ஒரு பெரிய கரண்டியை எடுத்து வருமாறு கூறினாள் தாய். கரண்டி வந்தவுடன் மற்றொரு அன்பரை விளித்து “மகனே! அண்டாவில் இருக்கும் சாம்பார்
சாதத்தில் மேலாக ஒரு கவளத்தையும், கரண்டியை உள்ளே செருகி இடைப்பகுதியில் ஒரு கவளத்தையும், ஆழமாகத் திணித்து அடியில் இருக்கும் பகுதியில் ஒரு கவளத்தையும் எடுத்துத் தனித்தனியே உண்டு பார்!”

என்று ஆணையிட்டாள் அன்பர் தின்று பார்த்துவிட்டு முகத்தைச்சுளித்தார். சாதம் நன்றாகக் கிளறப்படவில்லை. பத்துக்கு மேற்பட்ட சமையல்காரர்கள் இருந்தும் இது பக்குவமாகச் செய்யப்படாமைக்குக் காரணம் இரண்டு. ஒன்றாவது ஏழைகட்குப் போடப்படும் சோறு தானே என்ற அலட்சியம் சமையல்காரர்களுக்கு. இரண்டாவது அறநிலையக்காரர்கள் யாரும் இந்த அன்னதானப் பகுதிக்கு வந்து எல்லாம் செம்மையாக நடைபெறுகின்றனவா என்று கவனிக்கத் தவறிவிட்டமையும் ஆகும்.

பொதுவாக அன்னதானம் என்றால் சமைக் கின்றவர்க ளுக்கும் அதனைச் செய்கின்றவர்கட்கும் ஓர் அலட்சிய மனப்பான்மை வந்துவிடுவதைப் பல இடங்களிலும் காண்கிறோம். அன்னதானத்தில் சோற்றை வாங்கி உண்கின்ற ஏழைகள் அந்த உணவு சரியில்லை என்று கூறப்போவதில்லை! அப்படியே கூறினாலும் இலவசச் சாப்பாட்டில் குற்றம் வேறு காண்கிறாயா என்று மக்கள் அவர்களைக் கடிந்து கொள்வார்கள்.

ஆகையினால் தான் அன்னதானம் என்பது ஓர் இழிநிலையை அடைந்து விட்டது. ஆதிபராசக்தியின் ஆணையால் நடக்கின்ற அன்னதானமும் இந்த நடைமுறைக்கு விலக்கல்ல. எனவே தான் அன்னை அறநிலை அன்பரை நல்வழிப்படுத்தவும், அவர்கள் தவற்றை எடுத்துக் காட்டவும், சமையலறைக்குத் தானே எழுந்தருளினாள். அது மட்டுமன்று. “ஏழைகள் தானே உண்கிறார்கள்.

உணவின் நிறை குறைகளை அவர்கள் எங்கே எடுத்துக் காட்டப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் தானே இவ்வாறு கவனக்குறைவாக இருந்துவிட்டீர்கள்! அவர்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் பசியும் வயிறும் அவர்கட்கும் உங்கட்கு உள்ளவை போலவேயாகும்” என்றும் அறிவுறுத்தினாள். அத்தகைய உபதேசத்தை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஓர் அம்மையார் செய்தார். அவர் பெயர் மணிமேகலை.

புற உயிர்களையும் தம் உயிர்போல பாவித்து அவர்கள் துயர் துடைக்க வேண்டும் என்பது அன்னையின் தலையாய உபதேசமாகும்.