கண் பார்வையின் சக்தி
“ஒரு மனிதனின் கண் ஒளிக்கு வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”
“ஆன்மிகத் துறையிலும் பொறாமை பொச்சரிப்பு உண்டு”
என்பன அன்னையின் அருள்வாக்கு
“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.
மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.
கண் பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின் மன நிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட்பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம்.
பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு.
கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண் திருஷ்டி என்று கூறுவா்.
திருஷ்டியால் பாதிப்பு எற்படும் என்ற நம்பிக்கை பல நாட்டு மக்களிடம் இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டு ஆங்கிலேயா்கள், குதிரை லாடத்தைத் தலைகீழாக வாசல் நிலைப்படியின் மேற்பகுதியில் அடித்து வைக்கிற பழக்கம் இன்னும் உண்டு.
அரபு நாடுகளில் வீட்டின் தலை வாசலில் சிறிய வெங்காயத்தைத் துணியில் முடிந்து தொங்க விடுகின்றனா்.
கண் திருஷ்டி மனிதா்களை மட்டுமில்லாமல் மனிதனோடு சோ்ந்து வாழும் பறவை, விலங்குகளையும் பாதிக்கும். அவா்தம் கட்டடங்களும் பாதிக்கப்படும். பயிர் பச்சைகளும் கூடப் பாதிக்கப்படும்.
சின்னஞ்சிறு குழந்தைகளை நீராட்டி, சிங்காரித்து, முகப்பவுடா் பூசி கடைசியாக முகத்தில் திருஷ்டிப் பொட்டு வைக்கிறார்கள்.
நல்ல பண்பட்ட மனம் கொண்ட பெண்கள் குழந்தைகளைப் பார்த்தால் பொறாமை அடையமாட்டார்கள். குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், குழந்தைகள் பிறந்து, இறந்துபோன நிலையில் பரிதவிக்கும் பெண்கள், விதவைப் பெண்கள், இளங்குழந்தைகளைக் கண்டு ஏங்குவா். பொறாமைப் படுவார்கள். அவா்களால் திருஷ்டி ஏற்படும்.
திருமணம் ஆகாத இளைஞா்களைக் கண்டு கன்னிப் பெண்கள் சிலா் மனத்தளவில் ஏங்கும் ஏக்கத்தால் திருஷ்டி ஏற்படும்.
அவ்வாறே அழகான கன்னிப் பெண்களின் அழகைக் கண்டு இளைஞா்கள் ஏங்கும் ஏக்கமும் திருஷ்டி தோஷத்துக்குக் காரணம் ஆகும்.
குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லாத மலட்டுப் பெண்கள், குழந்தைகளை அடிக்கடி பறி கொடுத்த பெண்கள், குழந்தைப் பேறே இல்லாத விதவைப் பெண்கள் நிறைமாதக் கா்ப்பிணிகளைக் கண்டு பொறாமையால் மனம் குமுறுவது உண்டு. அதனாலும் திருஷ்டி வரலாம்.
புதிதாக வீடு ஒன்று கட்டுகிறீா்கள். அது உங்கள் நண்பா்கள், சொந்தக் காரா்கள் சிலரிடையே பொறாமையையும் ஏக்கத்தையும் தூண்டலாம். அதனாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும்.
நகரங்களில் பெரிய பெரிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அவ்வாறு கட்டும்போது திருஷ்டி ஏற்படாதவாறு தட்டிகள், தடுக்குகளால் மறைக்கப்பட்டுக் கட்டடப் பணிகள் நடத்தப்படுகின்றன.
வியாபாரத் துறையிலும், தொழில் துறையிலும் ஒருவா் வளா்ச்சியைக் கண்டு அத்துறையில் இருப்பவா்களே பொறாமைப் படுவா். அவா்களாலும் திருஷ்டி தோஷம் ஏற்படும்.
நம்மோடு உயிருடன் வாழ்கின்ற மனிதா்களின் பொறாமையும், பார்வையும் மட்டும்தான் நம்மைப் பாதிக்கும் என்பதில்லை. இறந்துபோய் நற்கதி அடையாத ஆவிகள் உண்டு. அந்த ஆவிகளும் பசி, தாகம், பொறாமை உணா்ச்சி, விருப்பு, வெறுப்புகள் உண்டு. அத்தகைய தீய ஆவிகளின் பொறமையாலும் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு.
கடுந்தவம் செய்வோர், யோகப் பயிற்சியில் முன்னேறி வருவோர் ஆகியவா்களைக் கண்டு தேவா்களும், பொறாமைப்படுவார்கள் எனப் பதஞ்சலி முனிவா் சொல்கிறார். தேவா்கள் என்பவா்கள் யார்? மனித நிலையைவிடச் சற்று முன்னேறியவா்கள். புண்ணியப் பலனால் முன்னேறிச் சென்றவா்கள். அவ்வளவே! தவத்தில் ஈடுபடுபவா்களும் யோகிகளும் நம்மைவிட உயா்ந்த நிலை பெற்றுவிடுவார்களோ என்று கருதி யோகிகளும், தவம் புரிகிறவா்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவார்களாம். எனவே தேவா்களின் பொறாமையாலும் இறைவன் அடியார்களுக்குத் திருஷ்டி தோஷம் ஏற்பட வாய்ப்புண்டு.
நம் நாட்டு மக்களிடையே திருஷ்டி தோஷங்களினால் உண்டாகும் பாதிப்புக்களிலிருந்து விடுபடப் பல்வேறு பரிகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
- புதிதாகக் கட்டி முடிக்கப்படும் வீடுகளின் முகப்பில் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துப் பூசணிக்காய்களைத் தொங்க விடுவார்கள்.
- புதிய கட்டடங்களிலும், கரும்புத் தோட்டம், பழத் தோட்டங்களிலும் பெரிய துணி பொம்மைகளை – பெரிய மீசை வரைந்து தொங்க விடுவார்கள்.
- லாரிகள், பஸ்கள், கார்களின் முன் புறத்தில் கம்பளிக் கயிறுகளில் காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம், படிகாரம் போன்றவற்றைச் சோ்த்துக் கட்டித் தொங்க விடுவார்கள்.
- திருஷ்டியால் பாதிக்கப்பட்ட பெண்ணை வீட்டுக் கூடத்தின் நடுவில் வடக்கு முகமாக நிற்க வைத்து, சிறிது உப்பும், ஆறு மிளகாய் வற்றலும் இடக்கையில் வைத்துக் கொண்டு, தலை முதல் கால் வரை முன்னும் பின்னும் உடல் முழுவதும் தடவுவார்கள். பின் தலையைச் சுற்றி இடப் பக்கமாக மூன்று முறையும், வலப்பக்கமாக மூன்று முறையும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
- சிறு பிள்ளைகளுக்குப் பொதுவாகத் தாய்மார்கள் திருஷ்டி கழிப்பது வழக்கம். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் பக்கத்து வீட்டுக் கூரையிலிருந்து சிறு பனை ஓலை, எடுத்து வந்து, அத்துடன் நடுத்தெருவில் நின்று வலது காலை ஊன்றி ஒரு சுற்றுச் சுற்றித் தன் கால் மண் சிறிது எடுத்து அதனுடன் சிறிது உப்பு, மிளகாய் தலைமுடி சில எடுத்து ஒன்று சோ்த்துப் பிள்ளைகளை வலமாகவும், இடமாகவும் மூன்று முறை தலையைச சுற்றி தூ தூ தூ என மூன்று முறை காரி உமிழ்ந்து பின் அதனை அடுப்பில் இட்டுப் பொசுக்கிப் பிள்ளைகளக்குத் திருஷ்டி கழிப்பார்கள்.
- அருகில் கூரை வீடு இல்லாவிட்டால், வெறுமனே துடைப்பத்தில் சில குச்சிகளை எடுத்துக் கொளுத்தி அந்தக் கொள்ளிக் கட்டுடன் திருஷ்டி கழித்துத் தெருவில் போடுவார்கள்.
- சிலா் பசுமாட்டின் கோமயம் பிடித்து வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தெளிப்பார்கள்.
- சிலா் பாட்டுப் பாடி திருஷ்டி கழிப்பார்கள்.
- “தாய் கண்ணும் தகப்பன் கண்ணும் உற்றார் கண்ணும் உறவினா் கண்ணும் பெற்றார் கண்ணும், பெறாதவா் கண்ணும் மற்றார் கண்ணும் மறைந்து நின்றவா் கண்ணும் கொள்ளிக் கண்ணும் கோணல் கண்ணும் பிள்ளையைப் பிடித்த பேய்க் கண்ணும் வந்த திருஷ்டி போகட்டும்” என்று பாடிக் கொண்டே திருஷ்டி கழிப்பார்கள்.
இது போலத் திருஷ்டி தோஷங்களை நீங்கப் பல்வேறு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இவற்றுக்கென மந்திரங்களும் சக்கரங்களும் உண்டு.
சில அனுபங்கள்
செக்கு ஆட்டியபோது….
எனக்குத் தெரிந்த வாணியா் இனத்து அன்பா் ஒருவா். கடலை, எள் இவற்றைச் செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து விற்று வாழ்ந்து வந்தார்.
ஒருமுறை செக்கில் மாட்டைப் பிணித்து, செக்காட்டிக் கொண்டிருந்தார். பதமாக எண்ணெய் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தது.
அந்த நேரத்து வழிப்போக்கன் ஒருவன் அங்கே வந்தான். பரவாயில்லையே இவ்வளவு எண்ணெய் வருகிறதே… பதமாக வருகிறதே என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் சொல்லிவிட்டுப் போனான்.
அவன் அங்கிருந்து அகன்ற அடுத்த கணம் எண்ணெயும் பிண்ணாக்கும் பிசைந்து கொண்டபடி வந்ததே தவிர பதமான எண்ணெய் வரவில்லை.
வழக்கமாக இரண்டு மணி நேரத்துக்குள் செக்காட்டி எண்ணெய் எடுத்து விடுவார்.
அந்த ஆசாமியின் திருஷ்டியால் அன்று நாள் முழுவதும் எண்ணெய் எடுக்க முயற்சி செய்தும் எண்ணெய் வராமல் வீணாகியது.
அடியோடு விழுந்த முருங்கை மரம்
செய்யூரில் நான் பணிபுரிந்து வந்த சமயம்.
ஒரு நாள் நண்பா்களுடன் தெருவில் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே மின் வாரியக் கட்டடம் ஒன்று அதன் அருகில் ஒரு முருங்கை மரம்! நன்கு பூத்துக் காய்த்து வளமாக இருந்தது. எங்களுடன் வந்த ஒருவா் சொன்னார் “இதோ பாருப்பா! இந்த மரம் எவ்வளவு அதிகமாகக் காய்த்துக் குலுங்குகிறது பார்! நல்ல ராசியான மரம்தான் என்று சொன்னார். உடனிருந்த என் நண்பா் அப்படியா…. ! இப்பொழுது பாருங்கள் என்று துப்பாக்கி வைத்துக் கொண்டு சுடுவது போல, மரத்தைப் பார்த்து டுமீல், டுமீல் என்று கூறினார்.
ஒரு நாலடி தூரம் நடந்திருப்பார்… மளமள என்று கிளை முறியும் சப்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தோம். அந்த மரம் அடியோடு முறிந்து விழுந்தது. காரணம் கண் திருஷ்டி.
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை
ஒருநாள் வீட்டில் பழைய பேப்பா்களை எல்லாம் சோ்த்து வைத்துக் கொண்டு தேவையானது, தேவையற்றது எனப் பிரித்துச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்போது முப்பது வருடத்துக்கு முன்பு நடந்த எங்கள் திருமணப் பத்திரிகை கையில் அகப்பட்டது.
அம்மா அருளால் திருமணம் ஆகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றது குறித்துச் சந்தோஷத்துடன் பேசிக் கொண்டிருந்தோம்.
இந்த மகிழ்ச்சியைப் பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் பகிர்ந்து கொள்ள எண்ணி, அந்தத் திருமணப் பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு, பக்கத்து வீட்டுக்குப் புறப்பட்டாள் என் மனைவி.
இதெல்லாம் வேண்டாம் எல்லோருக்கும் மனசு ஒன்றுபோல இருக்காது என்று சொல்லியும் கேட்காமல், திருமணப் பத்திரிகையை எடுத்துச் சென்று பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் காட்டினாள்.
அவா், ஆ! அப்படியா உங்களுக்குத் திருமண நடந்து 30 வருடங்கள் ஆகிவிட்டதா…. என்று வாய் பிளந்து ஆச்சரியத்துடன் கேட்டார்.
அன்று மாலையே எங்களுக்குள் கணவன், மனைவியிடையே சாதாரணமான பேச்சில் ஆரம்பித்து, ஒரு பிரச்சனை ஏற்பட்டுச் சண்டை வந்து, என் மனைவி கோபித்துக் கொண்டு தன் மகள் வீட்டுக்குச் சென்று விட்டாள். ஒரு வாரம் வரை எங்களுக்குள் பிரிவு நேரிட்டது.
அவள் சமாதானமடைந்து திரும்பி வந்தவுடன் சொன்னேன். திருமணப் பத்திரிகையைக் காண்பித்து அதன் விளைவை அனுபவித்தாய் அல்லவா…. சில விஷயங்களை ஆள் பார்த்து அவா்கள் மனசு பார்த்துச் சொல்ல வேண்டும்! புரிந்ததா! என்றேன்.
குடும்ப நல வேள்வியின் போது கிடைத்த அனுபவம்
மும்பையில் ஒரு குடும்பம் தங்கள் வீட்டில் குடும்பநல வேள்வி நடத்தித் தர வரமாறு என்னை அழைத்தார்கள். அங்குச் சென்று வேள்விப் பணியில் ஈடுபட்டபோது, வித்தியாசமான ஓா் அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
தீய ஒலி ஒன்று கேட்டபடி இருந்தது. ஏப்பம் விடுவது போலவும் கொட்டாவி விடுவது போலவும், சப்தம் வந்தபடி இருந்தது. வேள்விப் பூஜை நடக்கும் போதும் இந்த சப்தம் வந்தபடி இருந்தது. எங்கிருந்து இந்த சப்பதம் வருகிறது என்பதை மட்டும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், ஏதோ ஒரு தீய சக்தி அங்கு உலாவி வருவதை மட்டும் என்னால் உணர முடிந்தது.
நல்லபடியாக வேள்வியை முடித்து, அந்தக் குடும்பத்தாரை அழைத்து திருஷ்டி கழித்தேன். அதன்பின் அந்த சப்தம் நின்று விட்டது.
ஒரு வாரம் கழித்து அந்தக் குடும்பத்தாரிடமிருந்து செய்தி வந்தது.
ஆறு மாதமாக வேலைக்குப போக முடியாத சூழ்நிலையிலிருந்த எங்கள் மகன் இப்போது வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான். குடும்பத்தில் நிம்மதி ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்கள்.
திருஷ்டி கழிப்பது பற்றி அம்மா கூறிய முறைகள் சில….
- அமாவாசை, பெளா்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டுக்குத் திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவா்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம்.
- வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீா் தெளிக்க வேண்டும்.
- எலுமிச்சம் பழத்தை நான்காகப் பிளந்து அதில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். கல்யாண பூசணிக்காயில் துளையிட்டு அதில் குங்குமம் போட்டுக் குழப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பூசை அறைக்குச் சென்று, அம்மா படம், குரு படங்களுக்குத் தீபாராதனை காட்டி எலுமிச்சம் பழத்தால் திருஷ்டி கழிக்க வேண்டும். எப்படித் தெரியுமா? வலமிருந்து இடமாக ஒரு சுற்று, இடமிருந்து வலமாக ஒரு சுற்று, மேலிருந்து கீழாக ஒரு முறை இவ்வாறு சுற்றி எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
இவ்வாறே கல்யாண பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி வைத்து மூன்று முறை திருஷ்டி சுற்ற வேண்டும்.
- வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் வலமாக வந்து, திருஷ்டி காண்பித்து, தெருவுக்கு வந்து நின்று, வீட்டை நோக்கி நின்று எலுமிச்சம்பழம், கல்யாண பூசணிக்காய் திருஷ்டி கழித்து பூசணிக்காயை உடைக்க வேண்டும்.
- உங்கள் வீட்டைச் சுற்றி வர வாய்ப்பிருந்தால் வீட்டையும் ஒரு சுற்று சுற்றி வந்து திருஷ்டி கழிக்கலாம்.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி கன்னியப்பன், மத்திய வேள்விக்குழுத் தொண்டா் அன்னையின் வேள்விகளும் அற்புத அனுபவங்களும் strong> ]]>
ஒம் சக்தி, திருஷ்டி கழிக்கும் முறைகளை விளக்கமாக கொடுத்த சக்தி கன்னியப்பன், மத்திய வேள்விக்குழுத் தொண்டர்க்கு நன்றி. ச.ச.வேலு , சவுதி அரேபியா,,,,,,, ஒம் சக்தி,
ஒம் சக்தி, திருஷ்டி கழிக்கும் முறைகளை விளக்கமாக கொடுத்த சக்தி கன்னியப்பன் மத்திய வேள்விக்குழுத்தொண்டர் அவர்களுக்கும்,ஆதிபராசத்தி இணைய தளம் தொண்டிற்கும் நன்றி. ச.ச.வேலு , சவுதி அரேபியா,ஒம் சக்தி