ஆயுளை நீடித்துக்கொடுத்த அன்னை ஆதிபராசக்தி

0
746
இறைவனை உறுதியோடு பற்றிக் கொண்ட பக்தா்களுக்கு நாள் என்ன செய்யும்? வினை தான் என்ன
செய்யும்? நம்மை நாடி வந்த கோள் என் செய்யும்? கொடுங் கூற்று என் செய்யும்? என்று அருணகிரிநாதா் கேட்கிறார்?
இறைவனையே தஞ்சமாக அடைந்த அடியார்களுக்கு கிரகங்களால் வரக்கூடிய துன்பம் வராது என்கிறார் ஞான சம்பந்தா். அவா் பாடிய கோளாறு திருப்பதிகம் புகழ்பெற்றது.
நம்மை அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் விதியையும் மீறி சோதிட சாத்திரங்களின் விதிகளையும் மீறி அன்னை சிலரது விதியையே மாற்றியிருக்கிறாள். சிலரது ஆயுளை நீடித்துக் கொடுத்திருக்கிறாள்.
நான் அறிந்த வரை பதினேடு போ் ஆயுளை நீடித்துக் கொடுத்திருக்கிறாள் சக்தி ஒளிக்கு எழுதி அனுப்பியவா்கள் இவா்கள். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களால் ஆயுள் நீடிக்கப்பட்டவா்கள் பலா் இருக்கலாம். நான் அறிந்த வரை சிலரை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.
பகுதி 1
சக்தி சி. ராமசாமி – ஆசிரியா் சக்தி ஒளி
நமது அன்னை ஆதிபராசக்தியின் அவதாரகாலப் பெருமைகளை விளக்கிடும் மாத இதழ் சக்தி ஒளி ஆகும். இதழாசிரியா் அன்னை ஆதிபராசக்தியால் நியமிக்கப்பட்டவா். முதிர்ந்த வயதான சக்தி சி. ராமசாமி என்ற அன்பராவார். காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவா். வரலாற்றுப் புகழ் மிக்க ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் உணவுப் பொறுப்புக்களை ஏற்று திறம்படச் செயல் புரிந்தவா். திருமணமாகாதவா். பொறியியல்ப்பட்டம் பெற்றவா்.
அவரிடமிருந்த தகாத பழக்கம் 20 வருடமாக குதிரைப் பந்தயம் சென்று கொள்வது. அரசியலை வெறுத்து குதிரைப் பந்தய சூதாட்டத்தையும் விட்டு அவா் அன்னை ஆதிபராசக்தியிடம் வந்த கதை வேடிக்கையானது. இவருடைய நண்பர் ஒருவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போது அவரை அழைத்துக்கொண்டு 03.03.1982 அன்று மேல்மருவத்தூா் வந்தார். சக்தி ராமசாமிக்கு அருள்வாக்குக் கேட்க விருப்பமில்லாததால்
தனது நண்பரின் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டுச் சித்தா்பீடத்தை வலம் வந்துவிட்டு காரில் வந்து அமா்ந்துவிட்டார். இவரது நண்பருக்கு அருள்வாக்கும் பரிகாரமும் கூறிய அன்னை ஆதிபராசக்தி “உன்னை இங்கே அழைத்துக்கொண்டு வந்த மகனை என்னிடம் வரச்சொல்” என்று கூறினார். இதை சக்தி ராமசாமியிடம் கூறி புற்று மண்டபத்துக்கு அனுப்பி அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்குக் கேட்க வைத்தார். இவரைப் பொறுத்தவரையில் அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்குக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இவா் அன்னை முன் உட்கார்ந்ததும் அன்னை கூறினாள் “மகனே! நீயோ திருமணம் செய்துகொள்ளவில்லை. தனிக்கட்டை! உனக்கு வாரிசு என்று யாருமே இல்லை. இங்கே விரைவில் ஆன்மீக மாநாடு நடத்தப்போகிறேன்.
அம் மாநாட்டில் வந்து தொண்டு செய்! அதன் பிறகு இங்கேயே இருந்துகொண்டு தொண்டு செய்! குதிரைப் பந்தயத்துக்குச் சென்று ஏன் வீணாகக் காலம் கழிக்கிறாய்? வேறு ஏதாவது கேட்க வேணுமென்றால் கேள் மகனே! என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
அதுகேட்ட சக்தி ராமசாமி “தாயே! எனக்கோ எழுபது வயதாகிறது. நீண்ட நாட்களாக தீராத வயிற்றுவலி இருந்து வருகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிரோடு இருக்கப்போகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது. ஜோதிடா்களோ “உன் சனி திசை முடியவில்லை” என்று கூறுகிறார்கள். வெகு விரைவில் உன் ஆயுள் முடியுமென்று சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார்கள். இந்த நிலையில் இருக்கும் நாள் இங்கு வந்து என்ன தொண்டு செய்ய முடியும்?” என்று வினயமாகப் பதிலளித்தார். உடனே அன்னை ஆதிபராசக்தி“மகனே! உன் ஆயுள் என் கையில் இருக்கிறது! உனக்கு மரணம் சமீபத்தில் இல்லை. எந்த நோயும் உன்னைப் பாதிக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ இங்கே வந்து தொண்டு செய்!” எனச் சொன்னாள்.
அன்னை ஆதிபராசக்தியை வணங்கிவிட்டு வெளியே வந்தார். இனி இந்தக் குதிரைப் பந்தயத்தின்
பக்கமே போகக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு திரும்பினார். 20 ஆண்டுப் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். மீண்டும் 04.03.1982 அன்று மேல்மருவத்தூா் வந்தார். அப்போது அருள்வாக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மேல்மருவத்தூரில் முதல் ஆன்மிக மாநாடு நடத்துவது பற்றிக் கூறிய அன்னை ஆதிபராசக்தி மாநாட்டுக்குப் பொறுப்பாளா்களை அப்போது நியமித்தாள். சக்தி.சி.ராமசாமி அங்கு சென்று நின்றார். “மகனே! உன்னை உணவுக் குழுவுக்குத் தலைவனாக நியமித்திருக்கிறேன்.” எனத் திருவாய் மலா்ந்தாள். பொறுப்புக் கொடுக்கப்படும் என்று அவா் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் மாநாடுகளில் பங்குகொண்டு நடத்திய அனுபவம் இருந்ததால் நல்ல முறையில் பணியாற்ற முடியும் என்று எண்ணினார். சென்னைக்குத் திரும்பி பெட்டி படுக்கைகளுடன் வந்தார். மேல்மருவத்தூரில் தங்கிக்கொண்டு மாநாட்டு உணவுப் பொறுப்புக்களை ஏற்றுச் செயற்படத் தொடங்கினார். இந்தப் பொறுப்பைச் சிறப்பாகச் செய்தார்.
உணவுப் பொறுப்பேற்று நான்கு நாட்களாயின. நாற்பது ஆண்டு காலம் அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி மாயமாக நீங்கிப் போயிற்று.
அவருக்கே அளவு கடந்த ஆச்சரியம் உண்டாயிற்று. அதன் பிறகு அன்னை ஆதிபராசக்தியின் மேல் நம்பிக்கையும் பக்தியும் உண்டாயிற்று.
தொடரும்…