கோட்டூர் மலையாண்டிப் பட்டினம்! கோவை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள ஊர். அந்த ஊரில் ஆதிபராசக்தி மன்றம் அமைத்து பங்காரு அம்மா அவர்களின் தொண்டர்கள் ஆன்மீகத் தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்து வந்தனர்.

அவ்வூரில் இருந்த நாத்திக இளைஞர்கள் சிலர் அடிக்கடி செவ்வாடைத் தொண்டர்களையும், பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களையும் கேலியும் கிண்டலும் செய்து வருவது வழக்கம். அவர்களின் வாயெல்லாம் அடங்குமாறு அம்மா அற்புதம் ஒன்றை நடத்திக் காட்டினார்கள்.

அங்கே அரிசன மக்கள் காலனி ஒன்று உள்ளது. திருவாத்தா. என்ற பெண்மணி ஒருவர். அவருக்கு கண்ணில் ஏதோ கோளாறு. மதுரைக்குச் சென்று கண் சிகிச்சை பெற்றாள். சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் பாவம்! அந்த பெண்மணியின் கண்பார்வையே போய்விட்டது.

மூன்றாண்டு காலம் கண் பார்வை தெரியாது நடமாடி வந்தார் திருவாத்தா.

அந்த மன்றத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவடி படம் (கட்-அவுட்) வைத்து வெள்ளிக்கிழமை தோறும் பக்தர்கள் தங்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்வது வழக்கம்.

ஒருமுறை அப்படிப் பாலபிஷேகம் செய்கிற போது, அந்தக் கண் பார்வை தெரியாத பெண்மணியையும் கைப்பிடித்து அழைத்து வந்தார்கள்.

அவர் கையில் பால் கொடுத்து மன்றத்தார் பாலபிஷேகம் செய்ய வைத்தார்கள். அதற்கான பலனை அன்றிரவே பரம்பொருள் பங்காரு அம்மா கொடுத்தார்கள். எப்படி….?

அன்றிரவு அந்தக் கண் பார்வை தெரியாத பெண்மணியின் கனவில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் ஒரு சிறுமி வடிவத்துடன் தோன்றினார்கள்.

திருவாத்தா! திருவாத்தா! உன் கண்ணைத் திற! என்று சொல்லி, அவரது கண் இமைகளைப் பிரித்து, ஒரு வெள்ளைத் துணியால் நன்றாகத் துடைத்து விட்டபடி, உனக்கு இனிமேல் பார்வை வந்து விடும்! கவலைப்படாதே! என்று கூறிவிட்டு மறைந்து விட்டாளாம்.

மறுநாள் காலை கண் விழித்துப் பார்த்த போது..ஒரே ஒளி வெள்ளம்! கண்கள் கூசின,

கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார். சுவரில் இருந்த முருகன் படம் தான் முதலில் தெரிந்தது. பின் வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தெரிய ஆரம்பித்தன.

தாள முடியாத சந்தோசத்தோடு தெருவிற்கு ஓடி வந்து, “அடியே! எனக்குக் கண் தெரியுது! எனக்கு ஆத்தா வந்து கண் கொடுத்திட்டா! என்று அக்கம் பக்கத்துப் பெண்களிடம் துள்ளலுடன் ஓடி வந்து கனவில் நடந்த செய்திகளையெல்லாம் விவரித்தார் திருவாத்தா!

மூன்று வருடமாக நம் கண் எதிரே கண் பார்வை தெரியாத நடமாடிய ஒரு அரிசனப் பெண்மணி இப்போது பார்வையுடன் நடமாடுகிறாள். ஆத்தா கனவில் வந்தாள் என்கிறாள். என்ன இது! அதிசயமாக இருக்கிறதே.. என்று நாத்திகம் பேசிய இளைஞர்களே அதிசயப்பட்டார்கள்.

ஓர் ஏழை அரிசனப் பெண்மணியைப் பாதபூஜை செய்ய வைத்து பார்வையும் கொடுத்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள், சில நாத்திகர் கண்ணையும் திறந்தாள். அவனவன் விதிப்படியே அவனவன் மதியும் சென்றதால் சிலரை விட்டு விட்டாள்.

அறிவிற்கு எட்டாத போது, அனுபவம் கண்டாவது தெளிய வேண்டும். அனுபவம் பெற்றும் அறிவு தெளிவில்லையேல் என்ன செய்வது! அது தான் விதி!

“படிப்பறிவு முக்கியமில்லை பட்டறிவு தான் முக்கியம்!” என்பது அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு!

ஓம்சக்தி!

பக்கம் 22-23
சக்தி ஒளி- மே 2019.