பிள்ளை அழுதிடப் பெற்றவள் இருப்பாளோ!!!!

0
1299
மாதா, பிதா, குரு,தெய்வம் என அனைத்துமாய்த் திகழும் நம்
பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் அருளால் வாழும் கோடானு கோடி குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்று.
நான் திருமணமாகி எனது
கணவருடன் அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது திருமணம் பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் ஆசியுடன் முன்பாகத்தான் நடந்தது. திருமணத்திற்கு பின் என் கணவருடன் அமெரிக்கா வந்த நான் ஒரு வருட காலத்திற்கு பின் நிறைய துன்பத்திற்கு ஆளானேன். ஒருவருடத்தில் எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகு எனக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாதாரண வயிற்று வலியாக இல்லாமல் தாங்க முடியாத வலியாக இருக்கும். ஏன் இந்த வலி என்று குழம்பிய நான் பெண் மருத்துவர் ஒருவரிடம் பரிசோதனைக்குச் சென்றேன்.
முடிவில் எனக்கு ஓவரியன் சிஸ்ட்
(Ovarian Cyst ) இருப்பதாகத் தெரிய வந்தது. முதல் பரிசோதனையில் 3 செ.மீ. அளவிற்கு வளர்ந்திருந்தது.
இந்தவலிக்கு மருந்து எதுவும் எனது மருத்துவர் தரவில்லை.வெளி நாடுகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரே
தீர்வு அறுவை சிகிச்சை தான்.
வீட்டில் குழந்தையையும் கவனித்துக்
கொண்டு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டு தாங்க முடியாத வலியுடன் மிகவும்துன்பப்பட்டேன். வேலை செய்யவும் உதவி செய்யவும் வேறு ஆட்கள் கிடையாது.
சிஸ்ட் வளர வளர, நாட்கள் ஆக
ஆக வலியும் மிகவும் அதிகரித்தது.
படுத்தால், எழுந்தால், அமர்ந்தால்
வலி அதிகமானது. தூங்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டேன்.பிரசவ வலி போன்று தினமும் வலியினால்
மிகவும் துன்பப்பட்டேன்.
சுமார் 5 மாதத்தில் சிஸ்ட் 7 செ மீ அளவிற்கு வளர்ந்து விட்டது. மேலும் சோதனையில் அடுத்த பக்கத்திலும் இடது பக்கத்திலும் மற்றொரு சிஸ்ட் வளருவது கண்டுபிடிக்கப்பட்டது.
சில சமயம் வலியின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூடத் தோன்றியது. இதற்கு ஆபரேஷன் செய்வது என்று எனது மருத்துவர் முடிவு செய்து நாளும் குறித்துவிட்டார். நான் என்ன
செய்வது என்று தெரியாமல் குழம்பினேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களை எப்பொழுதும் வேண்டிக்கொண்டிருந்தேன்.
மருத்துவர் கருத்துப்படி அறுவை சிகிச்சை செய்தாலும் சிஸ்ட் வளர வாய்ப்புண்டு. மறுபடியும் அறுவை சிகிச்சை செய்தால் ஓவரிஸ் சக்தியிழந்து, பிற்காலத்தில் கர்ப்பப்பையும் சக்தி இழப்பதனால் அதையும் நீக்கி விடுவார்.
25 வயதான எனக்கு ஏன் இந்தச் சோதனை? என்று நினைத்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் தினமும் அழுவேன்.
மேலும் எனக்கு Harmone Imbalance காரணமாகப் பத்து நாட்களுக்கு ஒருமுறை இரத்தப் போக்கும் இருந்தது. எனது பெண் குழந்தைக்கு 2 1 /2 வயது. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு வேறு வழியில்லாமல் அறுவை சிகிச்சைக்குச் சம்மதித்தேன்.
ஜூலை மாதம் 23 – ம் தேதி 2005-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது.
எனது தாயார் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை மேல்மருவத்தூர் சென்று பார்த்த
பொழுது, பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் “ஆபரேஷன் எல்லாம் ஒன்றும் நடக்காது. அவளைக் கொடிவேர்க்கடலை, பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை பொடி செய்து பாலில் கலந்து தினமும் சாப்பிடச் சொல்” என்று கூறினார்கள்.
இதை என் அம்மா என்னிடம் தெரிவித்ததும் தினமும் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்சொல்லிய விதம் சாப்பிட்டு வந்தேன்.
இதற்கிடையில் மருத்துவரிடமிருந்து அறுவை சிகிச்சை குறித்து நாள் முடிவாகச் சொல்லப்பட்டது. சிகிச்சை செய்யாவிட்டால் வளர்ந்து கொண்டே இருக்கும். அறுவை சிகிச்சை செய்தாலும் மீண்டும் மீண்டும் வளரும் வாய்ப்புண்டு.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆபரேஷன் ஒன்றும் நடக்காது என்று சொல்லிவிட்டார்கள். எனவே இறுதியில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு ஆபரேஷனை ரத்து செய்தேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொல்லியபடி பாலில் அந்தக்
கலவையைச் சேர்த்துச் சாப்பிட்டு வந்தேன். அப்படி இருந்தும் வலி குறையாமல் இருக்க எனக்குள் கவலை அதிகமானது.
பிறகு ஒருநாள் நான் தொலைக்காட்சி
(T V )பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் பகலில் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. அன்று என்னவோ
என் மனம் கனத்த நிலையில்
ஒரு மாறுதலுக்காகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இங்கு ராஜ் டிஜிட்டல் டி.வி ஒளிபரப்பாகும். அப்பொழுது நடந்த அதிசயம். ஒரு பெண் ஆயுர்வேத மருத்துவர்; எனக்குள்ள பிரச்சனை குறித்து விளக்கமாகப்பேசிக்
கொண்டிருந்தார்.
மேலும் இந்த ஓவரியன் சிஸ்ட் அறுவை சிகிச்சையின்றி ஆயுர்வேத முறைப்படி குணப்படுத்துவதோடு மீண்டும் வளர வாய்ப்பில்லை என்று கூறினார்.
அந்த நிகழ்ச்சியைப் பார்த்த நான் அவரின் மருத்துவமனை முகவரியைக் கூறியபோது குறித்துக் கொண்டேன்.
பொதுவாகக் கடவுள் நேரில் வருவதை விட மற்றொருவர் உருவில் நமக்குக்
கை கொடுப்பதை உணர்ந்த நான், சென்னையில் உள்ள எனது தாயிடம் கூறினேன். அவர்களும் அந்த ஆயுர்வேத மருத்துவரை நேரில் சென்று பார்த்தார். பிறகுதான் தெரிந்தது அந்த மருத்துவரும் நம் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பக்தர் என்பது.
அந்த ஆயுர்வேத மருத்துவருடன் தொலைபேசியில் பேசிய பிறகு
அவரிடம் சிகிச்சை பெற நானும்
எனது குழந்தையும் இந்தியா
சென்னை செல்ல டிக்கெட்
புக் செய்தேன்.
இதற்கிடையில் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல்
அதிக வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் மனம் தளர்ந்த நான் என் தாயிடம் தொலைபேசியில் அழுதேன்.
என் கணவருக்கு இப்படி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது
நான் மட்டும் இந்தியாவுக்கு வந்து எப்படி சிகிச்சை பெறுவது? வராமல் இருந்தால் எனக்கு உடல்நிலை மேலும் மோசமாகும் நிலை.
மூன்று நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். Endoscopic சோதனை செய்யப்பட்டு இறுதியில் Bacterial infection காரணமாக Ulcer என்று
தெரிய வந்தது.
அம்மா இது என்ன சோதனை? இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரச்சினையா? என்று கதறி அழுதேன்.
மூன்று நாட்கள் கழித்து என் கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.
நிறைய மருந்துகள் தரப்பட்டன.
நான் எனது பயணத்தை ரத்துச் செய்யும் படிக் கூறிய பொழுது எனது கணவர் மறுத்துவிட்டார். தனக்குக் குணமாகிவிடும் என்று கூறினார்.
எனக்கு நம்பிக்கை வரவில்லை.
என் தாயும் எனது உடல்நிலை குறித்துக் கவலையுடன் இருந்தார், அம்மா நம்பிக்கை கொடுத்தார்கள்.
நான் சென்னைக்கு வரும் நாள் நெருங்க எனது கணவரும் குணமடைந்து வந்தார். எனக்குச் சிறிது தைரியம் வந்தது. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்மீது பாரத்தை போட்டுவிட்டுக் குழந்தையை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட நாளில் சென்னை வந்திறங்கினேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை மேல்மருவத்தூர் சென்று பார்த்தேன். ஆயுர்வேதம் குணப்படுத்தும் என்றும் தைரியமாகவும், பொறுமையாகவும் இருக்கும்படி பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள் கூறினார்கள்.
மூன்று மாத காலம் எனது தாயுடன் சென்னையில் தாய் வீட்டில் இருந்தபடி ஆயுர்வேத மருந்துகளும் சேர்த்து சாப்பிட்டு வந்தேன். படிப்படியாக
சிஸ்ட் சுருங்க ஆரம்பித்து வலியும்
சற்றுக் குறைய ஆரம்பித்தது.
மூன்று மாதத்தில் முழுவதும் குணமடைந்தேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் சொல்லியபடி அறுவை சிகிச்சையில்லாமல் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என்னைக் குணப்படுத்தி விட்டார்கள்.
ஊருக்கு அமெரிக்கா திரும்பும் முன் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் சென்று ஆசி பெற்றேன். அம்மா எனக்குத் தைரியம் கொடுத்து ஆசீர்வதித்தார். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின்அருளால் என் கணவரும் முழுமையாகக் குணமடைந்து விட்டார்.
பின்னர் 2006 -ம் ஆண்டு தைப்பூசம் அன்று எனக்கு இரண்டாவது பெண் குழந்தையும் பிறந்தது. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் எல்லாம் நன்றாகவே நடந்தது.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களின் அருளை பெற்றவர்களுக்கு, பரம்பொருள்அம்மா அவர்களைச் சரண் அடைந்தவர்க்கு எந்தவித சோதனை வந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல நீங்கி ஓடிவிடும். தன் பிள்ளையின் துன்பத்தைப் பொறுக்காத தாய் நம் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள். அம்மா! எப்பொழுதும் உன் அருளும் ஆசியும் வேண்டுகிறேன்.
ஓம்சக்தி!
சக்தி ப்ரீத்தா விஜயகுமார்,
நியூ ஹாம்ஷர், U S A
சக்தி ஒளி ப்பிரவரி -2020.