சித்தர்க்ட்கெல்லாம் தலைவியான அன்னை ஆதிபராசக்தி மேல்மருவத்தூர் திருத்தலத்தில் பங்காருஅடிகளார் என்ற மானுட வடிவம் தாங்கி அவதரித்து, மனிதகுலம் மனந்திருந்தி ஆன்ம முன்னேற்றம் பெறுவதற்குப் பல வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாள். கிடைக்கின்ற வாய்ப்பையும், கொடுக்கின்ற வாய்ப்பையும் நழுவ விடாதே என்றும் அருள்வாக்கில் சொல்லியிருக்கிறாள். அத்தகைய வாய்ப்புகளில் தலையாயது “இருமுடி விரதம்” இதில் எவ்வளவோ பலன்களை வைத்து நமக்கு அருளியிருக்கிறாள்.

ஆண்டுதோறும் வரும் தைப்பூச விழாவிற்கு அன்னை ஆதிபராசக்தி குறிப்பிடும் காலகட்டத்தில் நாம் சக்தி மாலை அணிந்து இருமுடி செலுத்தலாம். இந்த இருமுடி பற்றி அன்னை அருள்வாக்கில்
கூறியவைகளாவன.

“இருமுடி என்பதற்கு இருள்முடி என்று பொருள். இதயத்தில் உள்ள இருளைப் போக்க அணியும் முடி என்று பொருள். கணவன் – மனைவி இருவரின் அகத்தோற்றத்தையும் முடி போடுவது என்று பொருள். மற்றும் மனிதனின் அகமும், புறமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதையும் இருமுடி குறிக்கும்” .

அன்னை ஆதிபராசக்தியை மனமுருக நினைத்து, தன் குறைகளுக்காக வேண்டி சக்தி மாலை அணிந்து முறைப்படி விரதமிருந்து மேல்மருவத்தூர் ஆலயம் வலம் வந்து அன்னையை சரணடைந்தால் நினைத்த பலன் அத்தனையும் நிறைவேறும்.

9 முறை சக்தி மாலை அணிந்தவா்களை எந்தவித தீய சக்தியும் அண்டாது.

அநாதைக் குழந்தையளையும் அணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் 10 பேருக்கு மாலை போட்டு அழைத்து வரும்படிச் சொல்கிறேன். அவர்களுடன் இருந்து செய்தால் பெருமை! பெருமை பணத்தால் இல்லை. அன்பாலும், தொண்டாலும் வருகின்ற பெருமையே பெருமை! அவற்றிற்குத்தான் பலனுண்டு.

இலவச மாலைபோட்டு அழைத்து வருவதால் மாலை செலுத்தியவருக்கும் மாலை போட்டுக் கொள்ள உபயம் அளித்தவருக்கும் அருள் தருவேன்.

மாலை அணிந்து விரதம் இருந்து ஆலயம் வந்து திரும்புவதற்கு மகளிருக்கு மாதவிலக்கு தடையல்ல. ஏற்றுக்கொள்பவள் நான். மற்றவர்கள் தடையிட்டாலும் எனக்குத் தடையல்ல!

இருமுடி செலுத்தவதால் ஏற்படும் நன்மைகள்

கோரிக்கை வைத்து சங்கல்பம் செய்து சக்தி மாலை அணிந்து உண்மை உணர்வுடன் இருமுடி செலுத்தினால் ஏற்படும் நன்மைகளாவன!

உடல் நலமின்றி கஷ்டப்படுபவர்கள் உடல் நலம் பெறுவர்.

ஊழ்வினை அறுந்து மன அமைதியும், உறுதியம் பெறுவர்.

தடைப்பட்ட திருமணங்கள் தடை நீங்கி திருமணம் கூடும்.

குழந்தைப்பேறு இல்லாதவர்கட்கு மகப்பேறு கிடைக்கும்.

கல்வி, அறிவு, மேன்மைகள் பெருகும்.

வேலையின்றி அவதிப்படுபவா்க்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

வேலையில் இருப்பவர்க்கு பதவி உயர்வோ, நல்ல வேலையோ கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வாணிபம் பெருகி நியாயமான இலாபம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு வளம் பெருகும்.

குடும்பத் தொல்லைகள் தீர்ந்து மன அமைதியும், செல்வச் செழிப்பையும் பெறுவர்.

நம்மைத் தீயவர்களிடமிருந்து காப்பாற்றி நல்லொழுக்கத்தோடு வாழ வழி கிடைக்கும்.

பக்தியிலே இணைத்து ஆன்மிகத்திலே ஈடுபாடு உண்டாகும்.

மற்றும் பக்தர்கள் மனமுருக மருவத்தூராளை நினைத்துக் கோருகின்ற எந்த நியாயமான கோரிக்கையும் நிறைவேறும்.

நன்றி

பக்:479-480.

அன்னை ஆதிபராசக்தி அருளிய வேள்வி முறைகள்.