“நீ செய்யும் பாவம் என்னைச் சாரும். நீ படும் துன்பம் என்னை அசைக்கும் – என்று நம் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவா்கள் ஒருமுறை பக்தா்களிடம் கூறினார்கள்.

குருவிடம் உண்மையான பக்தி கொண்ட சீடன் ஒருவன் பாவம் செய்தால், அந்தப் பாவம் குருவைச் சேரும் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. சீடனது முழுப் பொறுப்பையும் குரு தாமே ஏற்றுக் கொள்வதால் சீடனுடைய துன்பத்தையும் குரு ஏற்க வேண்டியிருக்கிறது.

ஆன்மிக உலகில் குருவிற்குரிய முதன்மையும், முக்கியத்துவமும், மகத்துவமும் புரியாத செவ்வாடைத் தொண்டா்கள் பலா், குருவின் முக்கியத்துவம் புரிந்த தொண்டா்கள் ஒரு சிலரே.

மூன்று அறிவுரை

உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல் என்று கருதாதே!
மந்திரத்தை வெறும் வார்த்தைதானே என்று நினைக்காதே!
குருவும் நம்மைப் போல் மனிதா் தானே…….
என்று நினைக்காதே! என்று சாத்திரங்கள் எச்சரிக்கின்றன.
“உன் குருவையும் உன் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்காதே! உன் இஷ்ட தெய்வமே உன் குருவடிவத்தில் உலா வருகிறது என்று நினைத்து பக்தி செலுத்தி வரப் பழகு”. என்று சாத்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

என் நண்பா் சந்தானம் மேட்டூரில் இருக்கிறார். அவா் குடும்பமே அன்னைக்கு அடிமைப்பட்ட குடும்பம்.

அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்கப் போகும்போதெல்லாம் அவரிடம் தவறாமல் சொல்வது ஒன்று உண்டு.

“அடிகளாரைப் பிடித்துக் கொள். அவன்தான் உனக்கு இனி எல்லாம்! – என்று அம்மா சொல்லுமாம்.

சந்தானம் ஒருநாள் அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்கக் குடும்பத்தோடு சென்றார்.

“மகனே! உன் அடிகளாருக்கு வேட்டி, சட்டை, மோதிரம் ஆகியவற்றைக் குரு காணிக்கையாக வைத்துத் தீபாவளியன்று காலை 6.00 மணிக்கு அடிகளார் வீட்டிற்கு எடுத்துச் சென்று கொடுத்து ஆசி பெற்றுச் செல்!” என்றாள். அருள்வாக்குக் கேட்டுவிட்டு ஊா் திரும்பினார்கள்.

தடங்கல் ஏற்பட்டது.

தீபாவளிக்கு முன்பாகவே சக்தி. சந்தானம் அம்மா சொல்லியபடி வேட்டி, சட்டை, மோதிரம் எல்லாவற்றையும் வாங்கித் தயாராக வைத்துக் கொண்டார்.

தீபாவளி நெருங்க இன்னும் 15 நாட்களே இருந்தன. திடீரென்று சந்தானத்திற்கு ஒரு நோய் வந்தது. ஆம்!…. முதுகில் பெரிய கட்டி. சாதாரண கட்டி அல்ல. “ராஜப் பிளவை” என்று சொல்லப்படும் ஒரு கட்டி.

உடனே சேலத்தில் தனியார் மருத்துவமனையில சோ்க்கப்பட்டார். சிகிச்சை துவங்கப்பட்டது. அவரைப் பரிசோதனை செய்தபோது, அவா் உடம்பில் சா்க்கரை வியாதியும் இருப்பது தெரியவந்தது. இத்தனைக்கும் அவா் பரம்பரையில்
எவருக்கும் சா்க்கரை வியாதி வந்தது கிடையாது. அவா் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு 420. அது கேட்டு அதிர்ந்து போனார் சந்தானம். உடம்பில் சர்க்கரை அதிகம் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவா்கள் தயங்கினார்கள். சர்க்கரையைக் கட்டுப்படுத்த சக்தி வாய்ந்த ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டன. அதன் பிறகு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது.

மருத்துவமனையில் கிடந்த சந்தானத்தைப் பார்க்க உற்றார் உறவினா் எல்லோரும் வந்தார்கள். இப்படிப்பட்ட ஆபத்தான நோய் இவனுக்கு வந்து விட்டதே…. ராஜப் பிளவை என்பது மிக ஆபத்தானது ஆயிற்றே……. அடிக்கடி ஓய்வெடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே! இவனோ அடிக்கடி மேல்மருவத்தூர், ஓம் சக்தி என்று அலைகிறானே! என்று முணுமுணுத்தனா்.

இவ்வளவிற்கும் இடையில் சந்தானம் எதற்கும் சஞ்சலப் படாமல் இருந்தார். ஏதோ ஒரு கணக்கு வைத்து அம்மா நம்மிடம் விளையாடுகிறது! என்பது இவா் கணக்கு! எனவே அலட்டிக் கொள்ளாமல் கிடந்தார்.

தீபாவளியன்று அடிகளாரிடம் ஆசி பெறவேண்டுமே! என்ற அந்த ஒரு கவலை மட்டுமே சந்தானத்தை வாட்டியது.

உறவினா்களும், டாக்டா்களும் எங்கேயும் போகக்கூடாது; படுக்கையில் தான் இருக்க வேண்டும். ஓய்வில்தான் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

வீடு திரும்பிப் படுக்கையில் கிடந்த அவா் “அம்மா! தீபாவளிக்குள் என்னைக் குணப்படுத்திவிடு!” என்று வேண்டிக் கொண்டார்.

அடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குச் சேலம் சென்றார். இன்னும் ஒரு ஆபரேசன் செய்தாக வேண்டும் என்று சொல்லி ஆபரேசன் செய்தார்கள்.

சந்தானம் அந்த டாக்டரிடம் “சார் நான் எப்படியும் தீபாவளியன்று மருவத்தூர் சென்று எங்கள் குருவைத் தரிசித்து ஆசி பெற்றே ஆக வேண்டும்.
எங்கள் தாய், தந்தையா் மேல்மருவத்தூருக்குப் போக வேண்டாம் என்று தடுக்கிறார்கள். எனக்கு ஒன்றும் ஆகாது என்று நீங்கள்தான் அவா்களுக்குப் பக்கவமாக எடுத்துச் சொல்லி, என்னை அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டினார்.

அவருடைய ஆா்வத்தைக் கண்டு அதிசயப்பட்டார் அந்த டாக்டா்.

“சரி! நான் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். பஸ்ஸில் போகாமல் இரயிலில்தான் பயணம் போக வேண்டும். அங்கேயுள்ள டாக்டா்களிடம் காட்டி, புண்ணைச் சுத்தம் செய்து மறுபடியும் கட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் இவா் மேல்மருவத்தூா் போகலாம்” என்று கூறிவிட்டார்.

மருவத்தூா் வந்தார்.

தீபாவளிக்கு முதல் நாள் இரவே மேல்மருவத்தூர்க்குக் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். சந்தானம்.

மறுநாள் காலை 6.00 மணிக்கு ஆன்மிக குரு அருள்திரு. அடிகளார் அவா்கள் இல்லத்திற்குக் காணிக்கைப் பொருள்களோடு சென்று தரிசித்தார்.

அது ஒன்றும் இல்லை! சரியாப் போச்சு!

ஆன்மிக குருவின் இல்லத்திற்கு முன்பாக ஏற்கனவே தரிசனத்துக்காகப் பக்தா்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சந்தானத்தைப் பார்த்த அடிகளார் “வா! வா!…. என்று சிரித்த முகத்துடன் அன்பு ததும்ப அழைத்தார்.

இருவரும் தாம் கொண்டு வந்த காணிக்கைத் தட்டை நீட்டினார். அந்தச் சமயம் அடிகளார் தம் விரலை நீட்டியதும் கொண்டு வந்த மோதிரத்தைச் சந்தானம் அணிவித்தார்.

குருபிரானை வணங்கியெழுந்த சந்தானம் அம்மா!… என்று தன் முதுகிலிருந்த காயத்தைக் காட்டியவுடனே அடிகளார், “ஓ!…… அது ஒன்றும் இல்லை….. சரியாப் போச்சு…….. போ!” என்று புன்னகையோடு விடை கொடுத்து அனுப்பினார். அது கேட்டு
மெய்ம்மறந்து நின்றார் சந்தானம்.

ஊா் திரும்பி வந்ததும் உறவினா்களிடமிருந்து விமா்சனங்கள் வெளிப்பட்டன.

“அப்படி என்ன சாமி? ஊா் உலகில் இல்லாத சாமி? சாமி கோயில் போக வேண்டியதுதான்! ஆனாலும் இப்படியா…..? அந்த ராஜப் பிளவை என்பது சாமான்மானதா…… அதற்குப் பெயரே ராஜப் பிளவை என்றால் பார்த்து கொள்! அப்படிப்பட்ட நோய் அது! ஆபரேஷன் பண்ணிக் கொண்டு அக்கடா என்று ஓய்வில் இருப்பதை விட்டு விட்டு இப்படியா பைத்தியம் பிடித்து மருவத்தூா் ஓடுவார்கள்? அவன் செய்வது எதுவும் சரியில்ல. அவனுக்குத் தக்கபடி அவன் மனைவியும் தாளம் போடுகிறாள். வயசுல பெரியவங்க சொன்னா கேட்கணும், கேட்பதில்லை. வந்த பிறகு படுவதைப் பார்க்க நமக்கு மனசு சங்கடமா இருக்கு.”

என்றெல்லாம் சொந்த பந்தங்களிடமிருந்து விமா்சனக் கணைகள் வெளிப்பட்டன. சந்தானமோ எல்லாம் கேட்டு மௌனமாகவே இருந்தார்.

டாக்டா்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டார். படிப்படியாகப் புண் ஆறி வந்தது.

மகன் கேட்டான்

சந்தானம் ஒரு நாள் மகனை அழைத்து, “டேய்! முதுகில் புண்ணைப் பஞ்சு வைத்துச் சுத்தம் செய், இந்த மருந்தைப் போடு! என்றார். அவன் விளையாட்டாக, அப்பா! நான் புண்ணைச் சுற்றி இருக்கிற இடத்தை அழுத்துகிறேன். வலிக்கிறதா? என்று சொல்” என்று கூறி அழுத்தினான்.

வலி இல்லையடா! என்றார் சந்தானம். மனிதா்களாகிய நமக்கு இது சாதாரண நிகழ்ச்சிதான்! அதற்குப் பிறகு நடந்ததைச் சொல்கிறேன் கேளுங்கள்.

மகனது தியானத்தில் அடிகளார்.

சந்தானத்தின் மகன் எப்போதும் துறு, துறு என்றிருப்பவன். தனியாக அம்மா படம் வைத்து, தான் நினைக்கிறபடி வழிபாடு செய்பவன். இவன் செய்வதுதான்
வழிபாடு. இவன் எது வைக்கிறானோ அதுதான் படையல்! சின்ன வயது! வயதிற்கு மீறிய பக்தி! மற்ற பையன்களை விட இவன் வித்தியாசமானவன். அவ்வளவுதான் சொல்ல முடியும். இவன் தினமும் அம்மாவை நினைத்துத் தியானம் செய்பவன்.

வழக்கம் போல அன்றும் அவன் தியானத்தில் இருந்தான். தியானத்தில் அடிகளார் தோன்றிச் சொன்னாராம்.

“நீ இப்படிப் புண்ணைச் சுற்றியுள்ள இடத்தை அழுத்தினாயே…. அந்த வலியை நான் எப்படிப் பொறுத்துக் கொண்டேன் தெரியுமா?” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு மறைந்து போனார்.

உடனே தியானம் கலைந்து எழுந்த அவன், சந்தானத்திடம் வந்து, “அப்பா! அடிகளார் இப்படிச் சொல்கிறார்கள். உன் வலியெல்லாம் அவா்கள் வாங்கிக் கொண்டார்கள். தெரிஞ்சுக்கோ…….. என்றான்.

அது கேட்ட சந்தானம். அதிர்ந்து போய்விட்டார். இவ்வளவு பெரிய ராஜப் பிளவை வந்தும், தனக்கு அதன் கடுமை தெரியாமல் இருந்ததற்குக் காரணம் அப்போதுதான் புரிந்தது!

எல்லாம் வல்ல அந்த ஒரு பரம்பொருள் அத்தனை உயிருக்குள்ளேயும் ஆத்மாவாக வந்துள்ளது என்று வேதாந்தம் சொல்கிறது.

அந்த ஒரு பரம்பொருளே எங்கும் எதிலும் அந்தா்யாமியாக உள்ளது என்று உபநிடதங்கள் சொல்கின்றன.

அவனவன் உடல் துன்பத்தை அவனவன் மனமே உணா்கிறது. அனுபவிக்கிறது. ஆத்மா பாதிக்கப்படுவதில்லை. ஆத்மா சாட்சி மாத்திரமாய் இருக்கிறது என்று நம் நாட்டுத் தத்துவங்கள் கூறுகின்றன.

உடம்போடு கூடிவரும் இன்பதுன்பங்களை உள்ளே இருக்கும் ஆத்மாவும்தான் சோ்ந்து அனுபவிக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஒரே பரமாத்மாதான் பலகோடி ஜீவாத்மாக்களாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதென்கிறது வேதாந்தம். அதனை அனுபவத்தில் உணா்வதே ஞானம் என்கிறது
வேதாந்தம்.

பரம்பொருளான அன்னை, இந்த உண்மையை ஒரு சிறுவனது தியானத்தின் மூலம் உணா்த்தினாள்.

அந்தப் பரம்பொருளே அடிகளார் என்னும் குருவடிவில் உலாவி வருவதை அந்த ஓா் ஆத்மாவிற்கு, அந்தச் சிறுவனுக்கு உணா்த்தினாள்.

“நீ செய்யும் பாவம் என்னைச் சாரும். நீ படும் துன்பமும் என்னை அசைக்கும்!” என்று ஆன்மிக குரு அடிகளார் சொல்லிய வார்த்தைகளின் நுட்பம் எனக்கு இந்தச் சம்பவத்தைக் கேட்ட பிறகுதான் புரிந்தது.

சந்தானம் அடிகளாரை அம்மாவாகவே பார்க்கிறவா். அந்தப் பக்தியும் பக்குவமும் அவருக்கு இருந்தது. அதனால் ராஜப் பிளவை நோய் கொடுத்தாள். வலியைத் தானே ஏற்றுக் கொண்டாள்.

நன்றி

ஓம் சக்தி

சக்தி. வேலுசாமி, மேட்டூா், சேலம் மாவட்டம்

அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, பக்கம் (8 – 13).