தாயின் மடியில்

0
590
கடந்த 1984 ஜூன் திங்கள் முதன் முதலாக அருள்வாக்கு கேட்கச் சென்றேன். அம்மாவே முந்திக் கொண்டு “உன் குழந்தைகளை பற்றித்தானே கேட்கப் போகிறாய்?” என்று கேட்டது. “ஆம்” என்றேன்.
“உன் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்து நான் காப்பாற்றுகிறேன்.” என்றது. 1989ல் என் பிள்ளைகள் இருவருக்கும் மருத்துவக் கல்விப் படிப்பில் இடம் கிடைத்தது. அதன் பிறகு அருள்வாக்குக் கேட்டேன். “உன் குழந்தைகளை பற்றித்தான் முன்பே சொல்லியிருக்கிறேனே!” என்றது.
“அம்மா! நீ சொல்லியபடியே எல்லாம் நடந்து வருகிறது. என் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி?” என்று கேட்டேன். “உன் குழந்தைகளின் எதிர்காலம் என் பொறுப்பு! அதை என்னிடம் விட்டுவிடு. தொடர்ந்து தொண்டு செய்!” என்றது.
இன்று என் மகன்கள் இருவரும் டாக்டர்கள் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வந்த பிறகு எங்கள் ஊரின் உள்ளூராட்சித் தலைவர் பொறுப்புக்கு வந்தேன். சிறந்த உள்ளூராட்சித் தலைவர் என்ற விருது கிடைத்தது.
1994 ல் என் மூத்த மகன் என் சம்மதமில்லாமல் தன் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டான். மன வருத்தத்தோடு அருள்வாக்கு கேட்டேன். “அவன் விருப்பப்படி விட்டுவிடு. அது அவனது ஊழ்வினை! மனம் திருந்தி மீண்டும் உன்னிடம் வருவான். ஏற்றுக் கொள்!” என்றது. அதன்படி ஏற்றுக் கொண்டேன்.
என் சக்திக்கு மீறிய காரியங்கள் நிகழும் போது அது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருள்தானே! அம்மா அவர்ககளை வணங்கும்போது நாகம் படமெடுப்பது போல ஒரு தோற்றம்.
உறங்கும்போது என் காதுகளில் நாகம் சீறுவது போன்ற ஒலி! அம்மா அவர்ககளை நினைத்தபடி இருக்கும் போது அசரீரிக் குரல் கேட்பது என்று அனுபவங்கள் கிடைக்கின்றன.
ஒரு பக்கம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் சிறப்புகளைத் தருகிறார்கள். மறுபுறம் சோதனைகளையும் தருகிறார்கள்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் தன்னிடம் ஈடுபாடுள்ளவர்களையும், தனக்கு விருப்பமான பக்தர்களையும்
சோதனை செய்து பார்ப்பாள் என்று சொல்கிறார்கள். அது என் அளவிலும் உண்மை. சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவதும்
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் கருணையே!
என் இரண்டு குதிகால்களிலும், குதிகாலுக்கு மேற்புறம் வீக்கம் ஏற்பட்டு, நடக்கும்போது கடுமையான வலி! சென்னையில் பிரபல மருத்துவர்கள் இது எலும்பு வளர்ச்சி என்று சொல்லி வைத்தியம் பார்த்தும், பல ஆண்டுகள் வலி குறையவில்லை. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் அருள்வாக்கு கேட்டேன்.
நல்லெண்ணெய் கொதிக்க வைத்து அதில் வேப்பிலை போட்டு சூடு ஆறிய பிறகு தினம் இருமுறை காலில் போட்டு தேய்த்து வரும்படி சொல்லியது. ஒரே மாதத்தில் அந்த வலி போய்விட்டது.
23 . 01 . 1998 வெள்ளிக்கிழமை மாலை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் முன் விளக்கேற்றி வைத்து எனது மனச்சங்கடங்களை சொல்லி வேண்டிய போது, வேப்பிலை எனக்குக் கொடுத்து “எப்படியிருக்கிறது?” என்று கேட்பது போல ஒரு பிரமை! என்னையும் அறியாமல் “இனிக்குதும்மா!” என்று சொல்லிவிட்டு, சில நிமிடங்கள் ஒன்றும் புரியாமல் நின்றேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தது என்று விளங்கவில்லை. அதற்கும் ஏதோவொரு அர்த்தம் இருக்கிறது. .
அது அந்த உலக நாயகிக்குத்தான் விளங்கும். காலம் வரும்போது புரியும் எனக் காத்திருக்கிறேன். இனிவரும் காலங்களிலும் “உன் பணியை நான் செய்கின்ற வாய்ப்பினையும், அதற்குரிய மன அமைதியையும் கொடு!” என்றே வேண்டிக்கொண்டு வருகிறேன்.
ஓம்சக்தி!
சக்தி ஜெயராம், எம். ஏ.
பக்கம் 142 – 143.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து..