கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார். அவரது சக்தி எங்கும் ஊடுருவியுள்ளது. எல்லாம் கடவுள் செயல். கடவுள்அருளை நாடித் துன்பத்தை நீக்கிக் கொள்ளலாம். இன்பம் அடையலாம். இந்தப் பிறப்பில் நன்மை பெறலாம். மறுபிறப்பிலும் நன்மை அடையலாம். பிறவியே இல்லாமல் தப்பித்தும் கொள்ளலாம்.

அந்த அருளைப் பெறுவது எப்படி? கிணற்றில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்தால் மட்டும் தாகம் தீர்ந்து விடுமா? ஒன்று கிணற்றில் இறங்கித் தண்ணீர் குடிக்க வேண்டும். இன்றேல் வாளியும், கயிறும் கொண்டு வந்து இறைத்தாவது தண்ணீர் முகந்து குடிக்க வேண்டும். அதுபோல கடவுள் அருளைப் பெறுவதற்கும் முயற்சி வேண்டும். அதற்கான சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய ஆன்மிகப் பயிற்சிகளையே ஆன்மிக சாதனைகள் என்பர். சாதனை என்றால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட காரியம் என்ற பொருள் அல்ல. பயிற்சி என்பது அதற்குப் பொருள்.

அத்தகைய பயிற்சிகளுள் ” மந்திர யோக சாதனை “ என்பதும் ஒன்று. மந்திரயோகம் என்பதும் ஒரு வகையில் விஞ்ஞானம் தான். இடைவிடாத மந்திரப் பயிற்சியால் – இடைவிடாது கடவுளை நினைக்கும் நினைப்பால்- ஒருவன் பிறப்பு – இறப்பு என்னும் வாழ்க்கைச் சுழலிருந்து விடுபட முடியும். அத்தகைய நினைப்பை உண்டாக்கிக் கொள்ளும் பயிற்சிகளுள் ‘மந்திர யோகம்’  என்பதும் ஒன்று.நாள் தோறும் இடைவிடாமல் 108 தடவை, 1008  தடவை மந்திரங்களை எழுதிப் பயிற்சி செய்வோர் உண்டு.

இன்றைக்கும் விவரம் தெரிந்த குடும்பங்களில் ராமஜெயம், ஓம் நமசிவாய!  ஓம் சரவண பவ!  ஓம் நாராயணாய நம! ஓம் சக்தி !எனத் தங்கள் விருப்பத்திற்கு உகந்தவாறு மந்திரங்களை எழுதுவது வழக்கம். நீண்டநாள் அமைச்சராகவும், சில காலம் முதலமைச்சராகவும் இருந்த ஒருவர் தலைமைச் செயலகம் சென்றதும், ஒன்பது முறை ராமஜெயம் என்று எழுதிவிட்டு அதன் பிறகே பைல்களை பார்ப்பது என்ற வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். அவருடைய வெற்றியின் ரகசியத்துக்கும் அந்த மந்திர ஜெபத்துக்கும் தொடர்பு உண்டு.

இவையெல்லாம் மூடநம்பிக்கை என்று கருதுவன் கருதிக் கொள்ளட்டும். அந்த மந்திரங்களை எழுதி நன்மைகளையும், பலன்களையும் அடைய வேண்டும் என்று கருதுகிற உள்ளங்கள் நன்மை அடையட்டும்!

யார் காயத்திரி மந்திரத்தின் அதி தேவதைக்கும் மேலாக இருப்பவளோ……

யார் இராமனுக்கு இராவணனை வெல்லும் சக்தி கொடுத்தாளோ……

யார் சீதையை நெருப்பிலிருந்து காப்பாற்றி அருளினாளோ…..

யார் சீதையை நெருப்பிலிருந்து காப்பாற்றி அருளினாளோ….

யார் முருகனுக்குச் சூரனை வெல்ல வேல் கொடுத்தாளோ……

யார் சிவபெருமானுக்குத் தாயான தத்துவமாக விளங்குகிறாளோ…

யார் தன்னிடமிருந்து மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து, ஜந்தொழில்களையும் நடத்தும் தெய்வங்களையும் இயக்கிக் கொண்டு வருகிறாளோ…

அந்த ஆதிபராசக்தியே மேல்மருவத்தூர் தலத்தில் அடிகளாராக அவதாரமாகி வந்து அற்புதம் புரிகிற காலகட்டத்தில் நமக்கு அருளியுள்ள மூலமந்திரம் மகா சக்தி வாய்ந்தது. உன்னதமானது. ஆதலின் அவள் அருளிய மந்திரங்களை நாடோறும் 108 தடவை, 1008 தடவை எழுதி லட்சத்து எட்டு தடவை எழுதி முடிப்பது என்று பயிற்சிகளை மேற்கொண்டு வாருங்கள்! அதன் பயன்களை நீங்களே அனுபவத்தில் உணர்வீர்கள்!

விழுப்புரத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர், அன்னையின் மந்திரத்தைக் கோடி தடவை எழுதி முடிப்பது என்ற விரதம் எடுத்துக் கொண்டு, 50 லட்சம் முடித்திருக்கிறார். அவருக்கு அன்னை கனவிலும்,நனவிலும் பல அனுபவங்களை கொடுத்து அற்புதங்கள் செய்து வருகிறார். எந்த முயற்சியும் செய்யாமல் அம்மா நம்மைக் கவனிக்கவில்லை. என்னிடம் பாராமுகமாக இருக்கிறாள் என்று புலம்புவதில் பயனில்லை.

அம்மாவின் இரக்கத்தைச் சம்பாதிக்க நாம் இதுவரை என்னென்ன முயற்சிகளை செய்திருக்கிறோம்?  என்று அவ்வப்போழுது ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டால் போதும் ! எந்த முயற்சியும் மேற்கொள்ளாத ஆன்மாக்களின் ஊழ்வினையை அவள் கருமச் சட்டம் எப்படிக் கரைத்து விட முடியும் குறை நம்முடையது. அன்னையைச் சார்ந்தது அன்று. சிந்தித்தால் மட்டுமே இது புரியும்.

நாள் தோறும் ஓம் சக்தி!  ஓம் பராசக்தி ! என்றாவது,  மூலமந்திரமாவது – ஓம் சக்தியே ஓம் பங்காரு அடிகளே போற்றி ஓம்!  என்கிற குரு மந்திரமாவது 108 தடவை , 1008 தடவை எழுதிப் பழகி வாருங்கள். ஒரு லட்சம்!  ஜந்து லட்சம், பத்து லட்சம், கோடி என்று வரையறுத்துக் கொண்டு எழுதிப் பழகி வாருங்கள்!  ஆரம்ப நிலையில் இருப்பவர்கட்கு இப்படி மந்திரம் எழுதும் பயிற்சி பல நல்ல பலன்களைக் கொடுக்கும். நம் ஊழ்வினை கரையும்: தியானத்துக்கு நம்மைத் தயார்படுத்தும். மன வலிமை கிடைக்கும். நமக்குள்ளே சில ஆற்றல்கள் வளரும்.

இன்றைய விஞ்ஞான யுகத்தின் நாகரிகத்திலும்- பரபரப்பிலும்- ஆராவாரங்களிலும் மூழ்கிப் போய் நேரம் கிடைக்காமல் அல்லல்படுகிற அன்னையின் பக்தர்கட்கு இம் மந்திரம் எழுதும் பயிற்சி உகந்தது. இம் முறை எளிதானது.

இம் முறையால் கிடைக்கும் நன்மைகள்

1.  அம்மாவைத் தியானம் செய்ய என்னால் முடியவில்லையே என்று பலர் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைத் தியானத்துக்குத் தயார்படுத்த இந்தப் பயிற்சி உதவும்.இந்தப் பயிற்சியால் நம்முடைய கைகள், கண்கள், நாக்கு மூன்றும் ஒருமுகப்படுகின்றன. இப் பயிற்சியால் மனம் ஒருமுகப்பட வாய்ப்பு உண்டு. தொடர்ந்து இப்பயிற்சியை மேற் கொண்டால் நீங்கள் செய்கிற வேலைகளையும் திறமையாகச் செய்து முடிக்க முடியும்.

2. இங்ஙனம் மந்திரம் எழுதும் பயிற்சியால் அம் மந்திர சக்தியால் மனம் அடக்கியாளப்படுகின்றது. அது உங்களை வேகமாக முன்னேறிவர உதவுகிறது.

3. ஒரே மந்திரத்தை இடைவிடாமல் பல தடவைகள் நீங்கள் எழுதி வருகிற பயிற்சியின் காரணமாக, உங்கள் உள் மனத்தில், மிக நுண்மையான பதிவுகள் ஏற்படுகின்றன. அந்தப் பதிவுகள் உறுதி பெறப் பெற உங்களை ஆன்மிக முன்னேற்றம் பெற வழிகோலுகின்றன.

4. உங்கள் குடும்பத்தில் சச்சரவு!  ஒரே பிரச்சனை!  ஒரே மனக்குழப்பம்!  அக்கம்பக்கத்தாரிடம் முறையிட்டு கொள்ள முடியாத நிலை!  யாரிடமும் கொட்டி அழுது தீர்த்துக் கொள்ள முடியாத நிலைமைகள்!  இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வருகிற போது நிலை குலைந்து போக வேண்டாம்!  அம்மாவைத் திட்ட வேண்டாம். பேசாமல் ஓர் அறைக்கு சென்று தாழிட்டுக் கொள்ளுங்கள். அம்மா படத்தின் எதிரில் உட்கார்ந்து கொள்ளுங்கள்!  நோட்டுப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிரச்சனையை மறந்து விடுங்கள். 1008 முறை ஓம் சக்தி பராசக்தி என எழுதுங்கள்!

5. மனம் இழுக்கிற இழுப்புக்கெல்லாம் சென்று வேதனையை வரவழைத்துக் கொண்டு அல்லல்படுவது தான் எல்லோருடைய இயல்பு. நீங்களும் அப்படி அல்லல்பட வேண்டாம்!  உங்கள் இழுப்புக்கு மனத்தை இழுத்துப் பழக்கப்படுத்துங்கள்!  அப்படி உங்கள் மனத்தை அடக்கி ஆள்வதற்கு மந்திரம் எழுதும் பயிற்சி உதவியாக இருக்கும்.

சில விதிமுறைகள்

1. ஓம் சக்தி! பராசக்தி! என்ற மந்திரம்! அல்லது ஓம் சக்தியே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியே! அல்லது ஓம் சக்தியே ஓம் பங்காரு அடிகளே போற்றி ஓம்!  அல்லது அன்னை அருளிய மூலமந்திரம்- இவற்றில் எது உங்கள் மனத்திற்குப் பிடிக்கிறதோ அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஓரு நோட்டுப் புத்தகத்தை வைத்துக் கொண்டு எழுதுங்கள். நாள்தோறும் 108 முறை எழுதுவதா? 1008 முறை எழுதுவதா? என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதனை ஒழுங்காகக் கடைப்பிடியுங்கள்.

2. தனிமையில் உட்கார்ந்து கொண்டு மந்திரங்களை எழுதி கொண்டு வாருங்கள். யாரோடும் பேசிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இதனைச் செய்யக்கூடாது.

3.  காலையில் குளித்த பிறகாவது, கைகால் முகம் அலம்பிக் கொண்டாவது மந்திரம் எழுதுங்கள்.

4.  ஒரே மாதிரியாக உட்கார்ந்து கொண்டு எழுதுங்கள். மந்திரம் எழுதி முடியும்வரை அப்படி இப்படி அசைய வேண்டாம்.

5.   அமைதியும், மெளனமும் தேவை. யாராவது கூப்பிட்டால் எழுந்து போய்விடக் கூடாது. வீண்பேச்சு வைத்துக் கொள்ளக்கூடாது.

6.   கண்ணும் கருத்தும் மந்திரங்களிலும் நோட்டுப் புத்தகத்திலும் மட்டும் தான் இருக்க வேண்டும். ரேடியோவில் பிடித்தமான சினிமா பாட்டை இரசித்துக் கொண்டு மந்திரம் எழுதினால் மனம் குவியாது.

7.    உங்கள் கைகள் மந்திரங்களை எழுதுகிறபோது உங்கள் மனமும் அந்த மந்திரங்களில் பதிய வேண்டும். உங்கள் எண்ணம் மேல்மருவத்தூர் அன்னையைப் பற்றியே சுற்றிவர வேண்டும்.

8. எழுதுகிற முறையும் ஒரே சீராக இருக்க வேண்டும். இடமிருந்து வலம்- அல்லது மேலிருந்து கீழ் எந்த முறையைப் பின்பற்றுகிறீர்களோ அந்த முறையை இறுதிவரை பின்பற்றுங்கள்.மந்திர வரிகளின் நீளத்துக்குத் தக்கபடி எழுதுகிற முறையையும் அமைத்துக் கொள்ளுங்கள்.

9.  ஒரு வேளைக்கு 108 தடவை எழுதுவது என்று தீர்மானித்துக் கொண்டு எழுத உட்கார்ந்து விட்ட பிறகு தீர்மானித்தபடியே எழுதி முடித்துவிட வேண்டும். கொஞ்சம் இப்போது எழுதி முடிக்கலாம். கால்மணி போனதும் குறையானவற்றை எழுதி முடிக்கலாம் என்று தள்ளிப் போட்டுவிடக்கூடாது.

10.  இடையில் மந்திர வரிகளை மாற்றக்கூடாது. வசதிக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ளக் கூடாது.

11. லட்சத்து எட்டு: ஜந்து லட்சம்: கோடி என்று எந்த எண்ணிக்கையில் முடிக்க வேண்டும் என்று தீர்மானித்துவிட்டீர்களோ அப்படியே முடிக்க வேண்டும். அப்போது தான் உங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றியதாகப் பொருள்.

12.  உங்கள் சங்கல்பப்படி எல்லாம் எழுதி முடித்த பிறகு அந்த மந்திர நோட்டுகளை என்ன செய்வது? முடிந்தால் அவற்றை மருவத்தூர் வந்து சுயம்புக்கு முன் வைத்துத் தீபாராதனை காட்டி இங்கே சேர்த்து விடுங்கள். இல்லையேல் உங்கள் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் சேர்த்து விடுங்கள்.

விபூதி,குங்குமப் பொட்டலங்களாக மடித்துக் கொடுப்பதற்கு அவை உதவியாக அமையும். அப்பிரசாதப் பொட்டலம் மடிக்கும் புனிதமான பணிக்கு உதவும்.

– இது எளிய ஆன்மிகப் பயிற்சி! தியானம் செய்ய இயலாதவர்க்குரிய பயிற்சி! எல்லோரும் மேற்கொள்ளத் தக்க பயிற்சி! பல நன்மைகளை அடைவதற்கான பயிற்சி! நாளும் தெய்வ சிந்தனையில் ஊறிக் கிடப்பதற்கான பயிற்சி

இப் பயிற்சியைச் சிறுவர்கள் மேற்கொள்ளலாம்: சிறுமிகள் மேற்கொள்ளலாம்: மன்றங்கள் இம்முறையைச் சொல்லிப் பிள்ளைகளை ஊக்கப்படுத்தலாம் . பரிசுகள் கொடுக்கலாம்.

நம் பெண்கள் ஓய்வு நேரத்தில் இப்படிப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஏதாவது ஒரு முயற்சியை மேற்கொண்டு நாம் உருப்பட வேண்டுமானால் இந்த எளிய பயிற்சியை மேற்கொள்ளலாம்.

அன்னையின் திருவருளும், அடிகளாரின் குருவருளும் நம்மைத் துணையிருந்து காப்பாற்றும். நம்மால் முடிந்த அளவு இந்த முயற்சியையாவது செய்யலாம் அல்லவா?

                                                         ஓம் சக்தி

 நன்றி

சக்தி ஒளி ஒக்டோபர் 1989

பக்கம் 54- 58

]]>

1 COMMENT

  1. ஓம்சக்தி
    நான் இப்போதுதான் இந்த வெப்சைட் பார்த்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. கண்டிப்பாக இந்த மந்திர பயிற்சியை நான் இனிமேல் கடைபிடிப்பேன். என் வாழ்வில் அம்மாவின் அருள் மிகவும் முக்கியம். நான் இதுவரை மேல்மருவத்தூர் ஒருமுறை தான் சென்றுள்ளேன். இந்த வருடம் அம்மாவின் அருளால் மேல்மருவத்தூருக்கு இருமுடி கட்டி செல்ல அம்மா எனக்கு அருள் புரிய வேண்டும்.
    சக்தி சத்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here