அடிகளார் எனும் மானுடம் தாங்கி ஆதிபராசக்தி வரவில்லையெனில், மேல் மருவத்தூரிலே அருட்கூடமெங்கே! அருள்வாக்குத்தான் எங்கே? தேவா்க்கும் மூவா்க்கும் எட்டாத பாதபூஜை எனும் பேரின்ப நதியில் நாமெல்லாம் தினம், தினம் நீராடுவதுதான் எங்கே? நமக்கு விரவிருக்கும் ஆபத்துக்களில் இருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காத்து நம்மை ரட்சிக்கும் கலியுகக் கண் கண்ட தாயல்லவோ நம் குருநாதா்?

கடலூரில் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் சக்தி. சரவணன் அன்னையின்பால் மாறாத அன்பும், பக்தியும் கொண்டவா். அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி, புழுவாய்த் துடிப்பார். சென்னையில் அப்பல்லோ போன்ற பெரிய மருத்துவனைகளிலும், பல கை தோ்ந்த டாக்டர்களும் கைவிரித்த நிலையில்தான் நம் மருவத்தூா் மகானிடம் சரணடைந்தார். அடிகளாரின் அருட்பார்வைபட்டதும், அவா்தம் வாய் வழிவந்த சில எளிய மருத்துவத்தைக் கடைப்பிடித்தும், விஞ்ஞாத்திற்கும், மருத்துவத்திற்கும் கட்டுப்படாத வயிற்று வலி கட்டுப்பட்டுவிட்டது. இன்று அடிகளாரின் அருளால் அவா் நலமாய் உள்ளார்.

இந்த அற்புதம் தம் வாழ்வில் நடந்ததிலிருந்து, சக்தி. சரவணன் அடிக்கடி அம்மாவிற்குப் பாதபூஜை செய்யும் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு சித்ரா பெளா்ணமிக்கு 20 நாட்கள் முன் சக்தி. சரவணன் அம்மாவிற்குப் பாதபூஜை செய்தார். பாதபூஜையின் போது அம்மா………..

“சித்ரா பெளா்ணமியில் வந்து கலந்து கொள்! இது 63 வருடத்திற்கு ஒரு முறை வரும் சித்ரா பெளா்ணமி! மிகவும் சிறப்பு வாய்ந்தது! வரும் போது வேனில் மட்டும் வந்துடாதே” எனவும் திருவாய்  மலா்ந்து அருள் ஆணையும் இட்டார்கள். அம்மா சொன்னபடி சரவணன் சித்ரா பௌர்ணமி வேள்வியில் கலந்து கொள்ள கடலூரிலிருந்து 16.04.2003 அன்று காலை புறப்பட்டு பாண்டிச்சேரிக்கு வந்தார்.

பாண்டிச்சேரி பஸ் நிலையத்தில் நீண்ட நேரமாகக் காத்திருந்தும் பஸ் எதுவுமே வராத காரணத்தால் அருகில் இருந்த கடைக்காரர்களிடம் விசாரித்தார் சரவணன். இன்று பாண்டியில் ஸ்ட்ரைக்; அதனால் எந்த பஸ்சும் போகாது. ஒரே ஒரு பஸ் மட்டும் விடுவார்களாம். அதுவும் எப்பொழுது என்று சொல்ல முடியாது என்று கூறினார்கள்.

அது கேட்ட சரவணன் கால தாமதம் ஆகிவிட்டால் சித்ரா பௌர்ணமி வேள்வியில் பங்கு பெற முடியாதே என்று அதிர்ச்சிக்குள்ளாகித் தவித்தார். எப்படியாவது மருவூர் செல்ல நமக்கு வாகன வசதி கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிக் குருவின் திருவடிகளைத் தியானித்தபடி நின்றிருந்த சமயத்தில் பஸ் நிலையத்தில் இரண்டு வேன்கள் வந்து நின்றன.

வேனிலிருந்தவா்கள் திண்டிவனம்!  திண்டிவனம்! என்று கூறி அழைத்தனா். அதிலும் இரண்டாவதாக வந்து நின்ற வேன் குறிப்பாக சக்தி. சரவணனைப் பார்த்து சார் வரீங்களா? என்று கேட்டதும் தன்னையும் அறியாமல் குதூகலத்தில் சரவணன் வேனில் ஏற முயன்றபோது பொறிதட்டினாற்போல ஆன்மிக குரு கூறிய வாசகம் நெஞ்சில் நிழலாடியது. “வரும்போது வேன்ல மட்டும் வந்துடாதே” எனும் வார்த்தையை எண்ணி வேனில் ஏறாமல் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்.

இரண்டு வேன்கள் நிறைய பயணிகளைச் சுமந்துகொண்டு வேன்கள் திண்டிவனம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுவிட்டன. தாம் மருவூர் செல்ல நிச்சயமாக அம்மா ஏதேனும் ஒரு வழிவகை செய்வாள் என்று நம்பிக்கையோடு காத்திருந்த சக்தி. சரவணனுக்கு சற்று நேரத்திற்கெல்லாம் ஒரு பேருந்து அதிக அளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து நின்றது. சரவணனும் அதில் எப்படியோ தொற்றிக் கொண்டு பஸ்ஸில் நின்றபடியே பயணம் செய்தார்.

பேருந்து திண்டிவனத்தை நெருங்குவதற்கு 1½ கிலோ மீட்டா் தூரம் இருக்கும்பொழுதே ஒரு ரவுண்டானா வரும். அந்த இடத்தில் பஸ் நின்றது. என்னவென்று எட்டிப்பார்த்த சரவணன் திடுக்கிட்டார். எந்த வேன் டிரைவா் சரவணனை வரீங்களா சார் என்று கூப்பிட்டாரோ அவா் வந்த வேன் தலைகைீழாய்க் கவிழ்ந்து கிடக்க, சிலா் உயிரிழந்ததோடு பலா் படுகாயங்களுடன் பலத்த அடிபட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனா்.

மேல்மருவத்தூர் வந்து 63 வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பௌர்ணமியில் பங்கு பெற்றுப் பயனடைய வேண்டும் என்பது அம்மாவின் கணக்கு. இடையில் வரும்போது அவருக்கு ஏதேனும் நிகழ வேண்டும் என்பது அவரது விதி போலும்! அதனையும் தடுத்து முன்னெச்சரிக்கையாகவே வேனில் மட்டும் வந்துடாதே என்று அரவணைத்துக் காத்த கருணைக்கு ஏழேழு பிறவியெடுத்தாலும் என்ன கைமாறு செய்துவிடமுடியும்?

மருவூர் மகான் நமக்கெல்லாம் குருவல்ல……. தாய்! பால் நினைந்தூட்டும் தாய். ஆமையைப் போல நமைக்காக்கும் தாய். எனவே நமது தாய் எப்பொழுது யாருக்கு எதைச் சொன்னாலும் அது அவரவரின் நன்மைக்காகவே என்று நினைத்து, ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்யாமல் அம்மாவின் வாக்கிலிருந்து எள்ளளவும் பிறழாமல் நடந்து கொள்டோமேயானால் நம்மைக் காப்பது அந்த மருவூர்த்தாயின் பொறுப்பாகிவிடுகிறது. நமக்கென்ன மனக்கவலை? நம் தாய்க்கன்றோ தினம் தினம் நம் கவலை!

02.05.2003 அன்று என் உடல்நிலை சம்பந்தமான பிரச்சனைக்கு அம்மாவிற்குப் பாதபூஜை செய்தேன். 04.05.2003 கோவை ஊா்வலத்தில் கலந்து கொள்ளச் சொல்லி அம்மாவின் உத்தரவு இதற்கு முன்பு அம்மாவின் சுற்றுப் பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியதில்லையாதலால், எங்களுக்கு ஆன்மிகத்தில் உறுதுணையாய் இருக்கும் சிதம்பரம் வட்டத் தலைவா் சக்தி. உத்ராபதி அவா்களுடன் தொடா்பு கொண்டு குடும்பத்துடன் புறப்பட்டு மருவத்தூரிலிருந்து அன்னையுடன் கோவை சென்றோம்.

கடலூர் சக்தி. சரவணனையும் கோவை ஊா்வலத்தில் கலந்து கொண்டு மூன்று கும்பாபிடேகங்களிலும் கலந்து கொண்டு மூன்றாவது கும்பாபிடேகம் அன்று பாதபூஜை செய்யச் சொல்லி அம்மாவின் உத்தரவு அவரும் எங்களுடன் பயணம் செய்தார்.

அம்மாவின் சுற்றுப்புறப் பயணத்தில் நாங்கள் கலந்து கொண்ட ஐந்து தினங்களும், பூம்புகார் கலைக்கல்லூரி பேராசிரியா் சக்தி. சோமசுந்தரம் அவா்களும் எங்களின் காரில் குடும்பத்துடன் கலந்து கொண்டது எங்களின் ஆன்மிகச் சுற்றுப் பயணத்திற்கே மகுடம் வைத்தாற்போல அமைந்தது.

பயணத்தின் ஓய்வு நேரங்களில் அவரவா் ஆன்மிக அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது சக்தி. சரவணன் தனது அனுபவத்தை எங்களிடம் நேரிடையாகக் கூறியபொழுது அன்னையின் கருணையை எண்ணி எண்ணி கண்ணீரைத்தான் காணிக்கையாக்க முடிந்தது.

நன்றி!

ஓம் சக்தி!

சக்தி ஜீ. மாலதி

ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம்

மருவூா் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்

]]>

1 COMMENT

  1. ஒம் சக்தி அம்மா துணை,குருவடி சரணம் திருவடி சரணம் எல்லாம் அம்மாவின் அருள், எங்கும் அம்மா பூரணமாக நிறைந்துள்ளாள், அம்மாவே நீதான் எல்லாம் என்றும், உண் திரு பாதத்தில் சரணாகதி என்று உங்களை அம்மா விடம் ஒப்பு கொடுத்து விடுங்கள். பிறகு பாருங்கள் எந்த கஷ்டத்திலும் உங்கள் மனம் தளராது,எந்த சந்தோசத்திலும் உங்கள் மனம் ஆணவம் தலை கணம் தோன்றாது.இது அனுபவ உண்மை.இந்த பக்குவம் வர அம்மா விடம் வேண்டி விரும்பி கேளுங்கள், ஒம் சக்தி அம்மா துணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here