“ஓம் ஓம்சக்தியே ஆன்மீககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா”

வேள்வி பூஜை என்பதற்கு அப்படி என்ன மதிப்பு? அதற்கு என்ன மகிமை?

வேள்வி பூஜை என்பது அக்கினி வளர்த்து விலை உயர்ந்த திரவியங்களையும் மூலிகைகளையும் தெய்வங்கட்கு ஆவூதியாக வழங்குவது.

தெய்வங்கட்குரிய சக்கரங்களையும், மந்திரங்களையும் கொண்டு பூஜை செய்வது! எனவே சர்வ ஜாக்கிரதையாகச் செய்யப்படுவது. வேள்வி பூஜை என்பது கத்தி முனைமேல் நடப்பது போன்றது. எச்சரிக்கை உணர்வுடன் செய்ய வேண்டிய ஒன்று.

அதற்காகவே நம் சித்தர் பீடத்தில் பயிற்சி பெற்ற தொண்டர்களை வைத்து யாக குண்டங்களும், சக்கரங்களும் நிறுவப்படுகின்றன.

இந்து மதத்தில் 3 விதமான வழிபாட்டு முறைகள் அமைந்துள்ளன.

1. “வேள்விப் பூஜை! இது வேத நெறியினர்க்கு உரியது.

2. விக்கிரகம் வைத்துப் பூஜை செய்வது. இது ஆகம நெறியினர்க்கு உரியது

3. சக்கரங்கள் மண்டலங்கள் வரைந்து அவற்றை வைத்துப் பூஜை செய்வது. இதற்கு தாந்திரிக பூஜை என்று பெயர். இது சித்தர்கள் யோகிகட்கு உரியது.

இந்தப் பூஜை முறைகள் ஆதியில் இறைவனால் அருளப்பட்டுத் தக்கவர்களால் செய்யப்படுவன.

அன்னை ஆதிபராசக்தி தனது அவதார காலத்தில் மனித குலத்திற்கு வழங்கிய அருட் கொடைகளில் (வரப்பிரசாதம்) வேள்விப் பூஜை முறையும் ஒன்று.

அன்னை ஆதிபராசக்திக்கு ஆயிரம் திரு நாமங்கள் உண்டு. அவற்றுள் யக்ஞப் பிரியா என்பதும் ஒன்று. வேள்விப் பூஜையை மகிழ்ந்து ஏற்பவள் என்பது அதன் பொருள். வேள்வியால் ஆராதிக்கத் தக்கவள் என்று லலிதா சகஸ்ர நாமம் கூறும். வேள்வியின் வழிபட உ‌ரியாய் போற்றி என்று நமது ஆயிரத்தெட்டு மந்திரம் கூறும்.

உரிய தெய்வ மந்திரம் சொல்லி, சங்கல்பம் வைத்துப் பயபக்தியுடன் யாகம் செய்தால் அந்த யாக குண்டத்தில் அந்தத் தெய்வம் பிரத்யட்சமாகத் தோன்றி காட்சி கொடுக்கும். பக்குவமானவர் கண்கட்கு அது தெரியும் என்பார் காஞ்சிப் பெரிய பெரியவர். மற்றவர் கண்கட்குத் தெரியவில்லை என்றாலும் தெய்வம் அங்குள்ள அனைவரையும் பார்க்கிறது அல்லவா? அது பாக்கியம் தானே?

அதனால் தான் எங்கே வேள்விப் பூஜை நடந்தாலும் அதில் கலந்து கொள்! அது மிகப் பெரிய புண்ணியம் என்பார்கள்.

அன்னையின் வேள்வி எங்கே நடத்தினாலும் அங்கே அன்னை ஏதாவது அற்புதம் ஒன்றைச் செய்வாள், சித்தாடல் நடக்கும், யாருக்காவது தெய்வீகக் காட்சி கிடைக்கும்.

இந்த ஆண்டு(2019) நம் சித்தர் பீடத்தில் நடந்த சித்திரைப் பௌர்ணமி விழா நடப்பதற்கு முதல் நாளே ஓர் அற்புதம் செய்து அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுத்தாள். ஆம்!

கருவறை மண்டபத்துக்கு வெளியே உள்ள திரிசூல யாக குண்டத்தில் குழந்தையின் காலடி ஒன்று பதிவாகி இருந்தது. அத்துடன் நாகம் ஒன்றும் ஊர்ந்து செல்வது போலப் பதிவாகி இருந்தது.

இதனை அம்மாவே பார்த்தார்கள்! அம்மாவின் திருக்குடும்பத்தார் ஒவ்வொருவரும் வந்து பார்த்தார்கள். தொண்டர்கள் அனைவரும் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

இந்த யாக குண்டத்தினை ஒரு நல்ல ஆத்மாவுக்கு ஒதுக்கிப் பூஜை செய்யும்படிச் 
சொல்லப் போகிறேன் என்றார்கள்.

அம்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நல்ல ஆத்மா யார் தெரியுமா……?
சக்தி அருள்மொழி I. A. S., அவர் ஒரு நேர்மையான அதிகாரி! கறைபடாத கரங்கள் கொண்டவர். நேர்மைக்கும் நாணயத்துக்கும் ஆதிபராசக்தியிடம் அங்கீகாரம் உண்டு எ‌ன்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த யாக சாலையை முதல் நாள் மாலையே ஒரு சுற்று சுற்றிப் பார்த்தபடி வந்தோம்.

நம் சித்தர் பீடத்தைச் சுற்றிலும் சூல யாக குண்டங்கள்! இரட்டை நாக குண்டங்கள்! ஒற்றை நாக குண்டங்கள்! சதுர யாக குண்டங்கள்!

அனைத்துக்கும் மேலாக ஓம்சக்தி மேடை எதிரே அமைக்கப்பட்ட அண்ட வெளிச் சக்கரம்! மிகக் கம்பீரமாகக் காட்சி கொடுத்தது.

என்ன… ? பிரதான யாக குண்டம் எப்படி அமைக்கப் போறே….? என்று சக்தி ராஜேந்திரனைப் பார்த்து அம்மா கேட்கிறாள்.

எனக்கென்னம்மா தெரியும்? அம்மா தான் சொல்லணும்! என்று நெளிவார் ராஜேந்திரன்.

இப்படி ஒரு வட்டம் போடு! அதிலே அப்படி ஒரு வெட்டு வெட்டி! இப்படி ஒரு டைமண் கொண்டா…. என சொல்லிக் கொண்டே போவார்கள்….. இந்த ராஜேந்திரன் எப்படித் தான் புரிந்து கொள்வாரோ….. அப்படி அப்படியே பென்சிலால் யாக குண்ட அமைப்புகளை வரைந்து கொண்டு மறுநாள் அம்மா எதிரில் நிற்பார்.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தில் வேள்விப் பணி செய்யும் தொண்டர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்! முற்பிறவித் தொடர்பு காரணமாகவே இவர்கட்கு வேள்வித் தொண்டு கிடைத்தது.

ஒரு நீண்ட பெரிய ஹாலில் கலச விளக்குகளை ஒரு சக்கரத்தில் நேர்த்தியாக அமர்த்தியிருந்த அழகு அதன் நேர்த்தி…. விளக்கொளியில் மஞ்சள் நிறத்துடன் ஜொலித்த அற்புதக் காட்சி!

அடடா…..! அடுத்து மிகப் பெரிய ஒரு ஆன்மீக மாநாட்டுக்கு அம்மா தொண்டர்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறாளோ…..?

பல ஆண்டுகட்கு முன்னாலே அம்மா சொன்னாள்.

எனது வேள்விக்குழுத் தொண்டன் பெய்யும் என்றால் மழை பெய்யும்! நில் என்றால் மழை நிற்கும் என்றாள்.

அழகர் மலையிலே இதனை அனுபவத்திலேயே உணர்ந்தேன்.

அழகர் மலையிலே ஒரு மன்ற விழா! அடியேன் சொற்பொழிவாற்றப் போயிருந்தேன். வேள்விப் பணிக்கு இளங்கோவன் என்பவர் வந்திருந்தார். அவர் பழைய தொண்டர்.

வேள்விக்கான எல்லாம் செய்து முடித்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது. 500 மந்திரங்கள் ஓதப்பட்டன!

இந்த நேரத்தில் வானம் கறுத்தது. கார்மேகங்கள் திரண்டன. மழை வரப் பார்த்தது.

அண்ணே! மழை வந்தால் யாக குண்டங்கள் கரைந்து போகுமே என்ன செய்வேன்? சண்டாளி! இப்படி என்னைச் சோதிக்கிறாளே… என்று புலம்பினார்.

இந்த மாதிரி நெருக்கடி வந்தால் என்ன செய்யணும்னு அம்மா சொல்லியிருக்கும்லே…..? அதைச் செய்யும்யா? என்றேன்.

உடனே சுறு சுறுப்பானார், ஒரு பூசணிக்காயை எடுத்தார். குங்குமம் அள்ளிக் கொட்டி நிரப்பினார்.

வானத்தைப் பார்த்தார். மூல மந்திரம் சொன்னார். அம்மா தாயே! பூஜை முடியும் வரை மழையை நிறுத்து! என வேண்டிக் கொண்டு பூசணிக்காயை போட்டு உடைத்தார். என்ன ஆச்சரியம்! தூறல் நிண்ணு போச்சு!

என் வேள்விக்குழுத் தொண்டன் நில் என்றால் மழை நிற்கும் என்றாளே! அது கண் கூடாக நடந்தது. சுமார் 20 ஆண்டுகட்கு முன் நடந்தது.

அப்போது நம்மவர்களிடம் சுறு சுறுப்பு இருந்தது. போட்டி பொறாமை இல்லை.

மாவட்டங்களில் நகரங்களில் மிகப் பெரிய அளவில் நகர நல வேள்விகள் நடத்தினோம்.

இன்று ஆண்டுக்கு ஒரே நாள் வந்தீர்கள். மற்ற நேரங்களில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை நகர நல வேள்விகள் செய்திருப்பீர்கள்….?

எத்தனை குடும்ப நல வேள்விகள் செய்திருப்பீர்கள்?

ஒவ்வொரு குடும்பத்திலும் செய்தே தீர வேண்டிய சமயச் சடங்குகள் உண்டு. அதைச் செய்யத் தெரியாமல் குடும்பங்கள் அல்லல் படுகின்றன.

உதாரணமாக அமாவாசையன்று முன்னோர்கட்குப் பிண்டம் வைத்துப் படைக்க வேண்டும். இல்லையேல் பிதிர் சாபம்! பிதிர் தோஷம் ஏற்படும். அதனால் என்ன விளையும்? குடும்பத்தில் அடிக்கடி சண்டை வரும். கணவன் மனைவிக்குள் பிரிவு ஏற்படும். ஊனமுள்ள குழந்தைகள் பிறக்கும்.

அமாவாசை பிதிர் வழிபாடு போலச் சில சடங்குகள் செய்தாக வேண்டும். படித்தவர்கள் இதில் எல்லாம் நம்பிக்கையில்லாமல் அலட்சியப் படுத்துகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் நடத்தப்பட வேண்டிய சமயச் சடங்குகள்

1. திருமணச் சடங்கு
2. திருமண நிச்சயதார்த்தம்
3. திருமாங்கல்ய பூஜை
4. வளை காப்பு விழா – சீமந்த விழா
5. பெயர் சூட்டும் விழா
6. காதணி விழா
7. பூணூல் கல்யாணம்
8. மஞ்சள் நீராட்டு விழா
9. புது மனை புகு விழா
10. மணி விழா
11. நீத்தார் இறுதிச் சடங்குகள்

– இவை அத்தனையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று அம்மா சொல்லிக் கொடுத்தாள். இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு போனோமா?

– மாவட்டத் தலைவர்களே! மாவட்ட வேள்விக் குழுத் தலைவ‌ர்களே!

அம்மா சொல்லி 40 ஆண்டுகள் ஓடி விட்டன….

நாம் என்ன செய்தோம்? என்ன செய்கிறோம்?

எவ்வளவு நுட்பமான யாக குண்டங்களைப் போட்டுப் பூஜை செய்திருக்கிறோம்?

எவ்வளவு சக்தி வாய்ந்த சக்கரங்களை அமைத்துப் பூஜை செய்திருக்கிறோம்? இதையெல்லாம் உலக மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றோமா?

நாடெங்கும், நகர நல வேள்விகளைச் செய்து வருகிறோமா?

ஆதிபராசக்தி அடிகளாராக அவதாரம் எடுத்து வந்திருக்கிறாள் என்பதையாவது ஊருக்கும் உலகத்துக்கும் எடுத்துச் சொன்னோமா….?

நம்மிடம் எத்தனை தலைவர்கள்? எத்தனை பதவிகள்….?

இனியாவது அம்மாவின் மனம் குளிரச் செய்வோம்! ஒற்றுமையாகச் சேர்ந்து பணி செய்வோம்! ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு!

ஓம்சக்தி

சக்தி வேம்பு
சக்தி ஒளி – வைகாசி May 2019-