ஆரம்பம் எங்கே? முடிவு எங்கே? ஆதிபராசக்திக்கு ஆதி எது? அந்தம் எது? நாளெல்லாம் அருள்வாக்கு மழை. மௌனத்திலும் சொல்வது ஆயிரம். இதை அறிந்து கொள்ளும் திறன் அற்ற நாங்கள்

உங்கள் பிள்ளைகள் மருவூா் மண்ணை மிதிப்பதே பாக்கியம் தானே? அந்தப் பேறு எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது? இன்னும் கிடைக்கப் போகிறது?

“அம்மா ஒரு சத்தியம்” இதை அறிவது மிக அசாத்தியம்.

அம்மா சொன்னது ஒன்று என்றால் அதில் சொல்லாதது பல்லாயிரம். நடந்தது, நடப்பதை எல்லாவற்றையும் நமக்கு எடுத்துச் சொல்லும் அம்மா பராசக்தியின் மனிதரூபம். உணா்ந்தால் தான் இதைச் சொல்ல முடியும். இதை உணரவும் ஒரு தகுதி வேண்டுமோ? எல்லோருக்கும் இது கிடைக்குமோ? அருளைப் பொழியும் அம்மாவை சத்தியஜோதியாகப் பார்ப்போம், கேட்போம், உணா்வோம், பணிவோம், நினைப்போம், துதிப்போம், செயலாற்றுவோம். அதன் ஆதி அந்தத்தைப் பற்றி மறப்போம். நான் என்ற நம்முடைய பேச்சும், நினைவும் துறப்போம். சத்தியத்தைக் கிளறிப் பார்க்க முடியுமா? அதனால் கிடைப்பது குழப்பம் தானே? ஜோதியிடம் வந்து ஒளி பெற்ற பிறகு இருட்டு எதற்கு?

அம்மாவை முதன் முறையாக நேருக்கு நோ் சந்தித்து வணங்கி உரையாடும் சந்தா்ப்பம் நான் அம்மாவிடம் சொல்வேன் “இந்தக் காரியங்களையெல்லாம் நான் பார்த்துக் கொள்கின்றேன். இது என் பொறுப்பு” என்று. அம்மா என்னிடம் “நீயார் பார்த்துக் கொள்வதற்கு? உன்னையும் சோ்த்து நான் பார்த்துக்கொள்கிறேன்” இதற்கு என்ன அா்த்தம்? கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வாங்கிய உணா்வு. ஆனால் அது வலிக்கவில்லை. வருத்தவில்லை. மாறாக சத்திய ஜோதியின் ஒரு துணுக்கை உணர ஆரம்பிக்கின்றேன். எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று பல மணி நேரம் புரியாமல் போயி்ற்று. அம்மா சொன்ன இதற்கு என்ன அா்த்தம்? ஆயிரம் அா்த்தங்கள் இதில் அடக்கம். அது போகப் போகப் புரிகிறது.

எல்லா அர்த்தங்களையும் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது. வாழ்க்கையின் உண்மையான ஆனந்தங்களையும், இனிமைகளையும் உணராமல் பொய்யான நிலையற்ற பலவற்றை இன்பம் என எண்ணி நாடுகின்றோம்.

மருவத்தூா் கருவறையிலே சில நிமிடங்கள் 108 போற்றித் திருவுரு மந்திரம் சொல்லி நிற்கும் போது அதைக் கொஞ்சம் உணர முடிகிறது. இந்த வித்தியாசத்தை உணா்வது எப்படி? ஏன் அது விளங்க மாட்டேன் என்கிறது? எது நம் உள்ளத்தையும் அறிவையும் திரைபோட்டு மறைக்கிறது?

எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை. அதன் அருகில் வந்து அதை எல்லோரும் அடைய முயற்சிப்பதில்லை. அம்மா ஒரு முறை சொல்வார்கள் “இந்த மண்ணை மிதித்தாலே போதும் என்று அதற்கும் ஒரு கொடுபனவு வேண்டுமோ என்னமோ தெரியவில்லை. அப்படி என்ன இருக்கிறது இந்த மண்ணில்! இரத்தத்தின் நிறம் சிவப்பு போல மண்ணின் இயல்பும் ஒன்று தானே! இது என்ன வித்தியாசமான சிறப்பு? அம்மா எதைக் குறிப்பிடுகிறார்கள்? அங்கு தான் நம் தடுமாற்றம் ஆரம்பம்.

சலனமற்ற தெளிந்த ஓடையைப் போல காற்றில் ஆடாத நிலையான ஒரு தீபம் போல ஒரு உன்னத நிலையை இந்த மனதால் அடைவது மிகவும் கடினம். அங்கு தான் அந்த நிலையில் தான் ஆனந்தத்தின் உச்சியை உணர முடியும். அதை அனுபவித்தால் தான் தெரியும். வெறும் வெளிப்படையான தெய்வ வணக்கத்தாலே அல்லது பக்தியின் அடையாளங்களாலோ அது பெறப்படுவதில்லை.

மனது ஒரு கட்டுக்கடங்காத குதிரை. அதை வசப்படுத்தும் தொழில் கடினம். மிகக் கடினம். நம்முடைய மற்றப் புலன்களை நாம் ஓரளவு முயற்சியுடன் கட்டுப்படுத்தலாம். ஆனால் இந்த மனது யாருக்கும் அடங்குவதில்லை. அதை நிலைப்படுத்த வேண்டும் என்று அம்மா சொல்கிறார்கள். அது தான் இந்த மண்ணின் மகிமையும், பெருமையும், தனித்தன்மையுமாகும்.

“Whatever you want to get

You can get it from here

What you don’t get here, you won’t get anywhere else”

“உனக்கு என்ன வேண்டும் என்று விரும்புகிறாயோ அதை இங்கிருந்து பெறலாம்.

உனக்கு என்ன கிடைக்கவில்லையோ அது உனக்கு வேறெங்குமே கிடைக்காது”

அம்மா இதை யாரிடம் சொன்னார்கள்! ஏன் சொன்னார்கள்?

அதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்று சொன்னார்கள். நாம் வேண்டுவது வெறும் சித்தா் பீட தரிசனம் என்பதை விட்டு மண்ணை மிதித்து மாயம் நடக்கும் எனக் கனவு காண்பதையும் விட்டு, பாலையும், நீரையும் பிரிக்கும் அன்னப் பட்சி போல நம்மை நாமே அறிந்து கொள்ள இறைவனைப் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு நிலைக்கு நம்மையும் ஆளாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அம்மாவின் சித்தம்.

“உன் விதியையும் மாற்றி அமைக்கிறேன் மகனே!” இது அம்மாவின் அருள்வாக்கு விதி என்று ஒன்று உண்டா? எவ்வளவு தூரம் அது நம்மைக் கட்டுப்படுத்த முடியும்? விதி ஏன் நமக்கு விலங்காக இருக்கிறது? நம்முடைய விதியை மாற்றி அமைத்துக்கொள்ளும் சக்தி நம்மிடம் இருக்கிறது. நம்முடைய செயல்களே நமக்கு விதியாக மாறுகிறது. அம்மாவை உணா்ந்து நாம் மாறி செயற்படும்போது நம் விதிவழியும் மாறுகிறது. இதைத்தான் அம்மா அப்படிச் சொல்கிறார்கள். இந்த மண்ணை மிதித்து அம்மாவின் வழி நடந்து நாம் நம் விதியை மாற்றிக் கொள்ள முயல்கிறோமா?

இது தான் இந்த மண்ணின் சிறப்பு – இங்கு தான் அந்த நிலையை – மனதை அடக்கி இனிமையான ஒரு நிலையை அடையும் வழியை மற்றும் விதியின் போக்கை மாற்றும் வழியை நமக்க அம்மா சொல்லாமல் சொல்லித் தருகிறார்கள்.

அவனின்றி ஓா் அணுவும் அசையாது என்று படித்திருக்கின்றோம். ஆனால் அதைக் கண்டதில்லை. மருவத்தூரில் அதைக் காண்கின்றோம். நம் மன உணா்வில் அதைக் காண்கின்றோம். எங்கு பார்த்தாலும், எதைப் பார்த்தாலும் அம்மாவின் அசைவு தான் தெரிகிறது. இதை இங்கே தானே உணர முடிகிறது? அதுவே இந்த மண்ணின் சிறப்பு! அது தான் இந்த மண்ணின் வித்தியாசமும் தனித்தன்மையும்!

பிரமிக்க வைக்கும் அளவிலுள்ள கல்விக் கூடங்கள், மருத்துவ மனை மற்றும் வாழ்கையில் நலிந்து உள்ளோர்க்குக் கிடைக்கும் சமுதாயப் பணியின் நன்மைகள் – இவையெல்லாம் எப்படி நடக்கிறது? இங்கே ஆட்டுவிக்கும் சூத்திரதாரி யார்? இங்கே தன்னுடைய வாழ்க்கைக்காக பணிபுரிபவா்களும் சித்தா்பீடப் பணி புரிவதற்காகவே வாழ்பவா்களும் ஒரே மாதிரியாக எப்படித் தோற்றமளிக்க முடிகிறது! ஒரே மாதிரியான இது அகத்தின் பிரிதிபலிப்பு. அந்த மன நிறைவு அவா்கள் முகத்தில் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இதுவே ஒரு பெரிய புதிரும் அதிசயமும்! அம்மா ஒரு முறை சொல்லுவார்கள் “எல்லோரும் எப்படித் தொண்டு செய்கிறார்கள் பார்த்தியா?”

அம்மா குறிப்பிடும் அந்தத் தொண்டை நான் பார்க்கிறேன். அதை நான் உணா்கிறேன். அம்மாவிடம் நான் ஆம் என்று தலையை ஆட்டுகிறேன் ஆனால் அம்மா சிந்தனையைத் தூண்டி விட்டார்கள். அம்மாவின் அந்த ஒரு கேள்வியில் உள்ள பின்னணி, அா்த்தங்கள் மற்றும் வழிமுறை ஆகியவற்றை நான் அப்போது உணரவில்லை. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணா்கிறேன். தொண்டு எப்படிச் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஒரு சிறு சிறிய ஒளிப் பொறிகளாக அதன் தன்மைகளைப் பார்க்கிறேன்.

  • தொண்டு செய்வதற்கு ஒரு மனப்பான்மை வேண்டும்.
  • தொண்டு செய்வது அவ்வளவு எளிதல்ல
  • பிரதிபலன் எதிர்பாராது செய்வது தான் தொண்டு
  • மனதில் முழு சிரத்தையோடு செய்வது தான் தொண்டு
  • ஒருவிதமான அகங்காரம் எதுவுமில்லாமல் எதையும் செய்ய முன்வர இருப்பதும் அது சரியாக முடியும் வரை பொறுப்பேற்பதும் தான் தொண்டு.
  • இந்தத்தொண்டு தனக்குக் கிடைத்த பாக்கியம் என்று அதில் லயித்து ஈடுபடுவது தான் தொண்டு.
  • தான் செய்யும் தொண்டால் பிறருக்குக் கிட்டும் மகிழ்ச்சியைப் பார்த்து ஆனந்தப் படுவது தான் தொண்டு.

இதையெல்லாம் ஒரே வார்த்தையில் அம்மா சொல்லிவி்ட்டார்கள். ஆனால் அதை உணர எனக்கு மிகவும் நேரம் (மாதக்கணக்கில்) பிடித்தது. அதுவும் மருவத்தூருக்கு அடிக்கடி வந்து போனதால் தான்.

தொண்டு செய்யவும் ஒரு சிறப்பிடம் அதுதான் மருவத்தூா்! அது தான் இந்த மண்ணின் சிறப்பு ஆகுமோ?

ஒரு முறை ஒரு பெண்மணியின் துயரமான மனநிலையை அம்மாவிடம் சொல்வதற்கும் அருள் பெறுவதற்கும் அவா்களுக்காக ஆசி பெற்று வரவும் மற்றும் அவா்கள் நல் வாழ்வுக்கு அறிவுரை வேண்டியும் அம்மாவிடம் சென்றிருந்தேன். அந்தப் பெண்ணிற்கு அந்த நேரத்தில் உடல் நலக் குறைவால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. அதே நேரம் தன் கணவன் ஆதரவு சரியான முறையில் இல்லாமல் பிறா் வீட்டார் உதவியும் நாடமுடியாத ஒரு நிலை. இரண்டு குழந்தைகளுடன் துயரத்தின் நடுவே அந்தத் தாய் என் மூத்த மகளிடம் வந்து தன் புகைப்படத்தைக் கொடுத்து அம்மாவிடம் ஆசியும் மன நிம்மதிக்கான வழியையும் வேண்டிவருமாறு கேட்டுக் கொண்டார்கள். மருவத்தூர் பற்றியோ அம்மாவைப் பற்றியோ அந்தப் பெண்ணிற்கு எதுவும் தெரியாது. ஆனால் என் மகளின் வீட்டில் அம்மாவின் திருவுருவப் படத்தைப் பார்த்ததும் என் மகள் வாயிலாக மருவத்தூா் மகிமையைக் கேட்டும் நிம்மதி நாடி அந்தப் பெண்மணி சொன்னார் “எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. இதில் தான் எனக்கு அமைதி கிட்டும் என்று ஏதோ தோன்றுகிறது. எனக்காக அம்மாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். என் மகளிடம் இருந்து இந்த விபரங்களுடன் வந்த அந்தப் பெண்மணியின் புகைப் படத்துடன் நானும் என் மனைவியும் அம்மாவிடம் சொன்னோம். “அம்மா! இந்தப் பெண்ணிற்கு அம்மா தான் அருள் புரிய வேண்டும்.” அம்மா அந்தப் புகைப்படத்தைத் தன் திருக்கரத்தாற் தொட்டுத் தடவிப் பார்க்கிறார்கள். அம்மா சொல்கிறார்கள் “ அவா்களை ஒரு முறை இந்த மண்ணை வந்து மித்துவிட்டுப் போகச் சொல்லுங்கள் எல்லாம் சரியாகிவிடும்.”

ஆனால் அந்தப் பெண்மணிக்கு அந்த உத்தரவு கணவனிடம் இருந்து கிடைக்கவில்லை. இந்த மண்ணை மிதித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அம்மா சொல்கிறார்கள். அம்மா எங்களுக்குச் சொல்லாமல் சொல்கிறார்கள் “இந்த மண் தனிச்சிறப்புடையது. நம்பிக்கையுடையது. நம்பிக்கையுடன் நீ இங்கு வந்து நிற்கும் போது நான் உன்னைக் கை விட மாட்டேன்.” ஆனால் அந்தப் பெண்மணியினால் வர முடியவில்லை. எங்கள் உள்ளம் ஆதங்கப்படுகிறது. மனதார அம்மாவிடம் மானசீகமாக இதை நாங்கள் சொல்லிக் கொண்டோம். அம்மாவிற்குத் தெரியாதா என்ன? இந்த மண்ணின் சிறப்பை மொத்த மனித குலமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேராசை எழுகிறது.

அந்தப் பெண்மணி இப்போது உடல் நலம் பெற்று இல் வாழ்கையிலும் சிறிது முன்னேற்றம் அடைந்துள்ளார். அவா்களுக்கு இப்போது தென்னிந்தியாவுக்கு உத்தியோக மாற்றம் ஆகியுள்ளது என்று அறிகின்றோம். அந்தப் பெண்மணியை மருவத்தூர் மண்ணை மிதிக்க ஒரு அழைத்துச் செல்வோம் என்பதில் எனக்குள் ஒரு சந்தேகமும் இல்லை. அதுவே அம்மாவின் பெருமையும் அம்மாவின் அருளும் ஆகும்.

மற்றொருமுறை அம்மா எங்களிடம் சொன்னார்கள் “இங்கு வருவதற்கும் அருள் வேண்டும். திரும்பிப் போவதற்கும் அருள் வேண்டும். இதன் அா்த்தம் என்ன என்று பல முறை நாங்கள் சா்ச்சித்ததுண்டு.

மருவத்தூா் வருவதற்கும் அருள் வேண்டும். நிச்சயமாக வேண்டும். இதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால் இது எல்லோருக்கும் கிட்டுவதில்லை. வாய்ப்புக் கிடைத்த நிறையப் பேர் நிறையப் போ் இதை நழுவவிட்டிருக்கிறார்கள். ஒரு வேளை அம்மா அதனால் தான் எல்லோருக்கும் அந்த அருள் கிடைக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் சக்தி பீடங்களை ஆங்காங்கே நிறுவ வழி அமைத்துக் கொடுத்து வருகிறார்களோ? மருவத்தூா் மண்ணை மிதிக்க முடியாவிட்டாலும் மருவத்தூர் தாயின் கையால் குடமுழுக்கு செய்யப்பட்ட சக்தி பீடங்கள் அந்த மண்ணின் ஒரு துளி தானே? முடிவில் நீ எங்கிருந்தால் என்ன? உன் மனநிலைதான் முக்கியம்.

அம்மாவின் கருணை, அன்பு, நினைவு இவை எப்போதும் உன்னுடைய சிந்தனையில் இருக்க வேண்டும். அப்போது அந்த மண்ணின் சிறப்பு உன்னைத் தூயவனாகவும், எல்லோரையும் நேசிப்பவனாகவும் ஒரு சரியான மனிதப் பிறவியாகவும் உன்னை வைத்திருக்கும். அந்த அருள் தான் அம்மா சொன்னபடி “இங்கே வருவதற்கு அருள்வேண்டும்” என்பதன் பூடகமான விளக்கமாகத் தோன்றுகிறது. “இங்கே” என்பது மருவத்தூரின் சிந்தனைகள், சித்தாந்தங்கள், மேல் நோக்குகள் இவற்றையே ஆழமாகக் குறிப்பிடும். இதையெல்லாம் பெற்று என்ன ஆகப்போகிறது? இந்த மண்ணை மிதிக்காவிட்டால் என்ன குறைந்து போய்விடும்? உலகத்தில் இது சாத்தியமாவது ஒரு துளி விழுக்காடு மனித இனத்திற்கு மட்டும் தானே? இதைப்பற்றி பின்னால் நாம் பார்ப்போம்.

சரி! மருவத்தூா் வருவதற்கு அருள் வேண்டும். ஒரு நிமிடம் இதை ஒப்புக்கொள்வோம். ஆனால் திரும்பிப் போவதற்கு ஏன் அருள் வேண்டும்? இதற்கு விடை நீண்ட நாட்கள் நமக்கு  கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் நம் அறிவுக்கு எட்டிய வரை ஒன்றே ஒன்று தான் கேள்வியாக எழும்பியது. அருளை வேண்டியோ வேண்டாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, பழம் பிறவியின் நற்செயலாகவோ (இதை நம்புவோர்க்கு மட்டும்) அந்தப் பாக்கியம் பெற்றவா்கள் அம்மாவைத் தரிசித்து அருள்பெறும் அந்தப் பாக்கியம் கிடைத்தவா் அனைவரும் அதைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்களா? அல்லது அந்த அருட்பெரும் கருணையை உணர முயன்றிருக்கிறார்களா? என்று பலமுறை நான் சிந்தித்துப் பார்த்ததுண்டு.

அந்தப் புனித உணா்வுகளைத் தொடா்ந்து எந்தவொரு ஆராய்வுமின்றி அந்தப் பெரும் அருளை நிலைக்க வைத்துக்கொண்டு இப்படியல்லவா அமைதியும் ஆனந்தமும் காண முடியும் என்றும் மறுபிறவி வேண்டாம். இந்தப் பிறவியிலேயே இறைவனை உணா்ந்துவிட்டோம். இனி மேலும் பிறவி எதற்கு? என்று கருதுகின்ற ஒரு நிலைக்கு எல்லோரும் ஆழாக முடிவதில்லையே…….? இதையே அம்மா இங்கிருந்து திரும்பிப் போவதற்கும் அருள்வேண்டும் என்று மறைவாகச் சொல்லுகிறார்களோ? திரும்பிப் போவது என்றால் உடல் திரும்பிப் போவது மட்டுமல்ல மனம் மாறாமல் நிலைபெற்ற ஒரு மனதுடன் எப்போதும் இருக்கும் ஒரு நிலையையே அம்மா அப்படிக் குறிப்பிடுகிறார்கள் என்று நினைக்கின்றேன்.

தெளிவுற்ற அந்த ஒரு நிலை நீடித்த இன்பம் – பேரின்பம். அந்த இன்பத்தை அடைய தொடா்ந்து முயற்சி செய்வது தான் “திரும்பிப் போவதற்கும் அருள்” என்ற அா்த்தமாகத் தோன்றுகிறது. வாழ்க்கை சிறியது என்று சொல்லுவதற்குக் கூட இல்லா அளவு ஒரு கணப்பொழுதான நேரம் இயங்கும் ஒரு விட்டில் பூச்சி போன்றது. அதை என்ன என்று புரிந்து கொள்வதற்குள் வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது. இப்படி அம்மாவின் வழியில் முதலிலேயே இருந்திருந்தால் எவ்வளவு இன்பத்தையும் ஆனந்தத்தையும் பெற்று ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்? என்ற ஏக்கமும் தோன்றுகிறது.

அம்மா இந்த உலகத்தில் அவதரித்து வாழ்க்கைக்கு ஒரு இலக்கணத்தை நமக்கு அமைத்துக்கொடுத்து மனித இனத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்து வருகிறார்கள். அதை ஆரம்பத்திலிருந்தே புரிந்து கொண்டு விடாமல் பற்றிக் கொண்டு நம்முடைய இந்த மனித வாழ்க்கையை ஓரு பேரின்பத் துளியாக மாற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்பு நம் கையில் தான் இருக்கிறது. அம்மாவை உணா்ந்துகொண்டு அதை நிழல்போல் நாம் உடலாலும், எண்ணத்தாலும் தொடா்ந்து கொண்டு இருப்போமானால் உன்னதமான ஒரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். இதைத்தான் அம்மா அப்படிக் கூறுகிறார்கள் “உன் விதியையும் நான் மாற்றி அமைக்கிறேன்”

ஓம்சக்தி

நன்றி

சக்தி .ரா. ராமமூா்த்தி

அம்மா ஒரு சத்தியம்

பக்கம் 1 – 8

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here