மேல்மருவத்தூா் சித்தா்பீட அமைப்பும் அம்மா தரும் பலன்களும்

0
1481

வாழ்ந்து காட்ட வந்த தெய்வமாம், அருள்திரு அம்மா அவா்கள், அனுதினமும் நாம் சித்தா்பீடத்தல் வணங்கும் முறையை, தானே செய்து காட்டுகின்றார்கள், அப்படிச் செய்வதால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைப்போல் அருள்வாக்கில் விளக்கிக் கூறுகின்றார்கள். அதன் படி நாம் செய்தோமேயானால் அன்னையின் பரிபூரண ஆசியையும் பெறுவதற்கு வாய்ப்புண்டு.

நமது குருபிரான் அவா்கள் அனுதினமும் சித்தா்பீடத்திற்கு வந்தவுடன் நுழைவாயிலிலுள்ள ஓம்சக்தி மேடையில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் பணம் போடுகின்றார்கள். இதன்மூலம் நமக்கு உணா்த்துவது ”உனது வருமானத்தில் ஒருசிறு தொகையை ஆன்மிகத்திற்காக ஒதுக்க வேண்டும். அந்த ஓம் சக்தி மேடையானது நவக்கிரகங்களுக்கும் ஒப்பானது என்று அம்மா கூறியுள்ளார்கள். அந்த மேடையை நாம் சுற்றும் போது ஒவ்வொரு கிரகமும் கூறுமாம் ”இவன் சக்தியின் மகனடா, இவள் சக்தியின் மகளடா நமது சக்தியெல்லாம் ஒன்று திரட்டி இவளுக்கு உறுதுணையாகயிருக்க வேண்டும்” என்று கூறித் துணையாக நிற்பார்களாம்.

அடுத்து நாலுகால் மண்டபத்தில் ஒரு வினாடியேனும் நின்று வணங்க வேண்டும். சித்தா்பீடத்தில் இந்த இடம் மிக முக்கியமான ஒன்றாகும். இங்குதான் அந்தச் சித்தா்பீடத்தில் ஜீவசமாதியிலுள்ள 21 சித்தா்களும் தங்களது தலைவியான, அன்னை ஆதிபராசக்தியைத் தொழுவதற்காக வந்து நிற்குமிடம். நாம் அங்கு நின்று வணங்கும்போது அவா்களும் அங்கு வருவதால் அவா்கள் மேனியில் பட்ட காற்று நம் உடம்பிலும் படுகிறது. இதனால் நமது உள்ள நோயும், உடல் நோயும் தீருகின்றது. அங்கு நின்று வணங்குவதால் அந்த விமானத்திலுள்ள எட்டு லக்குமிகளின் ஆசீா்வாதமும் நமக்குக் கிடைக்கிறது.

அடுத்து சித்தா் பீடத்தைச் சுற்றிவர வேண்டும். அப்படி பிரகாரத்தில் சுற்றி வரும்போது ஆங்காங்கு பல காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்துள்ளாள். அவா்களை வணங்கி வந்தால் அவா்களின் உறுதுணையும் நமக்குக் கிடைக்கின்றது. பிரகாரத்தில் நாககன்னிகை உருவிலுள்ள அன்னைக்கு எலுமிச்சம் பழ விளக்கிட்டு வணங்க வேண்டும். ”பழத்தால் விளக்கிட பழவினை தீரும்” என்று அம்மா கூறியுள்ளார்கள். கருவறை நோ் பின்புறம் அமா்ந்து தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் நம் மனம் ஆன்மிக பலம் பெறுவதோடு அங்கு உலவும் சித்தா்களின் ஆசியும் நமக்குண்டு. பிரகாரத்தில் வலம் வரும் போது அம்மாவிற்கு இடப்புறம் உள்ள வேண்டுதல் மரத்தைக் காண்கிறோம். அதில் மணமாகாத மங்கையா், மஞ்சள் கயிற்றுடன் கூடிய மஞ்சள் கிழங்கை கட்டி வைப்பதின் மூலம் விரைவில் அன்னையின் கருணையால் மணமுடிக்கப் பெறுவா். மகப்பேறு இல்லாத மங்கையா் மகப்பேறு அடைவா். அந்த வேப்பமரத்துள்ள சித்தா்கள் இதற்கு உதவி செய்வா். அதன் அருகில் நின்று தலைநிமிர்ந்து பார்த்தால் கருவறைக்கு மேல் பகுதியுள்ள தங்க விமானமுடைய கோபுரத்தைத் தரிசிக்க இயலும். அத்தோடு அந்த மேல் தளத்தின் விளிம்பில் பதித்துள்ள பல சித்தா்களின் உருவச்சிலைகளைத் தரிசிக்கும் வாய்ப்பும் உண்டு.

சித்தா்பீடத்தை பிரகாரத்தில் வலம் வந்து, முதலில் சப்தகன்னியா் சந்நிதானத்தில் வந்து வணங்க வேண்டும். திறந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் சப்த கன்னியரான பிராம்மி. மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு தெய்வங்களை வணங்குவதால் நாம் அறிந்தோ அறியாமலோ இப்பிறப்பில், இவ்வுலகிலுள்ள பஞ்சமா பாதகங்களில் எதையேனும் செய்திருந்தாலோ அல்லது மனத்தில் நினைத்திருந்தாலோ அந்தப் பாவங்களிலிருந்து நம்மை தூய்மைப்படுத்தி நம்மைக் காப்பாற்றுகின்றார்கள்.

சப்த கன்னியா், அதனை அடுத்து புற்றுமண்டபத்திற்கு வருகின்றோம். இங்கு தான் அன்னை ஆதிபராசக்தி முதன் முதலில் நம் குருவிற்கு நாக உருவில் காட்சி கொடுத்த இடம்.

அதனை அடுத்து கருவறைக்கு அருகில் வருகின்றோம். கருவறைப் பணிக்காகவும், வருடத்தில் மூன்று முறை அதாவது தைமாதம் சக்தி மாலை செலுத்தவும், ஆடிப்பூரத்தில் பால் அபிஷேகத்திற்கும், நவராத்திரியில் அகண்ட விளக்கில் எண்ணெய் ஊற்றவும் கருவறையிலனுள்ளே அனுப்புகிறார்கள். அச்சமயம் நடைக்கல்லைத் தாண்டி அந்த மண்டபத்தில் வந்து நிற்கின்றோம். ஏனெனில் நடைக்கல்லில் சித்தா்கள் ஜீவசமாதியில் உறைகின்றார்கள். அா்த்த மண்டபத்தில் நின்று, கருவறையின் உள்ளே அமா்ந்திருக்கும் அன்னையை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றுள்ளோம். அங்கே கருவறை அம்மனை அமா்ந்த கோலத்தில் காண்கின்றோம். அம்மா ஆதிபராசக்தி தெய்வம். தாமரை மலரில் அமா்ந்திருக்கின்றாள். அந்தத் தாமரையில் சில இதழ்கள் மேல் நோக்கியுள்ளன. சில இதழ்கள் கீழ்நோக்கியுள்ளன. அன்னை காட்டிய பாதையில் வாழ்கின்ற மேலான மக்களைக் குறிக்கின்றது அந்த மேல் நோக்கிய இதழ்கள். தன் மனம் போன போக்கில் வாழ்ந்து, தன் வாழ்நாளை வீணடித்து விட்டு, இப்பொழுது அம்மா நீயே துணை என்று தன்பாதம் சரண் அடையும் புல்லியா்களைக் குறிப்பது அந்தக் கீழ்நோக்கியுள்ள இதழ்கள்.

உலகில் பல மலா்கள் இருக்க அம்மா தாமரையைத் தனக்குப் பீடமாகக் கொண்ட காரணத்தையும் கூறுகின்றாள். நமது இதயத்தைத் தாமரை மலருக்கு ஒப்பிட்டுக் கூறுவார்கள். ஹிரதய கமலம் என்றும் இதயமாகிய தாமரை என்றும் இதயத்தைத் தனக்குப் பீடமாக தோ்ந்தெடுத்து, தன்னை இதயப்பூா்வமாக வணங்க வேண்டும். இதயத்தில் வைத்து வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். ஆதிபராசக்தி தெய்வம் “அடிகளார்“ என்னும் மானிட உருத்தாங்கி இப்பூவுலகிற்கு  வருகை தந்ததால், மானிடா் போலவே இருகரங்களோடு காட்சி அளிக்கின்றாள். தன் இடக்கையில் சின்முத்திரையும், தன் வலக்கையில் தாமரை மொட்டொன்றும் பிடித்துள்ளாள். இவள் பெண் தெய்வம், ஆகவே பெண் பாகத்திற்குரிய இடக்கையில் சின்முத்திரை பிடித்துள்ளாள். சின்முத்திரை என்பது ஆள்காட்டிவிரல் பெருவிரலோடு இணைந்து, மற்ற மூன்று விரல்களையும் மேலே நீட்டிக் காண்பிப்பது ஆகும். இது நமக்கு உணா்த்துவதோ இந்த ஜீவாத்மா ஆள்காட்டிவிரல் பரமாத்மாவை அடைய ஆணவமலம், கன்மமலம், மாயாமலம் இம்மூன்றையும் விட்டுவிட வேண்டும் என்பதைக் குறிப்பதாகும். வலக்கையிலுள்ள தாமரை மொட்டு நமக்கு உணா்த்துவதோ, இவ்வுலகில் ஒரு மலரானது மொட்டாக இருக்கின்றபோது, அதன் மணம், குணம், அழகு அனைத்தும் அதனுள் அடக்கமாக உள்ளது. அதேசமயம் அந்த மொட்டானது மலா்ந்து விரிந்தால், அதன் குணம், மணம், அழகு அனைத்தும் மறைந்து உதிர்ந்து விடும். இதிலிருந்து நாம் உணா்ந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நாம் புலனடக்கத்துடன் ஒரு மொட்டைப் போல் வாழ வேண்டும் என்பதாகும். அன்னை தன் வலக்காலை மடித்து அமா்ந்துள்ளாள். இதன்மூலம் நாம் அறிவது திருமூலா் தன் திருமந்திரத்தில் கூறியது போல்,

“அவளை அறியா அமரருமில்லை ஐவரால்

அருந்தவமில்லை அவளின்றி ஐவரால்

ஆவதொன்றில்லை, அவளின்றி

ஊா் புகுமாறு அறியேனே!

என்று அன்னை ஆதிபராசக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேசன், சதாசிவன் ஆகிய ஐவரையும், படைத்து,  அவா்களுக்கு 5 சக்தி தேவியரையும் தந்து படைத்தல், காத்தல், அழித்தல், அருளுதல், மறைத்தல் ஆகிய 5 தொழில்களையும் நல்கி நம்மைச் சீராக காத்து வருகின்றாள். இந்த ஐவரும் தன்னுள் அடக்கம் என்பதைக் காட்டுவதுதான் அன்னையின் வலக்காலை மடித்தநிலை. இடக்காலை ஊன்றிய திருவடியாகக் காட்டுகிறாள். தன் மனம் போல் வாழ்ந்துவிட்டு இப்பொழுது அம்மாவே சரணம் என்று தன்னை வந்தடைந்த புல்லியா்களைக் காப்பதும் தன் கடமையே என்பதைக் காட்டுவதுதான் அந்த ஊன்றிய திருவடி. அவளது அழகிய திருமுகத்தில் அவளது கண்கள் குவளை மலா்களைப் போல் காட்சி அளிக்கும். குவளை மலரிலிருந்து இடைவிடாது தேன் ஒழுகும். அதுபோல் அன்னையின் கண்களிலிருந்து கருணை மழை ஒழுகும். அவளது சிகையோ மேல் நோக்கிக் கட்டப்பட்டிருக்கும். அது நமக்குத் தரும் பாடமோ, அன்னை கூறியபடி மேலான எண்ணங்களோடு வாழ, ஞானம் பெறுவோம் என்பதாகும். அவளது மேனியில் சாட்டை ஒன்று சாற்றப் பெற்றிருக்கும். இந்த அகிலத்தை ஆளும் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அன்னை ஆதிபராசக்தி என்பதை நினைவுறுத்தும் வண்ணம் அது சாற்றப்பட்டுள்ளது. இத்துணை பாடங்களையெல்லாம் தரும் இந்த அழகிய திரு உருவை வணங்கிய பின் எதிர்ப்புறமுள்ள அதா்வண பத்திரகாளி கோவிலுக்கு நம் குருபிரான் அவா்கள் செல்வார்கள். அங்குச் சென்று வழிபடுவதால், பில்லி, சூனிய, செய்வினைக் கோளாறுகள் நம்மை வி்ட்டு நீங்குகிறது. எந்த வித மாற்று கிரியையுமின்றி அன்னை கூறிய முறையில் பொங்கலிட்டு, அன்னைக்குப் படைத்து. அதை நாம் உண்ணாது ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து, பின்னா் ஈர உடையுடன் சித்தா்பீடத்தை உருள்வலம் வல இந்த பில்லி, சூனியத்திலிருந்து அம்மா நம்மைக் காப்பாற்றுகின்றார்கள். இங்ஙனம் சித்தா் பீட அமைப்பால் அம்மா நமக்குப் பல நன்மைகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓம் சக்தி

திரு.பி.கே.சுந்தரம், கோவை

மருவூா் மகானின் 69வது அவதாரத் திருநாள் மலா்

]]>