எல்லோரையும் போல சாதாரண மனம்தான் எனக்கும்! வாழ்க்கையில் துன்பம் ஒன்று
வரும்போது இறைவனைத் துதிப்பது, சந்தோஷத்தில் துள்ளும் போது இறைவனை மறப்பது, எதையும் ஆராய்ச்சி பண்ணுகிற புத்தி!

இப்படிப்பட்ட நான் ஆறு மாதங்களுக்கு முன்னால் (1994 அக்டோபா்) மருவத்தூர் சென்று அன்னையைத் தரிசித்தேன். அம்மாவிடம் அருள்வாக்கு கேட்பதற்குப் போய் உட்கார்ந்தவுடனே அவள் முதல் வாக்கியமே சவுக்கடி!

“எல்லா இடத்திலும் அலைந்து திரிந்து ஒன்றும் நடக்காமல், பல கஷ்டங்களையும் நஷ்டங்களையும் அனுபவித்து விட்டுக் கடைசியாக என்னிடம் வந்திருக்கிறாய் மகனே! அம்மாவை இறுக்கிப் பிடித்துக்கொள் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள்.

அன்றைக்கு என் மனத்தில் விழுந்த அருள்வாக்கு என்ற வித்து இன்று வேர்விட்டு வளா்ந்து படா்ந்து மரமாகி மனமெல்லாம், உடம்பெல்லாம் அவள் நினைவாகவும். செயலாகவும் வெளிப்பட்டு உலவுகிறது.

என்னுடைய பின்னணி இதுதான்!

பல்லாயிரம் இந்தியா்களைப் போல பல காதம் கடந்து வெளிநாட்டில் போய் வேலை பார்த்தேன். அந்த வேலையில் ஆத்ம திருப்தியின்றி அலைந்து கொண்டிருந்தேன். என்னுடைய தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம்.

தெய்வ அருளின் உதவியை நாடாமல் மனித முயற்சியில் மட்டுமே நம்பிக்கை கொண்ட நான், முனைப்போடு வேறு வேலை தேடிக் கொண்டிருந்தேன். விளைவு… தோல்வி மேல் தோல்வி! கடைசியில் தோல்வியின், அடிதாங்காமல் வேலையை ராஜினாமா செய்ததுதான் மிச்சம்.

ஆன்மிகத் துறையில் ஈடுபாடு கொண்ட நண்பா்களின் நட்பு கிடைத்தது. அதனால் இறைவனை நம்பலாம் என்ற நினைப்பு! அந்த நினைப்பிற்குப் பக்க பலமாக, அடித்தளமாக இருந்தது என் மனைவியின் பூரண பக்தி! அன்னையிடம் அவளுக்கு அளவிறந்த ஈடுபாடு! இத்தனைக்கும் அவள் தமிழ்நாட்டுக்காரி அல்ல! இலங்கை
யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவள்.

என்னைத் தினமும் ஓம்சக்தி! ஓம்சக்தி! என்று ஒரு பக்கமாவது எழுதுங்கள்! என்று வற்புறுத்துவாள். சரி! என்று எழுதத் தொடங்கினேன். வேலை கிடைக்க வேண்டுமே….!

தினம் தினம் இப்படி ஓம்சக்தி! என்று ஒரு பக்கம் எழுதத் தொடங்கிய நாள் முதல் அது என்னவோ ஒரு பிரியம்….! ஒரு ஈடுபாடு….. ஒரு நாட்டம்…… அம்மாவிடம் வரத் தொடங்கி விட்டது. இந்தப் பிரியத்தின் காரணமாக அம்மாவிடம் அதிக உரிமை கொண்டாட மனம் துணிந்து விட்டது.

அதனால்…. நான் வெளியில் போய் எங்கும் வேலை தேடி அலைய மாட்டேன் இனி நீயாக ஒரு வேலை தேடிக் கொடு! என்று கேட்டுக் கொண்டு சும்மா இருந்து விட்டேன்.

“இது அசட்டுத்தனம்! உங்கள் முயற்சியும் தேவை! வேலைக்காக விண்ணப்பங்களை அனுப்புவது உங்கள் முயற்சி! அந்த முயற்சிகூட நீங்கள் செய்யாமல் இருந்தால் எப்படி……..?” என்று மனைவி எடுத்துக் கூறினாள். அவளுடைய வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

என் மனத்தில் ஒரு நெருடல்! “அன்னையை இறுக்கிப் பிடித்துக் கொள்! நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அவள்தானே சொல்லிக் காட்டினாள்? அதில் அசையாத நம்பிக்கை வந்து விட்டது.

“இல்லை….! இனி நான் வேலை தேடப் போவதில்லை. இராஜினாமா கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் ஒரு மாதமே மீதி உள்ளது. இதற்குள் அம்மா என்னைத் தேடி வந்து வேலை கொடுப்பாள். ஆகவே இனி நான் எங்கும் விண்ணப்பிக்கப் போவதில்லை” என்று மனைவியிடம் சொல்லிவிட்டேன். இந்த நம்பிக்கையில் ஒரு அசைக்க முடியாத தீவிரம்.

எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை என் மனைவிக்குப் போய் விட்டது. சரி! அப்படியானால் இந்த மாதம் இறுதியில் இந்தியா திரும்ப ஏற்பாடுகளைச் செய்கிறேன் என்று கூறினாள். நான்
அதைப் பொருட்படுத்தவில்லை. சில நாள் கழித்து….

அன்று டிசம்பா் மாதம் 23 ஆம் தேதி புதன் கிழமை காலை 11.00 மணி இருக்கும். தொலைபேசி மணி அடித்தது. எடுத்தேன்.

என்னுடன் சில ஆண்டுகட்கு முன்னால் வேறொரு கம்பெனியில் வேலை பார்த்த என் நண்பர்தான் அழைத்தார். எனக்கும் அவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடா்பே இல்லாமல் போய்விட்டது.

“என் முகவரி எப்படித் தெரிந்தது?” என்று கேட்டேன். “உறவினா் ஒருவரை விசாரித்துத் தெரிந்து கொண்டேன்” என்றார்.

விஷயம் என்ன என்று கேட்டேன். “உங்களை இன்று மாலை 4.00 மணிக்குச் சந்திக்க விரும்புகிறேன். ஒரு முக்கியமான சமாச்சாரம் பேச வேண்டும். உங்கள் இருப்பிடத்துக்கு வருவதற்கான அடையாளத்தைச் சொல்லுங்கள்” என்றார்.

வீட்டின் அடையாளத்தைக் கூறிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டேன். என்ன சமாச்சாரம் பற்றிப் பேச வரப்போகிறார்…. என்று தெரியாமல் மனம் குறுகுறுத்தது.

இரவு 8.00 மணி இருக்கும். வாசற்கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. சென்று திறந்தேன். காலையில் என்னோடு தொலைபேசியில் பேசிய நண்பர்தான் வந்தவா்.

வந்தவா் வேறு எதைப் பற்றியும் விசாரிக்காமல், “எங்கள் கம்பெனி அலுவலகத்தில் ஒரு வேலை காலி இருக்கிறது. உங்கள் தகுதிக்குப் பொருத்தமான வேலை தான்! உடனே ஒரு விண்ணப்பம் எழுதிக் கொடுங்கள். சான்றிதழ்களின் நகல்கள் கொடுங்கள்!” என்று கேட்டு, எல்லாவற்றையும வாங்கிக் கொண்டு, “இது சம்பந்தமாக அப்புறம் வந்து பேசுகிறேன்” எனக் கூறவிட்டு அவசர அவசரமாகப் பறந்து விட்டார்.

இராஜினாமா செய்பவா்கள் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் கொடுத்துவிட வேண்டும் என்பது விதி.

அதன்படி கொடுத்து இரண்டு மாதங்கள்
ஆகிவிட்டன. இன்னும் ஒரு மாதம் மட்டுமே வேலை பார்க்கலாம் என்ற நிலையில் என் அலுவலகத்தில் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்த சமயம் அது!

அன்று 24.12.92 காலை 10.00 மணிக்கு அலுவலகத்திலிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. முன்னா் குறிப்பிட்ட அந்த நண்பா்தான் பேசினார். “எங்கள் மேலதிகாரி உடனடியாக உங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே புறப்பட்டு வாருங்கள்” என்றார்.

எங்கள் அலுவலகத்தில் ஒரு மணி நேரம் வெளியே சென்றுவர கிளம்பினேன். பேட்டி நடந்தது. உடனடியாக நான் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டேன். நான் பார்த்த பதவியை விட உயா்ந்த பதவி. இரண்டரை மடங்கு கூடுதலான சம்பளம்.

சந்தோஷமும் துள்ளலுமாக அன்று மாலை ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றேன். அவா் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவா். என் நலனில் நாட்டம் கொண்டவா். அவரை நான் சந்திக்கச் சென்றபோது அகமும் முகமும் மலர வரவேற்றார். “உங்களை நானே வந்து பார்க்வேண்டும் என்று எண்ணியிருந்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்! நேற்று என் பூசையறையில் நடந்த அற்புதம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்” எனக் கூறிச் சொல்லத் தொடங்கினார்.

“நான் வழக்கமாகத் தினமும் மாலையில் குளித்துவிட்டுப் பூசை செய்து தியானம் இருப்பது வழக்கம் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே……

நேற்று நான் பூசையை முடித்து விட்டுத் தியானத்தில் இருந்தபோது ஏனோ உங்கள் நினைவு வந்தது. அவரசப்பட்டு இராஜினாமா எழுதிக் கொடுத்துவிட்டாரே…… என்று எண்ணினேன்.

அப்போது ஒருவா் என் அறையில் வந்து, “அவனது பிரச்சினை பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அவனது பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறிவிட்டு மறைந்து போய்விட்டார்.

அவா்
எப்படி இருந்தார் தெரியுமா? இப்படி இப்படி இருந்தார்” என்று விவரித்தார். அந்த அடையாளங்களுக்குரியவா் யார் தெரியுமா……?

நம் அடிகளார்தான்!

“அம்மாவும் அடிகளாரும் வேறு வேறு அல்ல” என்பதை அவா் அனுபவத்தைக் கேட்டு எனக்கு உடம்பு சிலிர்த்துப் போயிற்று.

என் நண்பா் என் வீடு தேடி வந்து விண்ணப்பம் வாங்கிச் சென்ற நேரமும் இரவு 8.00 மணி! இந்த நண்பா் பூசை, தியானம் முடிக்க அடிகளார் காட்சியளித்த நேரமும் அதே இரவு 8.00 மணிதான்.

அம்மாவின் கருணையை எண்ணி எண்ணி நெகிழ்ந்து போனேன்.

அம்மாவை நாங்கள் இறுக்கிப் பிடித்த விதம் இதுதான்.

என் மனைவி தினமும் 1008 போற்றி சொல்லி வழிபட்டு வருகிறாள். தினமும் ஒரு பக்கம் “ஓம் சக்தி“ மந்திரம் எழுதி வருகிறாள்.

நானும் தினம் தவறாமல் ஓம் சக்தி எழுதி வருகிறேன்.

எங்கள் அரை குறை பக்திக்கே இவ்வளவு கருணை காட்டுகிற அன்னை, அவள் கூறுகிற தொண்டுகளையெல்லாம் செய்து வந்தால்……. அதிக பக்தி கொண்டு சரணடைந்தால்…….. அவற்றால் கிடைக்கும் பலன்களை எண்ணிப் பாருங்கள்!

அம்மா தன்னை ஒளித்துக் கொண்டு அடிகளார் உருவில் நடமாடி வருகிறாள். பக்தா்களே புரிந்து கொள்ளுங்கள்!

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி. சங்கரன், மஸ்கட்

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13 (பக்கம் 38 – 42)

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here