நானும் என் கணவரும் உடுமலைப்பேட்டையை அடுத்த காரத்தொழுவில், மருத்துவர்களாகப் பணிபுரிகிறோம். எங்களுக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகளாகியும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. நாங்களே மருத்துவர்களானதால், என்னென்ன பரிசோதனைகள் செய்ய வேண்டுமோ அவை எல்லாமும் செய்தோம். எங்கள் இரண்டு பேரிடமும் எந்தக் குறையுமில்லை. கருத்தரிக்கத் தேவையான ஊசி போட்டும், மருந்துகள் சாப்பிட்டும் எந்தப் பயனுமில்லை.

இந்த நிலையில் ஒருநாள் என் கணவருடைய பழைய நண்பர், பள்ளித்தோழர் சக்தி கணேஷ்குமார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. அவர் உடுமலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அங்கு நமது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

நாங்கள் ஒவ்வொரு படமாகப் பார்த்துக் கொண்டிருந்த போது சக்தி கணேஷ்குமாரும், அவர் துணைவியார் சக்தி லோகேஸ்வரியும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருமை பெருமைகள் பலவற்றைக் கூறிவிட்டு, 14-08-1998 அன்று தாங்கள் மேல்மருவத்தூர் செல்ல இருப்பதாகவும், எங்களையும் வருமாறு அழைத்தார்கள். சரி என்றோம்.

திட்டமிட்டபடி மேல்மருவத்தூர் சென்றடைந்தோம். மறுநாள் காலை உரிய முறைப்படி தட்டு வைத்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை வணங்கினோம்.பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்
ஒரு ஆளை அழைத்து, அங்குள்ள மருத்துவமனை, கல்வி நிலையங்கள் அனைத்தையும் சுற்றிக் காட்டி விட்டு அழைத்து வருமாறு சொன்னார்கள். அவ்வாறே பார்த்து விட்டு வந்தோம். வேப்பிலை கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள்.சாப்பிட்டோம்.

அதற்குப் பிறகு இரண்டு நாளும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை தனியாகச் சந்திக்க முயன்றோம். முடியவில்லை. 17-08-1998 காலை முதல் மதியம் வரை கோயிலிலேயே இருந்தோம். பக்தர்கள் பாதபூஜை செய்வதற்காகக் காத்திருந்தனர். நாங்களும் வரிசையில் சேர்ந்து கொண்டு சென்றோம்.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் தன் மௌனத்தைக் கலைத்துக்கொண்டு “குழந்தை இல்லாத குறை தீரத்தானே வந்திருக்கிறீர்கள்? கவலைப்பட வேண்டாம்! இப்போதே கருவை நிலை நிறுத்தி விடுகிறேன்!” என்று கூறிவிட்டு குங்குமம் கொடுத்தார்கள். மிகுந்த சந்தோசத்துடன் ஊரை நோக்கிக் கிளம்பினோம். நான் சித்தர் பீடத்திற்கு வரும்போதே மூன்று நாட்கள் தூரம் தள்ளிப்போய் இருந்தது.

எப்பொழுதுமே 10 அல்லது 15 நாட்கள் அதிகமான பின் தூரம் ஆவேன். ஆனால் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் கருணையால் கரு அப்பொழுதே வயிற்றில் தங்கி விட்டது.

ஆம்! அதற்குப்பிறகு தூரமாகவில்லை. வரும்போதே வாந்தியெடுக்கத் தொடங்கி விட்டேன். இப்பொழுது ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாயாகி இருக்கிறேன். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் எங்களை வரவழைத்து ஆசீர்வதித்தது இதற்குத்தான் என்று புரிந்து கொண்டேன்.

குழந்தை பிறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு எங்கள் கிளினிக்கில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் பெரிய திருவுருவப்படம் இரண்டு கிடைத்தது.

பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்இன்று எங்கள் வாழ்க்கையோடு ஒன்றாகிவிட்டாள்! கருத்தரித்த நாள் முதல் குழந்தை வெளியே வரும் வரை பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என் கூடவே இருந்தாள் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்திருக்கிறேன்.

ஓம்சக்தி!
சக்தி. டாக்டர். உமா ஸ்ரீதரன், உடுமலைப்பேட்டை.
பக்கம் 140 – 141
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து…..