வெளிச்சத்தில் இருந்து கொண்டு இருட்டில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் பார்க்க இயலாது.

ஆனால் இருட்டில் இருந்து கொண்டு வெளிச்சத்தில் நடப்பதை நம்மால் எளிதாகப் பார்க்க இயலும்.

துறவறத்தை மேற்கொண்ட பின்னர் இல்லறத்தில் ஈடுபடுவது என்பது இயலாத காரியம்.

இல்லறத்தில் இருந்து கொண்டே துறவறத்தைக் கடைப்பிடிப்பது என்பது மிக்க ஏற்புடையது.

தூய்மையான துறவறம் என்பது இறை அருளால், மிகச் சிலருக்கு மட்டுமே சாத்தியமாகிறது. ஆனால் இல்லறம் என்பது அனைவருக்கும் எளிதில் ஏற்றது.

துறவறத்தில் இருப்பவர்களையும் உருவாக்கியது
இல்லறத்தில் இருப்பவர்கள் தானே!

துறவறத்தில் இருப்பவர்களும் உலகியல் நலம் பொருட்டு, இல்லறத்தில் இருப்பவர்களையே சார்ந்து வாழ்கின்றனர்.

“துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை”

துறவிகளுக்கும், வறியவர்களுக்கும், தன்னிடத்தே யாசிப்பவர்களுக்கும், இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான் என்பார் வள்ளுவர்.

அழகு, இளமை, செல்வம் கருதி ஆண், பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். வாழ்வில் நரை, திரை தாண்டி, மூப்பு அவர்களுக்கு இயல்பாக வரும்போது பெற்ற மக்களும், வந்த மருமக்களும் நன்கு பேணாவிட்டாலும் வயது முதிர்ந்த காலத்தில் அனைவரும் வேண்டுவது அன்பும், அருகில் இருந்து கவனித்து, அவர்களது உடல் நோய் மற்றும் துன்பங்களைப் போக்குவதற்குத் தக்க துணை ஒன்றுமட்டும் தான்.

இல்லறத்தில் இருப்பவர்களுக்கு, அவர்களது முதுமைப் பருவத்தில், அவர்களது வாழ்க்கைத் துணையாக வாய்த்தவர்களின் உதவி பெருந்துணையாக அமைகிறது.

“இது கலியுகம், சனியுகம்,கணினியுகம்”

இப்போது உள்ள மிக வேகமான, விஞ்ஞான வளர்ச்சி நிறைந்த உலகத்தில் பாதுகாப்பு நமக்கு மிகவும் அவசியம்.

எவ்வளவு துன்பங்கள் நிறைந்திருந்தாலும்,இல்லறத்தில் நாம் இருப்பது நமக்கு எல்லா வகைகளிலும் பாதுகாப்பு.

சம்சாரி ஒருவன் குடும்பத்தாருடன் ஒரு ஊரில் வசித்து வந்தான். அவன் இருந்த இடத்திலே திடீரென மழை கொட்ட ஆரம்பித்தது. சம்சாரி, மழையில் நனைந்து கொண்டே வெளியில் நின்ற மாட்டை அவிழ்த்து அவசரம் அவசரமாகக் கொட்டகையில் போய்க் கட்டினான்.

மழை பலமாக இருந்தது. காற்றும் மிக வேகமாக அடித்தது. சம்சாரிக்கு சற்று நேரம் திண்டாட்டமாக இருந்தது.

அவனுடைய வீட்டுக்கு அருகே சந்நியாசிகள் தங்கும் இடம் ஒன்று இருந்தது.குளிருக்கு அடக்கமாய் சந்நியாசி
ஒருவர் உள்ளே உட்கார்ந்து கொண்டு, ” அய்யோ பாவம் சம்சாரி” என்று நினைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்.படுத்துக் கொண்டே சம்பாரி படும்பாட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தார் இன்னொரு சந்நியாசி.

“சந்நியாசி தான் ராஜா. சம்சாரி பாடு நாய்ப்பாடு”

என்று சொல்லிச் சிரித்தனர். அந்தச் சந்நியாசிகள் இருவரும் அவர்களது சிரிப்பும், அந்த வார்த்தைகளும் சம்சாரியின் காதில் விழுந்தன. அந்த மழையிலும் சம்சாரி தான் செய்ய வேண்டிய வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.

மழை நின்றது.இப்போது காட்சியில் மாற்றம்.

சம்சாரி குளிருக்கு இதமாக வெந்நீர் போட்டுக் குளித்துவிட்டு நிம்மதியாகச் சாப்பிட வந்து உட்கார்ந்தான். ஆவி பறக்க கேப்பைக் களி கிண்டி சம்சாரியின் மனைவி அவனுக்குப் பரிமாறினாள். குழந்தைகளும் ஆனந்தமாக அப்பா, அம்மாவுடன் சிரித்துக் கொண்டே சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் வளர்கிற பூனைக்குட்டிகூட அவர்களோடு உராய்ந்து கொண்டு சந்தோசமாக விளையாடியது.

சிறிது நேரத்தில் “அம்மா தாயே இராப்பிச்சை” என்ற குரல் கேட்டு, சம்சாரி வீட்டின் வெளியே எட்டிப் பார்த்தான். அங்கே கையில் ஒரு திருவோட்டுடன் சந்நியாசிகளில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

சம்சாரி, அந்த சந்நியாசிப் பார்த்து “சந்நியாசி ராஜாவே ,இந்த சம்சாரி நாய் வீட்டுக்கு நீங்க இப்படிப் பிச்சை கேட்க வரலாமோ?” என்று கேட்டான். அதற்கு சந்நியாசி, சம்சாரியைப் பார்த்து “நான் சொன்னது தப்பு தான். இப்போ சம்சாரியே ராஜா!” என்று சொல்லிப் பிச்சை வாங்கிக் கொண்டு, தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்.

இக்கதையின் கருத்தாழத்தைத் தெளிவாக நாம் உணரலாம்.

பெற்றோர், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்ள, நாம் வாழ்கிற இல்லறம் என்பது
சிறப்பானது.

அடிகளார் இல்லறத் துறவியாக இருப்பது தான் இந்த ஆன்மிக இயக்கத்திற்கே சிறப்பு. இந்த இயக்கத்தில் நீங்கள் கணவன், மனைவியாக இருவரும் ஈடுபடுவது தான் சிறப்பு என்பது அன்னையின் வாக்கு.

நிலத்தைப் பக்குவப்படுத்திப் பயிர் வளர்ப்பது போல உங்கள் மனத்தைப் பக்குவப்படுத்தி ஆன்மிகப் பயிர் வளர்ந்து வருகிறேன்.

அடிகளாரை இல்லறத்தில் வைத்து இங்கு நான் ஆன்மிகத்தை வளர்க்கின்றேன் என்கிறாள் அன்னை.

இல்லறத்தில் இருந்து கொண்டு தவறுவது என்பது நம் வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுவது மாதிரி.

துறவறத்தில் இருந்து கொண்டு தவறுவது என்பது மலையில் இருந்து கீழே விழுவது மாதிரி.

தெய்வம் சாட்சி சொரூபமாக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

முன்னர் நமக்கு இருபது வயதில் இருந்த அறிவு, தற்போது இரண்டரை வயதுக் குழந்தைக்கு இருக்கிறது. அதனால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு.

நம்மைச் சுற்றி உள்ள சூழல், நம்மில் மனமாசைப் பெருக்கி வருகிறது. அறுபது வயது நிரம்பிய தொண்டர் ஒருவர் அருள்வாக்கில் அம்மாவிடம், இன்னும் எனக்கு இளமை நினைவுகள் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வருகிறதே என்று கேட்டார்.

அதற்கு அம்மா, பாத்திரம் என்றால் அழுக்குப் படியத்தான் செய்யும். கண்ணாடி என்றால் தூசி படியத்தான் செய்யும். மனம் என்றால் மன அழுக்குகள் இருக்கத்தான் செய்யும். கொஞ்சம் கொஞ்சமாக உன் மன அழுக்குகளை நீக்குகிறேன் என்றாள்.உன் மனமாக நீங்க வேண்டும் என்று நீ என்னிடம் வேண்டிக் கொண்டே இரு என்றாளாம்.

மற்றும் ஒரு வயதான தொண்டர் அருள்வாகில் அம்மாவிடம், இது போன்ற மன அழுக்குகளை முழுவதுமாக நீ நீக்கினால் என்ன? என்று கேட்டாராம்.

அதற்கு அம்மா, பிறகு உனக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ உன்
வேண்டுதலை மட்டும் விடாதே! என்றாளாம்.

உலக சிருஷ்டிக்காக, உலகம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக தெய்வம் மாயை என்ற ஒன்றைப் படைத்திருக்கிறது.

தெய்வம் மாயைக்கு அதிக சக்தியை வைத்திருக்கிறது. அந்த மாயைக்கு உட்படாமல் இருப்பது என்பது தெய்வம் ஒருவர்க்கு அளிக்கும் வரம்.

ஓம் மாயைக் கடலின் மீட்பாய் போற்றி ஓம்!

ஓம் மயக்கச் சேற்றின் மீட்பாய் போற்றி ஓம்!

என்பன மந்திர வரிகள்.

மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு. அதை ஆடவிட்டால், சுற்றி ஓட விட்டால், நம்மைப் பாவத்தில் சேர்த்துவிடும்.

கண் போன போக்கிலே கால் போகலாமா?

மனம் போன போக்கிலே மனிதர் போகலாமா?

என்ற பாடல்களை நாம் கேட்டு இருப்போம்.

தற்போதைய வாழ்க்கையில் நாம் மாயைக்கு உட்படாமல், மன மயக்கத்திற்கு ஆளாகாமல் நம்மைக் காத்துக் கொள்வதற்கு வழிகாணும் நிலையிலே தான் நாம் இருக்கிறோம்.

நம் மனம் எப்போது மாறும் என்று நம்மால் கணிக்க இயலாது. எனவே நாம், இல்லறத்தில் இருப்பதே நமக்கு என்றும் பாதுகாப்பு.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்”

உலகத்தில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன். வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான் என்பார் வள்ளுவர்.

பத்திரிக்கையில் வரும் சில படங்கள், செய்திகள், சில திரைப்படக் காட்சிகள் அலைபாயும் மனத்தின் வேகத்தை அதிகரிக்கின்றன.

தொடர்ந்து நாம் பார்க்கும் தொலைக்காட்சி பல சமயங்களில் தொல்லைக் காட்சியாக மாறி வருகிறது.

வளர்ச்சி கருதிக் கண்டுபிடிக்கப்பட்ட கம்ப்யூட்டர் ஒரு பக்கம் பெரும் நன்மை தருவதோடு, இன்றைய இளைய சமுதாயம் தீமையில் மூழ்குவதற்கு சற்றே வழி வகுப்பதாக உள்ளது.

படிக்கிற செய்திகளும்,பார்க்கிற காட்சிகளும் நாம் கண்களால் கைது
செய்யப்பட்டுள்ளோம் என்பதையே நம்முள் வலியுறுத்துகின்றன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய காலத்திற்கு,இந்த யுகத்திற்கு, இல்லற வாழ்க்கையே மிகச் சிறந்தது என நாம் அறுதி இட்டுக் கூறலாம்.

அன்னை சொன்ன ஆன்மிக வழியில், இல்லறத்தில் இருந்து கொண்டே நாம் நல்லறம் வளர்ப்போம்! இறையருள் பெறுவோம்!

ஓம் சக்தி

நன்றி

சக்தி ஒளி 2004 டிசம்பர்

பக்கம் 12-15.