல்பாகவே கட்டுகளிலிருந்து நீங்கியவன் ஆகலின் ஆந்த வடிவினன் என்று கூறப் பெறுகிறாள். அன்னை ஆனந்த வடிவினள் என்பதையே இந்த மந்திரம் தெரிவிக்கின்றது. ஆனந்த சொரூபியாகிய அன்னை அடைக்கலம் புகுகின்றவர்கள் அந்த ஆனந்தத்தில் நினைப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? இதனைத்தான் மணிவாசகர் “அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெற்றேன் பான்” என்று கூறுகிறார். இறைவனிடம் அடைக்கலம் புகுந்தவர்கள் “சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்” என்றும் திருவாசகங் கூறுகிறது. இக்கருத்தக்கள் அனைத்தையும் மனத்துட் கொள்வதற்காகவே “ஓம் ஓங்கார ஆந்தியே போற்றி ஓம்” என இரண்டாவது மந்திரம் அமைந்து உள்ளது.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 22-24

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here