‘போரில் வெற்றி கிடைப்பது எத்துணைச் சிறப்போ அத்துணைச் சிறப்புடையது அமைதியில் கிடைக்கும் வெற்றி” என்று ஜான்மில்டன் கூறிப்போனார். ஊனக்கண் பார்வை இழந்தவராய் இருந்தும் மில்டனுக்கு இப்பேரொளி நன்றாக தெரிந்தது. ஆனால் கண்ணுடன் வாழும் அரசியல் வாதிகளும், போர்ப் பிரியர்களும் இப்பேரொளியைக் காண மறுக்கின்றனர். இன்றைய உலகம் மிகவும் சீர்கெட்டு இருத்தலின் இந்த உண்மையை மிகவும் வலியுறுத்துவதற்கு இதுவே மிகவும் ஏற்ற சந்தர்ப்பமாகும்.

உலகந் தோன்றிய நாளிலிருந்து அனைத்தும் துயரம் என்று கூறும் கூட்டத்தார் (Pessimists) இதனையே கூறியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் கூற்று உண்மையாகிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுதப் பெருக்கம், சுற்றுச் சூழ்நிலைக் களங்கம், சமுதாய அமைதி இன்மை, பொருளாதார வேறுபாடுகள், அரசியல் கொந்தளிப்புகள், உலகை முழுதும் வளைத்து விழுங்கக் கூடிய உலகப்போர் பற்றிய அச்சம் என்பவை தவிர இவ்வுலகம் சீர்கெட்டுள்ளது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

இவை எல்லாவற்றுள்ளும் தன்னைத்தானே முழுதும் அழித்துக் கொள்ளும் போர் என்பது, அமைதியை எப்பொழுதும் விரும்பும் நாடுகள் கூடச் சூழ்நிலையை உத்தேசித்துத் தம் வருமானத்தில் கணிசமான ஒரு பகுதியைப் போர்த் தளவாடங்கட்காக ஒதுக்கி வைக்கும் நிலைமையை உண்டாக்கி உள்ளது.

மனிதனை எதிர்நோக்கும் இன்றையப் பிரச்சினைகளுள் மிகமுக்கிய இடத்தைப் பெற்றிருப்பது போர் பற்றியதேயாகும். சமீபத்தில் தாம் வெளியிட்டுள்ள ஒரு குழு அறிக்கையில் வில்லி பிராண்ட் (Willy Brandt) என்ற அறிஞர் ‘‘ஒன்று அமைதியை நாடு அல்லது துண்டு துண்டாக உடைந்துபோ” என்று கூறியுள்ளார்.

மகிழ்ச்சி எப்படிப் பிரிக்க முடியாததோ அதேபோல அமைதி என்பதும் துண்டு போட முடியாத ஒன்றாகும். உடம்பின் ஒரு பகுதி நோயுற்றிருந்தால் அதன் மற்றோர் பகுதி சுகமாக இருக்க முடியாது. எனவே, உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும்; அப்பொழுது வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளும் அமைதியான வாழ்க்கையில் ஈடுபடும்.

கற்றறிந்த கிறித்துவப் பாதிரியார்களுள் ஆங்கிலேயப் பேராயர் (பிஷப்) ஒருவர் தம்முடைய காலத்தில் ஆங்கிலேயர்கள் கோவிலுக்கு வருவதைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டார்கள் என்று சொல்ல வரும்போது – எள்ளல் குறிப்புடன் பின்கண்டவாறு பேசினார்:

‘‘சராசரி ஆங்கிலேயன் ஒருவன் தன் வாழ்நாளில் மூன்று முறைதான் கோயிலுக்கு வருகிறாள், அதாவது பிறந்த பொழுது, திருமண நேரம், பெரும்பயணம் புறப்பட்டபோது” (Once when he is hatched, once when he is matched, and last when he is despetched)

இது ஒரு வருந்தத் தகுந்த நிலை. மனிதனுக்கு எது நலம் செய்யும், எது நலன் செய்யாது என்பதை ஒருவன் அறிய வேண்டுமேயானால் – சமயம் ஒன்றுதான் அவனுக்குக் கைகொடுக்கும் என்று நான் நம்புகிறேன். இது என்னுடைய தனிப்பட்ட அகநிலை நம்பிக்கையாக இருக்கலாம். என்றாலும், இந்த நம்பிக்கையில் பூரண ஈடுபாட்டையும், திரிகரண சக்தியான நம்பிக்கையையும் வைத்துள்ளேன். இனி மனிதனுடைய வாழ்வு அமைதியாகச் செல்லவும், பயனுடையதாக இருக்கவும் இஸ்லாம் என்ன வழி கூறுகிறது என்பதை ஆராய வேண்டும்.

‘‘இஸ்லாம்” என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; அவை இரண்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான். முதலாவது பொருள் ‘‘முழுவதுமாக இறைவன்ககு அடங்கி நடப்பது” என்பதாகும். இரண்டாவது பொருள், ‘‘அமைதியான வாழ்க்கை வாழ்வது” என்பதாகும்.

என்று ஒருவன் முழுமுதற் பொருளிடம் தன்னை அடைக்கலமாகக் கொடுத்து விடுகிறானோ, அன்றே அச்சம் என்பதிலிருந்து அவன் விடுபடுகிறான். மேலும், தன்னுடைய வாழ்க்கையில் பரம்பொருளைத் தவிர எந்தச் சத்தியையும் நம்புவதில்லை. பல்வேறு வடிவத்தில் மனிதனை ஆட்டிப்படைக்கும் அச்சம் என்பது இல்லாத போது தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு இருப்பது போலவும் ஒருவன் உணர முடிகிறது. இந்த நிலை வந்தவுடன் அந்த மனிதன் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களிடத்தில் வெறுப்பு. விருப்பு இல்லாமல் அமைதியோடு வாழ முடிகின்றது. பொதுவாக மனித சமுதாயத்தின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது அதன் போக்கில் பல்வேறு மாறுதல்களைச் செய்து, ஆன்மிகத்துறையிலும் நல்லொழுக்கத் துறையிலும் ஓர் உயர்ந்த நிலையை அடையச் சமய போதனைகள் பெரிதும், உதவியுள்ளன. சமயக் கொள்கைள் மனிதனிடம் உள்ள விலங்கியல்பை வெல்லவும் உயர்ந்த குறிக்கோளை எய்தவும், மானிட சாதிக்குத் தொண்டு புரியவும் உதவியுள்ளன. இதன் எதிராக உலகாயதக் கொள்கை ஓர் அளவை மீறிச் செல்லும்போது, பிறர் உழைப்பைக் கவர்தல், தன்நலம் பேணுதல் என்பவற்றில் கொண்டு செலுத்தும்.

சிறந்த எழுத்தாளராகிய மௌலானா முகமது அலி பின்வருமாறு எழுதுகிறார். ‘‘இந்த விநாடி சமயக் கட்டுமானங்கள் மனித சமுதாயத்தை விட்டு நீக்கப்பட்டால், அறியாமை நிரம்பிய மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குத் தன்மையை அடைந்துவிடும்; சராசரி மனித நிலைக்கு மேம்பட்டவர்கள் என்று தம்மைக் கருதி கொள்கிறவர்கள்கூட மிகவுயர்ந்த குறிக்கோள்களை அடையத் தூண்டும் தூண்டுதலைக் கடவுள் நம்பிக்கையின் மூலமே பெற்றுள்ளனர். முற்றிலும் அழிந்து போகின்ற பதாதையில் சமுதாயம் செல்ல முற்படும் போதெல்லாம் சமயம்தான் அதனைக் காப்பாற்றி நன்னெறி செலுத்த உதவியுள்ளது.

மனித சமுதாயம் முழுவதையும் ஒரே இனமாகத்தான் இஸ்லாம் கருதுகிறது. மனிதர்கள் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று புனித குரான் பேசுகிறது; என்றாலும் இஸ்லாமிய சமயத்தைச் சேந்தவர்கட்குச் சில குறிப்பிட்ட நியமங்களை அது வகுக்கின்றது. இதன் காரணம் ‘‘அவர்கள் அமைதி நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும்” என்பதே தான்.

முதலாவது வீட்டினுள் அமைதி இருந்தால் ஒழிய மனிதன் தன் கடமைகளைச் செய்யவும். பயன் உள்ள வாழ்க்கை நடத்தவும் முடியாது போய்விடும்.

இரண்டாவது அண்டை அயலாருடன் அமைதியாக வாழ்வது. இதை இஸ்லாம் மிகவும் வலியுறுத்திப் பேசுகிறது. நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் இத்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இன்றுவரை நம்மை இவ்வழியைக் கடைப்பிடிப்பதற்குத் தூண்டு கோலாக இருப்பதுடன், ஒரு கிளர்ச்சியையும் தருகின்றது.

அடுத்து ஒரு மனிதனுடைய கொள்கைகளுக்கு நேர் எதிரான கொள்கை உடையவரோடு எவ்வாறு உறவு கொள்வது? அரசாங்கத்துடன் எவ்வித உறவு கொள்வது? என்பவை பற்றி எல்லாம் மிக விளக்கமாகவும், விரிவாகவும் பேசப்பட்டுள்ளது.

மனிதனிடத்தில் இயல்பாக உள்ளே அமைந்துள்ள நற்பண்புகளை வெளிக்கொணர இஸ்லாம் மூன்று கொள்கைகளைக் குறிக்கிறது. ஏனெனில், மதனிதன் குற்றமற்றவனாகவும், பாப மற்றவனாகவுமே பிறக்கிறான் என்று நம்புகிறது. இந்த மூன்று கொள்கைகளானவை:

1. மனிதன் கடவுளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள். 2. அவனோடு படைக்கப்பட்ட பிற உயிர்கட்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகள். 3. மனிதன் தனக்குத் தானே ஆற்ற வேண்டிய கடமைகள் என்பனவாகும்.

மனித சமுதாயம் நலனடைய என்ன என்ன ஆக்கபூர்வமான கொள்கைகளை இஸ்லாம் வகுக்கிறது. என்பதை அறிந்துகொள்ள மேலே கூறிய மூன்று கொள்கைகளை ஆழமாக ஆராய்வது பயனுடையதாகும்.
நன்றி

ஓம் சக்தி!

பக்கம்: (14-16).

சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 6 (1982)