நம் சிற்றறிவுக்கு எட்டாதது…

0
33

ஒரு நாள் கடலூர் பக்கத்திலுள்ள ஒரு பெண்மணி மேல்மருவத்தூர் வந்தார். கணவனை இழந்தவர் அவர். எப்போதும் வெள்ளைச்சேலை அணிந்தபடி இருப்பார். ஒவ்வொரு கோயிலாக போய்த் தரிசனம் செய்தபடி எஞ்சிய வாழ்நாளைக் கழித்து வந்தவர் அவர். இரக்க சுபாவம் கொண்டவர்; தருமசிந்தனை உடையவர். எங்கே போனாலும் கூடவே ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு போவார்.

அந்தச் சிறுவனோடு மேல்மருவத்தூர் வந்தார். அவனை விட்டுவிட்டு
பங்காரு அம்மாவிடம் அருள்வாக்கு
கேட்டுவிட்டு வெளியே வந்தார்.

அந்தச் சிறுவனுக்கும் பங்காருஅம்மாவிடம் அருள்வாக்கு
கேட்க ஆசை! “அம்மா! எனக்கும்
இரண்டு ரூபாய் கொடுங்கள்!
எனக்கும் அருள்வாக்கு கேட்க
ஆசையாக இருக்கிறது” என்றான்.

அவர் கொடுத்த இரண்டு ரூபாய் கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்துகொண்டு அவன் பங்காரு அம்மாவிடம் அருள்வாக்கு கேட்கப் போனான்.அவனிடம் அம்மா சொன்னாளாம்.

“நீ ஏண்டா மகனே இங்கு வந்தாய்? உனக்கு என்ன குறை வைத்திருக்கிறேன்? போடா! போய் ஒரு பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளடா!” என்று சொல்லி அனுப்பிவிட்டாளாம்.

வெளியே வந்து நம் தொண்டர்களிடம் இதைச் சொன்னான்.

அவனைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் இவை:

அவனுக்கு அப்பாவும் இல்லை! அம்மாவும் இல்லை! எந்த ஆதரவும் இல்லை. அந்த விதவைப் பெண்மணிக்கு எடுபிடியாக வேலை செய்கிறவன் அவன். சாப்பாடு, துணிமணி. செலவு எல்லாம் கொடுத்து அவனைப் பிள்ளை போலக் கவனித்துக் கொள்கிறார் அந்தப் பெண்மணி! ஆதரவற்ற அந்தப் பையன் எப்போதும் தன் ஊரில் உள்ள காளியைக் கும்பிட்டுக் கொண்டிருப்பவன். அந்தக் காளியையே தாயும், தகப்பனுமாக கும்பிட்டு வருகிறான்.

மற்ற சிறுவர்களாக இருந்தால் சமூக விரோதிகளின் பழக்கம் ஏற்பட்டு பிக்பாக்கெட், திருட்டு போன்ற காரியங்களில் ஈடுபட்டு இளங்குற்றவாளிகளாக மாறியிருப்பார்கள்.

என்ன பூர்வஜென்மத் தொடர்போ? பிஞ்சு வயதில் காளியிடம் அவனுக்குப் பக்தி!

உலகியல் கண்ணோட்டப்படி அவன் தாய் தந்தை ஆதரவு அற்றவன். என் பெயரைச் சொல்லி ஒரு பெட்டிக்கடை வைத்துப் பிழைத்துக்கொள் என்று ஆதிபராசக்தி என்ற பரம்பொருளே சொல்கிற அளவு வறிய நிலையில் இருப்பவன். அத்தகையவனைப் பார்த்து “உனக்கு என்னடா குறை?” என்று அன்னயே கேட்கிறாள் என்றால் என்ன பொருள்?

காசு பணம் நிறைந்த வாழ்க்கையையே நாம் நிறைந்த வாழ்க்கை என்று கருதிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் அன்னை ஆதிபராசக்தியின் கணக்கோ வேறுவிதமாக இருக்கிறது!

அந்த ஆன்மாவுக்கு ஏதோ ஒரு தெய்வீகப் பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்தே அவனை இந்த உலகத்தில் பிறக்க வைத்துள்ளாள் போலும்!

இதெல்லாம் நம் சிற்றறிவுக்கு எட்டாதவை!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட தலவரலாறு பாகம்-1.