கருத்தடை செய்து கொண்ட பிறகு

0
1118

சித்தர்பீடத்தின் விழாக்களின் போதெல்லாம் வழக்கமாக ஒலி, ஒளி அலங்கார ஏற்பாடுகளைச் செய்கிற அன்பர் ஒருவர் அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு
கொண்டவர்.

அந்த அன்பருக்கு ஐந்து குழந்தைகள். ஐந்தும் பெண் குழந்தைகள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் அந்த ஐந்து குழந்தைகளும் இயல்பாகப் பிறக்காமல் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டவை.

பொதுவாக மூன்று அறுவை சிகிச்சைகளுக்கு மேல் மறுபடியும் கருத்தரிக்க மருத்துவர்கள் விடுவதில்லை. கருத்தடை செய்துவிடுவதும் வழக்கம். அடுத்தாவது ஆண் குழந்தையாகப் பிறக்காதா? என்ற ஆசையின்பேரில் ஐந்து குழந்தைகளையும் விட்டுவிட்டார்கள் போலும். ஐந்தாவதும் பெண்ணாய்ப் பிறந்துவிட்டதால் கருத்தடை செய்து கொண்டார்கள்.

1980 ஆடிப்பூர விழா வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்பு அந்த அன்பர் அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்கு கேட்க வந்தார்.

அன்னை ஆதிபராசக்தி அவரைப் பார்த்து “மகனே ! குல வளர்ச்சிக்கு ஒர் ஆண் குழந்தையை நீ விரும்புகிறாய். அதனைத் தர முடிவு செய்துவிட்டேன். அதிலும் ஐந்து சிகிச்சைப் ஆட்பட்ட உன் மனைவியை மறுபடியும் அறுவை சிகிச்சைக்கு அனுப்பப் போவதில்லை. இயல்பான முறையில் உனக்கு ஆண்குழந்தை பிறக்கும்” என்று கூறினாள்.

தன் மனைவிக்கு கருத்தடை மருத்துவம் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்டு இருக்கிறது என்று அந்த அன்பர் வருத்தத்தோடு சொல்லியும் அன்னை ஆதிபராசக்தி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

அந்த அன்பர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கை நம்பினாரோ இல்லையோ…! அதெல்லாம் நமக்குத் தெரியாது !

இதில் வேடிக்கை என்னவென்றால், கருத்தரித்த பிறகு அந்த அன்பரின் மனைவியார் அச்சத்தினால் அதனைக் கலைக்க இரண்டு முறை பெருமுயற்சி செய்ததையும் மீறி அந்த கரு வளர்ந்தே வந்தது.

ஆம்…! அன்னை ஆதிபராசக்தியின் படைப்பை யார் அழிக்க முடியுமா? வியப்பிலும் வியப்பாக அந்த அன்பரின் மனைவி 1981ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் அழகிய ஆண் குழந்தை ஒன்றை இயல்பான முறையில் பெற்றேடுத்தார்.

எல்லாம் வல்ல சித்தர்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளால் என்ற ஐந்தொழில்களையும் அனாயாசமாக செய்ய வல்லவர்கள் என்பதை இந்த அன்னை ஆதிபராசக்தியின் சித்தர்பீடத் தொடர்பு கொண்டவர்கள் நன்கு அறிய முடியும்.

பக்கம்:325 -326.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.