ஆன்மாக்களின் பிறப்பு, இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற ஒன்று ஆணவம் ! அந்த அழுக்குத் தான் ஆன்மாவைப் பற்றியுள்ள பெரிய அழுக்கு ! ஆணவம் என்பது ஏதோ திமிர் பிடித்த போக்கு, கர்வம் கொண்ட மனப்பான்மை என்று கருதிக்கொள்ளவேண்டாம். எல்லோரிடமும் இந்த ஆணவம் மூட்டை மூட்டையாகத் திரண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆணவம் நாம் செய்கின்ற காரியங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஆணவம் ஏழு விதங்களில் காரியங்களாக வெளிப்படுகின்றன என்கிறார்கள் ஞானிகள். அவையாவன மோகம், மதம், அராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம் என்பன.

மோகம்:

கொள்ளற்பாலது இது ; தன்னற்பாலது இது என்று பெரியவர்கள் அறிவுறைகளை நூல்களில் படித்திருந்தும் கண்ட கண்ட பெண்களை நாடி அலைவது; உடுப்பதற்கும் உண்பதற்கும் போதுமான வசதியிருந்தும் பணமோ பணமோ என்று அலைவது. இது அகங்கார உணர்ச்சியின் வெளிப்பாடுகளில் ஒன்று !

மதம்:

தனக்குக் கிடைத்த படிப்புப் போல எவனுககும் இல்லை ; தான் பெற்ற பதவிபோல எவனுக்கும் இல்லை ; தன் மனைவிபோன்ற அழகி வேறெங்கும் இல்லை ; எனக்குள்ள செல்வம் போல எவனுக்கும் இல்லை என்று கருதுகிற மனப்போக்கு ‘மதம்’ எனப்படும்.

அராகம்:

தான் மணத்து கொண்ட பெண்மேல் மிகுந்த ஆசையும் பாசமும் காட்டுவது.

கவலை:

முன்வினைப் பயனால் ஒரு துன்பம் வந்தவிடத்து, இதற்கு நாம்தான் காரணம்; ஆண்டவனை நொந்து கொள்வதில் பயனில்லை என்று நினைத்து அன்னையைப் பற்றிக்கொண்டு துயரத்தை வெல்வதற்கு முயலாமல் எப்போதும் அழுத கண்ணீரும், சிந்திய மூக்குமாகத் தனித்திருந்து புலம்புவது.

தாபம்:

ஆசைப்பட்ட ஒன்று கிடைக்காதபோது, அய்யோ கிடைக்கவில்லையே என்று மணத்துக்குள்ளே புழுங்கித்தவிப்பது.

வாட்டம்:

உடன்பாலும், மனத்தாலும் வருத்துகின்ற துன்பம் வாட்டம்.

விசித்திரம்:

ஏதோ முன்வினைப் பயனால் கிடைத்த பட்டம், பதவி, புகழ், செல்வம், மனைவி, சொத்து, சுகம் இவற்றை வைத்துக் கொண்டு இவையெல்லாம் ஒரு காலத்தில் நம்மை விட்டு நீங்கிப் போகும் என்ற கருத்தில்லாமல் அந்த வசதி வாய்ப்புகளில் மயங்கிச் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பது.

இவையெல்லாம் ‘ஆணவம்’ என்ற ஆன்ம அழுக்கால் வெளிப்படும் காரியங்கள் !

இவற்றையெல்லாம் வெல்பவனே ஞானி ! அவனே துறவி !எல்லாவற்றையும் கடந்த ஞானி இந்த ஆணவத்தையும் வென்றவன்.

ஏதோ அடக்கமாக இருப்பதால், ”எனக்கு ஆணவம் இல்லை; அகங்காரம் இல்லை” என்று யாரும் கருதிக் கொள்ளவேண்டாம். மேற்கூறப்பட்ட ஆணவத்தில் காரியங்கள் ஏழும் நம்மிடம் ஆணவம் இல்லை; அகங்காரம் இல்லை என்று பொருள் !

நம்முடைய ஊழ்வினையின் பெருக்கததுக்கு இந்ந ஆணவம் முதன்மையான காரணம்.

மனம் என்ற ஒன்று இருக்கும் வரை ஆணவம் இருக்கும்; இந்த மனத்தை எப்படி இல்லாமல் செய்து கொள்வது ? மனத்தை அடக்குவதற்குப் பழக்கம் வேண்டும்; அதற்கு என்ன வழி ?தெய்வத்தின் துணையில்லாமல் மனத்தைப் பழக்கப்படுத்த முடியாது; அடக்க முடியாது ; திருவருளின் துணை கொண்டுதான் மனத்தைப்பக்குவப் படுத்திக் கொண்டு வரவேண்டும்;
இது ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் என்ற கணக்கில் முடியக்கூடியதல்ல ! எனவே இதற்காக முயலாதவரை நாம் செத்துச் செத்துப் பிறந்து கொண்டிருக்க வேண்டியதுதான் !அல்லப்படவேண்டியது தான்…!

”துன்பத்தின் மூலம்தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் ; அதை அனுபவித்தே பெற வேண்டும் ; என்னை நெருங்க வேண்டும் என்று துடிப்பவர்கள் இவ்வுலகத் துன்பங்களையும், ஊழ்வினைகளையும் இப்போதே என் முன்னாலேயே அனுபவித்துக் கழித்துவிட வேண்டும்.”