ஆரம்ப காலத்தே வந்த பக்தர் ஒருவர்; அவருக்கு ஒரு மனக்குறை; எல்லாம் இருந்தும் குழந்தை பாக்கியம் இல்லை. அன்னைக்குத் தொண்டு செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டு செய்து வந்தார்.

சில ஆண்டுகளில் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அந்த மகிழ்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் தொண்டு செய்து வந்தார். ஐந்தாறு ஆண்டுகள் வரை பையன் நன்றாக வளர்ந்தான். எதிர்பாராமல் நோய் வந்து மரணமடைந்தான்.

அந்தத் தொண்டர் நிலைகுலைந்து போனார். கொடுப்பது போல் கொடுத்துத் தன் குழந்தையை இந்த ஆதிபராசக்தி தட்டிப் பறித்துக் கொண்டாளே என்று மனம் கலங்கிய நிலையில் அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்குக் கேட்கப் போனார்.

அன்னை ஆதிபராசக்தியின் கண்களிலிருந்து கண்ணீர்

அருள்வாக்குக் கேட்க அன்னை ஆதிபராசக்தியின் எதிரே அவர் அமர்ந்தவுடன் அன்னை ஆதிபராசக்தியின் முகத்தைப் பார்த்தார். அன்னை ஆதிபராசக்தியின் கண்களிலிருந்து பொல பொல எனக் கண்ணீர்!

“அம்மா! நான் தான் பிள்ளையைப் பறி கொடுத்துவிட்டு உள்ளுக்குள் அழுது கொண்டு உன்னிடம் வந்திருக்கிறேன். நீ ஏம்மா அழறே?” என்றார் இவர்.

ஒரு தேவரகசியத்தைச் சொல்லும்படி வைத்துவிட்டாயே…

“மகனே! குழந்தை இறந்த சோகத்தில் உள்ள உன்னுடைய தவிப்பு தாயான எனக்குப் புரிகிறதடா! ஒரு தேவ ரகசியத்தைச் சொல்லும்படி என்னை வைத்து விட்டாயே மகனே!

மகனே! நான் என்ன சொன்னாலும் உன் மனம் சமாதானம் அடையாது. ஆனாலும் சொல்கிறேன் கேள்!

உன் குழந்தை முற்பிறவியில் பாவம் செய்த ஆன்மா! உன் முன்னோரில் அவன் ஒருவன்.

ஒருமுறை கர்ப்பிணிப் பெண் ஒருத்தியை மாடியிலிருந்து தள்ளிவிட்டவன். மாடிப்படியிலிருந்து வயிற்றில் குழந்தையோடு உருண்ட அவள் செத்துப் போனாள். அந்தக் குழந்தையும் வயிற்றிலேயே செத்துப் போனதடா! சாவதற்கு முன் அவள் ஆத்திரத்தில் அடப்பாவி! உன் வம்சம் விளங்காது! என்று சாபமிட்டுவிட்டுச் செத்தாள் மகனே!

சாபத்திற்கும் ஒரு சக்தியைக் கொடுத்தவள் நான் தானடா மகனே! அந்தச் சாபத்தாலும், பாவத்தாலும் தானடா அவன் அற்ப ஆயுளோடு மாண்டு போனான்.

அந்தப் பாவம் இன்னும் தீரவில்லையடா மகனே! அவன் ஒரு பன்றியாகப் பிறவியெடுத்து ஊழ்வினையை அனுபவிக்கிறானடா மகனே! நீ இருக்கும் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தே இன்ன ஊர் சென்று பார்! அங்கே ஒட்டர்கள் எனும் இனம் வாழும் பகுதிக்குப் போ! இன்னின்ன அடையாளமுள்ள ஒரு குடிசை வீட்டுக்கு முன்பு நின்று பார்; அங்கே ஒன்பது பன்றிக் குட்டிகள் இருக்கும்! அவற்றில் ஒரு குட்டிக்கு நெற்றியும், காதுப் பகுதியும் வெள்ளையாக இருக்கும்! அவற்றில் ஒரு குட்டிக்கு நெற்றியும், காதுப் பகுதியும் வெள்ளையாக இருக்கும். ஒரு கோடு தெரியும்! இறந்து போன உன் பையனின் ஆத்மா அதுதானடா! இதெல்லாம் சொல்லக்கூடாத தேவ ரகசியமடா மகனே!

நீ என் பக்தன்! என் தொண்டன் என்பதால் இதையெல்லாம் சொல்ல வேண்டியதாகிவிட்டதடா மகனே! உத்தரவு” என்று சொல்லி அனுப்பிவிட்டாள்.

அன்னை ஆதிபராசக்தி சொல்லியபடி, அந்தக் கிராமத்துக்குப் போனார். அந்த இனத்தார் வசிக்கும் இடம் தேடினார். அன்னை சொன்ன அடையாளத்துடன் கூடிய ஒரு குடிசை வீட்டின் முன் நின்றார்.

அவர் போய் நின்ற வேளையில் பன்றிக் குட்டிகள் வெளியே மேய்வதற்கு வந்தபடி இருந்தன. எண்ணிப் பார்த்தார். ஒன்பது குட்டிகள். கடைசியாக வந்த ஒரு குட்டி! அதன் நெற்றிப் பகுதியும், காதுப் பகுதியும் வெள்ளை நிறத்தில் இருந்தன! பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொல்லியபடி நெற்றியில் ஒரு கோடும் இருந்தது!

அதன் பிறகே அந்தத் தொண்டர் மனம் சமாதானம் அடைந்தது.

ஒவ்வொரு ஆன்மாவும் அதனதன் பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி அச்சுமாறிப் பிறவி எடுத்து வருகின்றன என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது.

நால்வகைத் தோற்றம் – எழுவகை பிறவி – 84 லட்சம் யோனிபேதம் என ஆன்மாக்கள் அச்சு மாறிப் பிறப்பதாகச் சாத்திரங்கள் சொல்கின்றன.

காரணமின்றிக் காரியம் இல்லை! என்பது பிரபஞ்ச இயக்கத் தத்துவம்!

எல்லாமே இங்குக் காரண காரியத்துடனே நடக்கின்றன. இந்த விதிப்படி தான் மானிட வாழ்க்கையும் நடக்கிறது!

கோவை – சுந்தரம் – ஒரு பெண்மணி சொல்லிய தகவல்கள்.

சுமார் இரண்டு மாதத்துக்கு முன்பு (2013 சூன் மாதம்) ஒரு நாள் நமது சித்தர் பீடத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை வணங்கிவிட்டு வெளியே வந்து ஒரு கடைக்குப் போய்க் கொண்டிருந்தேன்.

அப்போது நடுத்தர வயதுள்ள பெண்மணி ஒருவர், சக்தி! சக்தி! கொஞ்சம் நில்லுங்கள்! என்று கூறி என்னைத் தடுத்து நிறுத்தினார். பல நாட்களாக உங்களை நேரில் பார்த்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அற்புதம் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று முயற்சிக்கிறேன் முடிவதில்லை.

இன்றுதான் நீங்கள் கிடைத்தீர்கள். உங்களிடம் அந்தத் தகவலைச் சொல்வது போல ஒரு கனவு கண்டேன்.

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்கோயிலுக்கு வரும்போதெல்லாம் உங்களைத் தேடுவேன். நீங்களோ அகப்படுவதில்லை. அப்படியே உங்களைப் பார்த்தாலும் அந்தத் தகவல்களைச் சொல்லத் தயக்கமாக இருந்தது.

அதை எப்படியும் சொல்லிவிட்டால்தான் எனக்கு நிம்மதி! தயவு செய்து நான் சொல்வதையெல்லாம் கேளுங்கள்! சக்தி ஒளியில் எழுதுங்கள் என்றார்.

அவர் சொல்லியவை வருமாறு…

ஒருமுறை சுந்தராபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் நாங்கள் மகளிரெல்லாம் வழிபாடு செய்து கொண்டிருந்தோம். அப்போது மன்றத்தின் வாசலில் கொடிக்கம்பம் அருகே நாய் ஒன்று வந்து நின்றபடி, நாங்கள் சொல்லும் மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு சாது போல நின்றிருந்தது.

அந்த நாய் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக கொழுகொழுவென்று இருந்தது. மந்திரங்கள் படித்தபடியே, அந்த நாயையும் கவனித்துக் கொண்டிருந்தோம்.

வழிபாடு முடிகிற நேரம்….!

திடீரென்று அந்த நாய் சுருண்டு விழுந்தது! காக்கை வலிப்பு வந்தது போல அதன் கால்கள் விலுக்! விலுக்கென்று உதைத்துக் கொண்டு துடித்தது. அதைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது!

வழிபாடு நிறைவடைந்தவுடன், ஒரு சிலர் ஓடி வந்து அந்த நாயைப் பார்த்தோம். பாவம்! இந்த வாயில்லா ஜீவன் இப்படித் துடிக்கிறதே! இதற்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லையே…. என்று பரிதாபப்பட்டோம்!

ஒருவர் உள்ளே ஓடிப்போய்க் கொஞ்சம் கலச தீர்த்தம் எடுத்து வந்து, நாயின் காதில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் மூல மந்திரம் சொல்லி, அதன் வாயில் ஊற்றினார். அவ்வளவுதான்…!

அந்த நாய் அப்படியே வலிப்பு நின்று – மூச்சடங்கிச் செத்துப் போய் விட்டது…..!

ஐயோ! இது பிழைக்க வேண்டும் என்றுதானே கலச தீர்த்தம் ஊட்டினோம்! மூலமந்திரம் சொன்னோம்! செத்து விட்டதே என்று கவலைப்பட்டோம்.

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்கலச தீர்த்தத்துக்குச் சக்தி இல்லையா…? அவள் மூலமந்திரத்துக்குச் சக்தி இல்லையா…?

இந்த நாய் செத்துப் போக நாம் காரணமாக இருந்து விட்டோமே…. என்ற குற்ற உணர்வு குறுகுறுக்க வீடு போய்ச் சேர்ந்தோம்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து எங்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கனவில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்அதற்கு விளக்கம் அளித்தாள்.

அது சாதாரண நாய் அல்லவாம்….! தேவலோகத்தில் இருந்த ஒரு ரிஷியின் ஆத்மாவாம்! ஒரு சாபம் காரணமாக அது நாய் ஜென்மம் எடுத்து வந்து நின்றதாம்!

“நீங்கள் மூலமந்திரம் சொல்லிக் கலச தீர்த்தம் ஊட்டியதால் அந்த ஆன்மா ஜென்ம சாபல்யம் நீங்கி மீண்டும் பழையபடி தேவலோகத்துக்குச் சென்று விட்டதாம்!

உங்கள் மூலமாக அந்த ஆன்மாவுக்கு நற்கதி கிடைத்து விட்டது! இது குறித்து உங்களுக்குள் சர்ச்சை எதுவும் வேண்டாம்” என்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் கனவில் சொன்னாளாம்.

என்னால் தெளிவாக எடுத்துச் சொல்லத் தெரியவில்லை சக்தி! நான் படிக்காதவள்! எனக்கு விவரம் பத்தாது! நீங்கள் அந்தப் பெண்ணிடம் கேட்டு எழுத வேண்டும். அவள் எங்கள் சுந்தராபுரத்தைச் சேர்ந்தவள்தான்!

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் மகிமை உலகத்துக்கெல்லாம் தெரியணும் சக்தி! என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டார் அந்தப் பெண்மணி….

அவர் குறிப்பிட்டுச் சொன்ன அந்தப் பெண்ணிடம் விசாரித்தேன். அந்தப் பெண் அம்மாவின் தீவிர பக்தை! தீவிர பக்தை என்பதை விட “பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பைத்தியம்!” என்றே சொல்லலாம். நகை மோகம்! ஆடம்பர மோகம்! பெரிய உத்தியோகம்! கார்! பங்களா என்ற விரிந்த கனவுகள் எதுவும் அவரிடம் காணோம்!

“அது சரி! மன்றத்துக்கு வந்து செத்துப் போன அந்த நாய் பற்றி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் உனக்குக் கனவில் விளக்கம் கொடுத்தாளாமே… அதை விபரமாகச் சொல்லு” என்று கேட்டேன்.

அதுவா…? அது நடந்து சுமார் எட்டு வருடங்கள் ஆச்சே…! என்றார். என் பெயரைப் போடக்கூடாது என்று நிபந்தனை கேட்டார்.

சரி தாயே! சொல்லு! சொல்லு! என்று மன்றாடினேன்.

அவர் சொன்ன விவரங்கள் பின்வருமாறு.

தேவ லோகத்தில் நடந்த ஒரு யாகம்:

5000 வருடங்களுக்கு முன்பு தேவலோகத்தில் பெரிய யாகம் ஒன்று நடந்தது. பல ரிஷிகள் கலந்து கொண்டார்கள். அதில் தேவலோக ரிஷிகளும், அசுர குலத்து ரிஷிகளும் கலந்து கொண்டார்கள்.

தேவரிஷி ஒருவர் ஸ்பஷ்டமாக மந்திரம் சொல்லி யாககுண்டத்தில் ஆவுதி அளித்தபடி இருந்தார். அசுர குல ரிஷி ஒருவர் அந்தத் தேவரிஷி உச்சரித்த மந்திர உச்சாடனத்தைக் கேட்டு, பொறாமை கொண்டு, நாய் ஒன்று உறுமுவது போல உருமியபடியும் பரிகாசம் செய்தபடியும் இருந்தார்.

யாகம் முடிகிறவரை பொறுமையுடன் இருந்த தேவரிஷி, யாகம் முடிந்தபிறகு அந்த அசுர குல ரிஷியை நோக்கி “அட நீசனே….! தெய்வ யாகத்தில் கலந்து கொள்பவன் எப்படி அடக்க ஒடுக்கமாகப் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட உனக்குத் தெரியவில்லை.

என்ன அவமதித்தாய்! யாகபூஜையை அவமதித்தாய்! நாய் உறுமுவது போலப் பரிகாசம் பண்ணினாய் அல்லவா…? நீ நாயாகவே ஜென்மம் எடுத்து அலைவாய் என்று சாபமிடுகிறேன் போ!” என்று கோபத்துடன் சாபமிட்டார்.

அந்தத் தேவரிஷி தவபலம் மிக்கவர்! முக்காலமும் உணர்ந்தவர். ஆதலால் பயந்து போன அசுரகுல ரிஷி ஐயனே! மன்னித்து விடுங்கள்! மனம் வைத்து சாப விமோசனம் கொடுங்கள்! என்று மன்றாடினார்.

“5000 வருடம் கழித்து, ஜகன் மாதா ஆதிபராசக்தி பூலோகத்தில் அவதாரம் செய்யப் போகிறாள்! அப்போது 108 சக்தி பீடங்கள் நிறுவப் போகிறாள். அந்தச் சக்திபீடங்கள் ஒன்றில் நாய் ஜென்மம் எடுத்து நிற்கப் போகிறாய்.

அங்கேதான் உனக்கு சாபம் நீங்கும்! சாபம் நீங்கிய பிறகே மீண்டும் இந்தத் தேவலோகத்துக்கு வந்து சேருவாய்!” என்றார் தேவரிஷி.

தேவரிஷியின் சாபப்படி 5000 வருடம் அலைந்து திரிந்து, கடைசியாக நாய் ஜென்மம் எடுத்து வந்த ஆத்மாதான் அந்த அசுர குலத்து ரிஷி!

“உங்கள் மன்றம் சக்தி பீடமாகப் போகிறது. அந்த ஆன்மா அந்த இடத்தில் வந்து நின்றதாலும், நீங்கள் மூல மந்திரம் சொல்லிக் கலச தீர்த்தம் ஊட்டியதாலும் சாபம் நீங்கியது. அந்த ஆன்மாவுக்கு நற்கதி கிடைத்தது. ஆகவே இது குறித்து உங்களுக்குள் எந்த சர்ச்சையும் செய்ய வேண்டாம்” என்று கனவிலேயே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் விளக்கம் கொடுத்து விட்டார்கள் என்று சொல்லி முடித்தாள் அந்தப் பெண்.

இது தவிர வேறு அனுபவங்களை பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் கொடுத்திருக்கிறாளா? என்று கேட்டேன்.

நிறைய….! என்றார். அவற்றை என் டைரியில் எழுதி வைத்திருக்கிறேன். என்றார்.

அதையெல்லாம் சக்திஒளிக்கு ஏன் எழுதி அனுப்பமாட்டேன் என்கிறீர்கள்? எனக் கேட்டேன்.

நம்பமாட்டாங்களே சக்தி….! என்றார்.

“என்னைச் சுற்றி இருக்கிறவனே என்னை நம்பமாட்டேன் என்கிறான்” என்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஒருமுறை சொன்னது என் நினைவுக்கு வந்தது! அத்துடன் ‘கலியுகத்துக்குத் தக்கபடிதான் மனிதபுத்தியும் அமையும்’ என்ற தேவி பாகவதத்தின் வரியும் நினைவுக்கு வந்தது.

5000 வருடங்கள் ஒரு சாபம் காரணமாக எங்கெங்கோ பிறந்து எப்படி எப்படியோ அலைந்து – இறுதியாக நாய் ஜென்மம் அடைந்து, கந்தபுரத்தில் அமையப் போகிற சக்தி பீடத்திற்கு வந்து, மூலமந்திரம் ஓதக் கேட்டு, கலச தீர்த்தம் வாயில் நுழைந்து, சாபம் நீங்கி ஒரு ரிஷியின் ஆன்மா பழையபடி தேவலோகத்துக்குச் சென்று அடைந்தது.

அப்படியென்றால்…..

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் மகிமை என்ன….?

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்அருளிய மூலமந்திரத்தின்
சக்தி எப்படிப்பட்டது?

நமது வேள்விக் கலசத் தீர்த்தத்தின் மகிமை என்ன….?

இதெல்லாம் நமது மன்றத் தலைவர்கள் வட்டத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், நம் இயக்கப் பொறுப்பாளார்கள், வேள்விக் குழுவினர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு வைரச் சுரங்கமே நம் கண்முன் கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்களாக நாம் இருந்தால் நம்மையெல்லாம் என்னவென்று சொல்லி அழைப்பது…?

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொல்லிய அருள்வாக்கு:

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொல்லிய அருள்வாக்கு ஒன்றை நினைத்துப் பாருங்கள்.

“ஏதோ ஒரு வழிபாட்டு மன்றம்! ஏதோ ஒரு பங்காருஅடிகளார்! என்னவோ ஒரு செவ்வாடை! ஏதோ ஒரு சிறிய இயக்கம்! என்று இந்த ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தைக் குறைத்து மதிப்பிடாதே!”

காவிரியிலிருந்து நீர் வரவேண்டும், மேட்டூர் அணை நிரம்ப வேண்டும் என்று சங்கல்பம் வைத்து நம் வேள்விக் குழுவினர் மேட்டூரில் ஒரு வேள்வி நடத்தினார்கள்.

அது பற்றி ஒருவருக்கு அன்னை ஆதிபராசக்தி கனவில் சொன்னாளாம்.

“5000 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் வேள்வி ஒன்று நடந்தது. அந்த வேள்வியில் கலந்து கொண்டவர்களே இந்த வேள்வியில்கலந்துகொண்டவர்கள்” என்றார்ளாம்.

5000 வருடத்துக்கு முன்பு நடந்த சம்பவங்கள் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு எப்படித் தெரியும்? என்று நமது செவ்வாடைகளே சந்தேகப்படக் கூடும்!

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் தான் அன்னை ஆதிபராசக்தி என்று இன்னும் புரிந்து கொள்ளாத செவ்வாடைகள் கூட இருக்கின்றனரே…. என்ன செய்ய….

பழனியில் ஒரு சித்தர் சொன்னது

‘ஒரு சித்தர் சொன்னவை’ என்ற தலைப்பில் பேராசிரியர் கண்ணன் ஒரு கட்டுரை சக்தி ஒளியில் எழுதியிருதார். அதில் நம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை பற்றி மூட்டை சுவாமிகள் என்ற சித்தர் சொல்லிய விவரங்கள் இவை.

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் படத்தைப் பார்த்து சுவாமிகள் என்னிடம் கூறியது:

“சாமி! இந்தப் படம்தான் நேத்துப் பேசிச்சு! இன்னிக்கும் பேசுது! நாளைக்கும் இதுதான் சாமி பேசும் விட்டுறாதே!

“சாமி! இவர்தான் என்னைச் சித்தன் ஆக்கினவரு! சாமி! இவர்தான் என்னைப் பறவையாய் மாற்றினார். என்னைக் கரடியாய் மாற்றினார். கபாடபுரத்திலே மரமாக மாற்றினார். என்னென்னவோ ஆகிப் போச்சு சாமி.

அஞ்சு பூதமும் (பஞ்ச பூதமும்) இவர் சொன்னா கேட்கும் சாமி! மழை பெய் என்றால் பெய்யும் சாமி!

எங்களுக்கெல்லாம் குருநாதர் இவர்தான்! இவருக்கு நான் பாதபூஜை செஞ்சிருக்கேன்!

சாமி! எல்லா அவதார காலத்திலேயும் என்னைக் குருநாதன் சுற்றச் சொல்கிறார்- சுத்திக் கிட்டே வர்றேன். இது என்ன அவதாரம் என்று உனக்குத் தெரியாது! எனக்குத் தெரியும்! இது கடைசி! உலக நன்மைக்கு வந்த அவதாரம்! அதுக்கு மேல சொல்லக்கூடாது”

கபாடபுரம் என்பது என்ன?

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். முதல் தமிழ்ச் சங்கம் தென் மதுரையில் இருந்தது. அப்போது கடல்கோள்(சுனாமி) ஏற்பட்டு தப்பிப் பிழைத்து மக்கள் முன்னேறி வந்தார்கள். பிறகு கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய ஆட்சி நடந்தது.

இரண்டாவது தமிழ்ச் சங்கம் கபாடபுரத்தில் அமைந்தது. இரண்டாவது கடல் கொந்தளிப்பு ஏற்பட்டும் கபாடபுரம் அழிந்தது. மக்கள் தப்பிப் பிழைத்து மேலும் முன்னெறினார்கள். குடிவந்தார்கள். அந்த நகரம் தான் இப்போதுள்ள மதுரை!

கபாடபுரம்! அங்கிருந்த இரண்டாம் தமிழ்ச்சங்கம் பற்றிய காலக்கணக்கு பற்றி அறிஞர்கள் குழம்புகிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுக்கு முன் இருந்த கபாடபுரம் பற்றி வால்மீகி ராமாயணம் விவரிக்கிறது! பாண்டியர் அரண்மனை முத்துக்களாலும் வைரத்தாலும் ஜொலித்ததாம்!

அத்தகைய ஒரு காலகட்டத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் பழனிச்சித்தரை மரமாக மாற்றி வைத்திருந்தாராம்!

பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் காலம் கடந்தவர்கள். 5000 ஆண்டுகள் என்ன? அதற்கும் முற்பட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சியும் அறிந்தவர்கள்.

அன்னை ஆதிபராசக்தியைப் பற்றி ஒரு முறை பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் சொன்னது இது!

“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன்னிருந்த அம்மாதான் இப்போது வந்திருக்கிறது!

அதுதான் இதையெல்லாம் நடத்துகிறது. இமயமலையைத் தாங்குவது போலத் தாங்க வேண்டியிருக்கு! அம்மாவைத் தாங்குவது இமயமலையைத் தாங்குவது மாதிரி!” என்று தனது அருள்நிலை பற்றிக் குறிப்பிட்டார்கள்.

“வாழ்க்கை என்பது மின்னல் போலத் தோன்றி மறையும் அனுபவம்! “ என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.

காலம் கடந்தவள் அப்படிச் சொல்கிறாள். நம்மால் இந்த அருள்வாக்கை ஜீரணம் செய்து கொள்ள முடிகிறதா?

இந்த ஒரு பிறவி வாழ்க்கையையே திரும்பிப் பார்க்கிறபோது மலைப்பாக இருக்கிறது! இதில் எத்தனை எத்தனை அனுபவங்கள்! என்னென்ன புதிர்கள்! என்னென்ன மர்ம முடிச்சுகள்!

ஓம் சக்தி!
பக்கம் (34 – 42).
சக்தி ஒளி – செப்டம்பர் 2013.