ஜாதகத்தில் சிக்கல்

0
1397

கோவையில் ஹட்கோ காலணி என்ற இடத்தில் நம் மன்றம் ஒன்று சிறப்பாக இயங்கி வருகிறது. அதில் ஸ்ரீ ராம் என்ற அன்னையின் தொண்டா் ஒருவா் இருக்கிறார். அவரது சகலைக்கு (மனைவியின் தங்கையின் கணவா்) ஒரு பிரச்சினை. அவா். எம். எஸ். சி பட்டம் பெற்று மேல் நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணி புரிபவா். அவரது மகள் வயதுக்கு வந்த நேரம்
அந்த நேரத்தின் காலம் நல்லது தானா? என்று பார்க்க ஒரு ஜோதிடரிடம் அந்த ஆசிரியா் சென்றார். பெண் வயதுக்கு வந்த குறிப்பைப் பார்த்துவிட்டு அந்த ஜோதிடர் பெண்ணின் தந்தையின் ஜாதகமும் கேட்டார். அதையும் கொடுத்தார் ஆசிரியா். ஆசிரியரின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு ஜோதிடா் வெகு நேரம் ஜோசித்தார். எப்படிச் சொல்வதென்று தயங்கினார். கடைசியில் சொன்னார் “உங்கள் சாதகம் நன்றாய் இல்லை. 1987ல் பெப்ரவரி 16ம் திகதியன்று நீங்கள் நிச்சயமாக இறந்துவிடுவீா்கள். தப்பிக்க வாய்ப்பில்லை”

சாவு நிச்சயம்

அதை நம்பாமல் வேறு மிகத் தெரிந்த இரு ஜோதிடா்களிடம் காட்டினார். பெப்ரவரி 16ற்கு மேல் இந்த ஜாதகா் உயிர் வாழ ஜாதகத்தில் வாய்ப்பே இல்லை என்று சொல்லி விட்டனா். இன்னும் ஒன்றரை மாதத்தில் சாவு நிச்சயம் என்றாகி விட்டது.

சாவை விடத் துன்பமானது

ஆசிரியா் மனம் கலங்கினார். வேலைக்கு நிம்மதியாகப் போய் வர முடியவில்லை. உள்ளத்தில் அச்சம் குடிகொண்டது. இந்த நாளில் சாவு வரப்போகிறது என்று தெரிவது சாவைக் காட்டிலும் துன்பமானது அல்லவா? செய்வதறியாது கலங்கினார். மனைவியையும் குழந்தைகளையும் மாமனார் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன் சகலை சக்தி தொண்டா் ஸ்ரீராம் வீட்டில் தங்கினார்.

என் வீட்டுக்கு வா

ஒரு நாள் இரவு ஆசிரியரும் ஸ்ரீ ராமும், அவரது சிறு பெண்ணும் பக்கம் பக்கம் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நடு இரவில் ஸ்ரீராமின் சிறு பெண் எழுந்து அவரது முதுகிலே படார் படார் என்று அடித்து எழுப்பியது. திடுக்கிட்டு எழுந்து ஸ்ரீ ராம் படுக்கையில் உட்கார்ந்தார். அவா் குழந்தை தூங்கிய நிலையில் “என் வீட்டுக்கு வா, என் வீட்டுக்கு வா” என்று உரக்கச் சொல்லி விட்டுப்
படுத்துவிட்டது.

மேல்மருவத்தூா் அன்னை ஆதிபராசக்தியின் பெருங்கருணை

பொழுது விடிந்து சிறுமி எழுந்த பின் அவளைக் கூப்பிட்டு ஸ்ரீ ராம் “என்னம்மா ராத்திரி என்னை ஏன் எழுப்பினாய்?” என்று கேட்டார். “ நான் எழுப்பவில்லையே” என்றாள் மகள். “என் வீட்டுக்கு வா” என்று சொன்னாயே என்று கேட்டார். அப்படி நான் சொல்லவில்லையே என்றாள் அந்தச் சிறுமி. அந்தச் சிறுமி தந்தையை எழுப்பியதும் சொன்னதும் அந்தக் குழந்தைக்கு ஏதும் நினைவில்லை. ஸ்ரீ ராமுக்கு விசயம் புரிந்து விட்டது. சாவை எதிர்நோக்கும் தன் சகலைக்கு மருவத்தூராள் உதவும் பெருங் கருணை தான் இது என்று. சக்தி பக்தரான அவருக்கு விளங்க வெகு நேரம் ஆகவில்லை.

டெலிபோன் செய்தி மா்மம்

ஸ்ரீ ராம் சகலையான அந்த ஆசிரியரும் அந்த இரவே மருவத்தூருக்குப் புறப்படுவதென முடிவு செய்தார்கள். அந்த நாள் 15.02.1987 அன்று இரவு 8.30 மணிக்கு கோவையிலிருந்து சென்னை புறப்படும் சேரன் பேரூந்தில் கண்டக்டா் இடம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஸ்ரீ ராம் சிறிது நேரம் யோசித்தார். பேரூந்தின் ஓட்டுனரிடம் சென்ற சார் “மேல்மருவத்தூருக்கு ஒரு நாலு பேர் அவசரமா போகணும்” என்று சொல்லும் போதே ஓட்டுனா் “ஓ! நீங்க தானா அது. வண்டியில உட்காருங்க சார்” என்று சொல்லிவிட்டு பின்னே கண்டக்டா் பக்கம் திரும்பி “நஞ்சுண்டார் போன் பண்ணினார் மருவத்தூருக்கு நாலு திக்கற் வேணும் என்று அவங்க வந்திருக்காங்க ஏத்திக்கப்பா” என்றார். ஆனால் ஸ்ரீ ராமுக்கோ அந்த ஆசிரியருக்கோ நஞ்சுண்டான் என்று யாரையும் தெரியாது. யாரிடமும் சொல்லி போன் செய்யவுமில்லை. ஸ்ரீ ராம், ஆசிரியா், அவா்களது மனைவி முதலிய நால்வரும் கோவையிலிருந்து மறுநாள் காலை மருவத்தூா் ஆலயத்தின் முன் வந்து இறங்கினார்கள். அந்த நாள் தான் ஆசிரியா்
நிச்சயம் இறந்து விடுவார் என்று ஜோதிடா் குறித்த 16.02.1987 ஆகும்.

பங்காருஅடிகளார் கைப்பட்ட அதிஷ்டம்

நால்வரும் குளித்து கோயில் சுற்றி அன்னையை மனமுருக வேண்டினார்கள். அன்று காலை ஆன்மீக குரு அடிகளார் அவர்கள் கோயில் சுற்றிவிட்டு அதா்வனபத்திரகாளி கோவயிலுக்கு செல்ல வெளிவாசல் நோக்கி வருகிறார்கள் அப்போது அந்த ஆசிரியர் நான்குகால் மண்டபத்தின் மேல் ஒரு பக்கம் ஒதுங்கி அடிகளாரையே பார்த்துக்கொண்டிருக்கிறார். அடிகளார் அவா்கள் 4கால் மண்டபத்தில் நடந்து செல்லும் போது அவா்களது திருக்கரம் அந்த ஆசிரியரின் மணிக்கட்டில் உள்ள நாடியில் பட்டது. அடிகளார் அவா்களின் பார்வை ஆசிரியர் மீது பட்டது நாடியில் பட்ட அதிஸ்டத்தால் அந்த ஆசிரியா் ஆயுளை நீட்டிக் கொடுத்தார் அடிகளார். 16.02.1987 அன்று இறந்துவிடுவார் என்ற அமைப்பை அவதார புருசரான அடிகளார் மாற்றிக்கொடுத்து அவரை வாழவைத்தார்.

பங்காரு அடிகளார் அவதாரமே

ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் மனித உருவில் வாழ்வதும் நம்மை “சார்” போட்டு பேசுவதும் மனித நியதிச் செயல்கள். இதை வைத்துக் கொண்டு அவரை மனிதர் தான் என்று முடிவு செய்வதால் இம் முடிபு செய்தவர்களிற்கு தான் அது பேரிழப்பு. பார்வையிலே நோயைத் தீர்த்தும், இறந்த ஒருவரை உயிர்ப்பித்ததும் நாடியை அழுத்தியதால் உயிரை நீடித்துக் கொடுத்ததும், அவதாரச் செயல்கள். அடிகளார் கைப்பட்டு ஒரு மனிதனின் ஆயுள் நீண்டது. ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவதார புருஷா் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

பகுதி -3

செத்தவரை எழுப்பிய பங்காரு அடிகளார்

சக்தி பாலசுப்பிரமணியம் அம்மாவின் பக்தா். மத்திய அரசில் உயா் பதவி வகித்தவா். ஆலயத்தில் நடக்கும் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்வார். வேப்பேரி மன்றத்தின் உறுப்பினரும் ஆவார். ஆலயத்திற்கு வந்தாலும் அடிகளார் தரிசனம் பெறாமல் திரும்பமாட்டார். அவருக்கு வயது 54.

04.01.1998 அன்று வேப்பேரி மன்றத்துக்கு வந்து எப்படியாவது மேல் மருவத்தூா் போக வேண்டும் என்று மன்றத் தலைவரைக் கேட்டார். மன்றத் தலைவா் இவரது மைத்துனராவார். இவரைத் தனியாக அனுப்ப மன்றத் தலைவருக்கு மனமில்லை. ஆகையால் இவரது இரண்டு மகன்களையும் கூட அனுப்பி வைத்தார். அன்று மாலை 4.00 மணிக்குப் புறப்பட்டு இரவு சித்தா் பீடத்திற்கு வந்தார்கள். அம்மா வீட்டிற்குச் சென்று விட்டதால் அவரது வீட்டில் இரவு 8.30 மணிக்குத் தான் அம்மாவைத் தரிசிக்க முடிந்தது. ஆன்மீக விசயங்களெல்லாம் பேசிவிட்டு இரவு 9.15 ற்கு ஆன்மிககுருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்‌ விடை கொடுத்து அனுப்பினார். அப்போது அம்மா அவா்கள் இளைய பையனை அழைத்து மாமாவின் கால்களை மிதி என்றார்கள். அவ்வாறே அவரது இடது காலை மிதித்தான்.

அவருக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. “அடுத்த காலையும் மிதி” என்று அம்மா கூறியபடி வலது காலையும் மிதித்தான். அப்போது எதிர்பாராத விதமாக சக்தி பாலசுப்பிரமணியம் திடீரென்று மயங்கி விழுந்தார். மூத்த பையன் ஓடி வந்து அவரைக் கையால் அணைத்து தனது மடியின் மேல் படுக்க வைத்தார்.

அம்மா அவா்கள் “தண்ணீா் தெளியுங்கள். நான் தான் சொன்னேனல்லே” என்று கூறவும் இவரது தம்பி தண்ணீா் தெளித்தார். அதுவரை மயக்க நிலையில் இருந்தவா் திடீரென ஒரு விதமாகத் திமிறிக்கொண்டு ஓலமிட்டபடி சாய்ந்தார். தலை சாய்ந்துவிட்டது. வாய் கோணி நுரை தள்ளியது. கண்கள் செருகின, மலம், சிறுநீா் வெளியேறின. உயிர் பிரிந்துவிட்டது. இரு பையன்களும் அம்மாவைப் பார்த்துக் கதறினார்கள்.

அம்மா அவா்கள் கையிலே ஒரு செம்பிலே தண்ணீா் வைத்துக்கொண்டு
நிற்கிறார்கள். அடுத்து பையன்களைப் பார்த்து “என்ன? உங்கள் மாமா போய்விட்டார் என்று பார்த்தாயா? நான் விடமாட்டேன்” என்றார். அடுத்து அம்மா அவா்கள் உயிர் நீத்தவா் அருகில் வந்து தன் கையால் அவா் வாயில் தண்ணீா் ஊற்றி விட்டு நிமிர்ந்தார்கள். அடுத்த நொடியில் இறந்தவா் உயிர் பெற்று எழுந்து அம்மாவின் பாதங்களில் “அம்மா” என்று கதறிக்கொண்டு விழுந்தார்.

திருமதி லட்சுமி பங்காரு அடிகளார் பதறியது

இங்கே எழுந்த அலறலும், சத்தமும் கேட்டு வீட்டின் உள்ளே இருந்த திருமதி லட்சுமி பங்காருஅடிகளார் அவர்கள் வேகமாக வந்து பார்த்து “என்ன நடந்தது?” என்று விசாரித்தார்கள். அங்கு நிலவிய சூழ்நிலையை உணா்ந்து டாக்டரை அழைத்து பரிசோதனை செய்யச் சொன்னார். அவா் சக்தி பாலசுப்பிரமணியம் உடலில் ரத்த அழுத்தமும், நாடித் துடிப்பும் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னார்.

அப்போது (அம்மா )ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அவா்கள் சொன்னார்கள் “இன்றோடு உனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு! இன்றிலிருந்து உனக்குப் புது வாழ்கை தான்! நீ இதுவரை செய்து வந்த தொண்டெல்லாம் அம்மா மறக்கல! உனக்கு இது மறுபிறவி” என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவா் செய்த தொண்டின் சிறப்பினை உணா்த்த இறந்த சக்தி பாலசுப்பிரமணியனின் உயிரை மீட்டுத் தந்துள்ளார். தொண்டின் பெருமையை நாம் எல்லாம் புரிந்து கொண்டு அம்மா சொல்லிய தொண்டுகளைச் செய்து அம்மாவின் அருளைப் பெறுவோமாக!

தொடரும்.