அதிசயமான தேன்கூடு

0
1171

நான் சில தொழில்களில் ஈடுபட்டுச் சில காரணங்களால் 10 இலட்சம் ருபாய் அளவிற்கு நாட்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் மனமுடைந்து நான், என் மனைவி, என் மகள் மூவரும் இந்த உலகை விட்டே சென்று விடலாம் என்று முடிவு செய்திருந்தோம்.
இதற்கிடையில் என் வீட்டில் ஒரு பெரிய தேன்கூடு ஒன்று திடீரென்று ஒருநாள் தோன்றியது. வீட்டில் தேன்கூடு இருப்பது குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்லிப் பயமுறுத்தினார்கள். அப்போது மேல்மருவத்தூர் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. என் மனைவி மேல்மருவத்தூர் பற்றியும், இருமுடி மகிமை பற்றியும் யாரோ சொல்லக் கேட்டு நாமும் இருமுடி எடுக்கலாமே… அந்த அம்மனாவது கண் திறந்து பார்க்க மாட்டாளா? அவள் மூலமாகவாவது நமக்கு விமோசனம் கிடைக்கிறதா என்று பார்க்கலாமே…? என்று யோசனை கேட்டாள்.
குடும்பத்தோடு இருமுடி எடுப்பது என்று தீர்மானித்துக் கொண்டோம். சரி! எனக்கு வெளியே சில வேலைகள் இருக்கு! போய்விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லி, வெளியே போய் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பி வந்து பார்க்கிறேன்… அந்த தேன்கூடு மாயமாய் மறைந்துவிட்டிருக்கிறது. தேன்கூடு இருந்ததற்கான சுவடே தெரியவில்லை.
என்னடா இது…. அதிசயமாக இருக்கிறது என்று வாசல் வெளியே பார்க்கிறேன். இன்னொரு அதிசயம்! ஆம் அங்கே ஒரு பாம்பு! மஞ்சள் நிறம்! படமெடுத்தபடி எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறது! நான் பயந்து போய் “அம்மா! தாயே!” என்று கையெடுத்துக் கும்பிட்டேன். அது எங்களை ஆசீர்வதிப்பது போல தலையை ஆட்டியபடியே இருந்தது.
இருமுடி போடலாம் என்று நினைத்த அளவிலேயே அம்மா வீடு தேடி வந்து ஆசீர்வதிக்கிறாளே… என்று மனம் குதூகலித்தது. இனி நமக்கு நல்ல காலம் வரும் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.
அடுத்த நாளே சக்திமாலை அணிந்து மருவத்தூர் வந்து இருமுடி செலுத்தினோம்.
அதன்பின் பங்காருஅம்மாவிற்குப் பாதபூஜை செய்தோம். அம்மா எங்களை அன்போடு பார்த்து, “உன் கஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும்! உன் கஷ்டத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்று கூறி அனுப்பினார்கள். ஏதோ பாரம் நீங்கியது போல இருந்தது. ஊர் திரும்பினோம்.
எனக்குக் கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்கிக் கொண்டிருந்தார்கள். எனது சொத்து ஒன்றை விற்றுக் கடனை அடைக்க முயன்று கொண்டிருந்தேன். அது விலை போகவில்லை. ஈன விலைக்கே கேட்டார்கள்.
பங்காருஅம்மாவுக்குப் பாத பூஜை செய்து விட்டு ஊர் வந்தேன் அல்லவா? உன் கஷ்டத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாள் அல்லவா?
பல வருடங்களாக விற்க முடியாமல் இருந்த அந்தச் சொத்தை அதிகவிலை கொடுத்து வாங்க ஒருவர் முன்வந்தார். என்னாலேயே நம்ப முடியவில்லை…! எல்லாம் அம்மா அருள்! அந்தச் சொத்தை விற்று என் கடன்களையெல்லாம் அடைத்து விட்டேன். மீதி 10 இலட்சம் பாதுகாப்பாகச் சேமிப்பில் போட்டு வைத்திருந்தேன். அது மட்டுமா…? எனக்கு திருப்பூரில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது. சொந்தமாக இடம் ஒன்று வாங்கி விட்டேன். நல்ல வேலையில் நல்ல சம்பளத்துடன் வாழ்ந்து வருகிறேன்.
இருமுடி போட்டு மருவத்தூர் பங்காரு அம்மா அவர்களிடம் வந்தேன். வாழ்க்கையில் நல்ல திருப்பம் அமைந்தது. என் மனைவி Ph.D பட்டம் வாங்க முயன்று வந்தாள். பல தடங்கல்கள் வந்தன. இப்போது அந்தத் தடங்கல்கள் எல்லாம் நீங்கி விட்டன.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பாதுகாப்பு நிழலில் அவளைத் தினமும் வணங்கி வருகிறோம். சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம்.
ஓம்சக்தி!
சக்தி டி.செந்தில் மகேஷ்,
திருப்பூர்.
பக்கம் 6-7.
சக்தி ஒளி – ஜனவரி 2020.