1982 செப்டம்பர் 19, 20 தேதிகளில், தென்பகுதிப் பிரச்சாரக் குழுவினர், விழுப்புரம் வார வழிபாட்டு மன்றத்தலைவர் திரு.N.பழனிச்சாமி அவர்கள் தலைமையில், பழநி. திண்டுக்கல் ஆகிய நர்களுக்கு அம்மன்றங்களின் செயல் முறைகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தனர். அப்பொழுது பழநி மன்றச்செயலர் பேராசிரியர் திரு.கண்ணன் அவர்கள், தங்கள் மன்றத்தில் அம்மன்முன் “கோரிக்கை வைத்தல்” என்ற ஒரு முறையைக் கையாளுவதாகக் கூறி, அம்முறையில் நிகழ்ந்த சில அற்புதங்களையும் விளக்குகிறார்.

அன்பர்கள் தங்கட்கு நிறைவேற வேண்டிய கோரிக்கைகளை ஒரு தூய வௌ;ளைத்தாளில் எழுதி, வார வழிபாட்டுத் தினத்தன்று, அம்மன் முன் வைத்து வழிபாட்டில் கலந்து கொள்கிறார்கள். அப்படிக் கோரிக்கையாக வைத்து நிறைவேறிய செயல்கள் பலப்பல. அவற்றுள், அற்புத நிகழ்ச்சிகள் இரண்டினை இங்கே விவரிக்கின்றேன்.

பழநி சண்முகபுரம் காலனியைச் சேர்ந்த ஒரு சிறுவன். வயது சுமார் பன்னிரண்டிருக்கும். ஊட்டியில் எளியவேலை ஒன்றைப் பார்த்து வந்தவன். திடீரென்று நடக்க முடியாதவனானான். பற்பல இடங்களில் மருத்துவங்கள் பார்த்தும் பலனில்லை. இதையறிய நேர்ந்த பழனி மன்றச் செயலர் பையனை மன்ற வழிபாட்டிற்குக் கொண்டு வரும்படிக் கூறினார்.

முதல் வாரம் பன்னிரண்டு வயதுப் பையனைத் தோளில் தூக்கிக் கொண்டு வந்து, அம்மன் முன் “கோரிக்கை வைத்து” வழிபாடு செய்தனர். அம்மனின் கடைக்கண் பார்வை, நடக்க முடியாத அச்சிறுவனின் மீது பரவியது. அடுத்த வாரம் வழிபாட்டிற்கு வந்தபொழுது மற்றொருவரை அணைத்துக்கொண்டு தாங்கித் தாங்கித் தானே நடந்து வந்தான் அந்தச் சிறுவன். முதல்வாரம் தோளில் தூக்கிவரப் பெற்றவள், அடுத்த வாரத்தில் தன் கால்களால் நடந்து வருவதைப் பார்த்தவர்கள் அதிசயித்தனர்.

இங்ஙனம் மூன்று வாரங்கள் தொடர்ந்து வரப், பின் நான்காவது வாரம் வழிபாட்டிற்கு வரும் போது, அம்மனின் அருள் துணையோடு, வேறு எந்தத் துணையுமின்றி, அந்தச் சிறுவன் தானே நடந்து வந்தான். மன்றத்தினரும் மற்றவர்களும் பையனை மகிழ்ந்து வாழ்த்தினர்.

தற்பொழுது முழுநலம் பெற்றுள்ள அந்தச் சிறுவனைப் பழநி மன்றத் தலைவர் டாக்டர் திரு.வித்தியா சாகரர், தன்னிடம் ஏற்ற ஒரு பணியில் அமர்த்திக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
அடுத்தொரு நிகழ்ச்சி, பழநியில் ஆடிட்டராகப் பணியாற்றுபவர் திரு.K.B.இராமச்சந்திரன் , அவர் தமையனார் டில்லியில் பொறுப்பாளர் பணியொன்றில் இருப்பவர். அவர் தம் குடும்ப நலன் கருதி நான்கு ஆண்டுகளாகச் சென்னைக்கு மாற்றல் கேட்டு அயராது முயற்சித்து வந்தார். பணிமாற்றம் என்பது எளிய செயல் என்றாலும், அவர் வாழ்க்கையில் அது குதிரைக் கொம்பாயிற்று. அவர் குடும்பச் சூழலில் மாற்றம் கிடைக்காதது மாபெரும் வேதனை ஆயிற்று. மாற்றல் விண்ணப்பக் கோப்புகள் எல்லாம் (Flies) முடியாது என்று மடக்கிக் கட்டுப்பட்டு விட்டதாக அறிந்து மனத்தளர்ந்தார்.

இந்த நேரத்தில் அவர் இளவல் திரு.K.B.இராமச்சந்திரன் தன்னிச்சையாகப் பழநி வார வழிபாட்டு மன்றத்தில் உறுப்பினர் ஆனார். வழிபாட்டு மன்றத்தில் வெள்ளிக்கிழமை உபயம் ஒன்றும் செய்தார். அன்று பழநி வந்திருந்த தன் தமையனாரிடம், “டில்லியில் வைத்த கோரிக்கைகள் இருக்கட்டும். பழநி வழிபாட்டு மன்றத்தில் அம்மனிடம் இன்று ஒரு கோரிக்கை வைப்போம்” என்று கூறினார். தமையனாரும் அவர் குடும்பத்தாரும் சம்மதித்து அதன்படி தம் கோரிக்கையை வைத்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து மருவத்தூர் மண்ணையும் மிதித்து, அன்னையை வழிபாடு செய்து டில்லி சென்றனர்.

என்ன வியப்பு! அங்குச் சென்ற ஒரு வாரத்தில், அவர் எந்த முயற்சியும் செய்யாத நேரத்தில், சென்னைக்கு மாற்றல் உத்திரவு அவரைத் தேடி வந்தது. “இனி இல்லை” என்று முடித்து மூடப்பட்ட கோப்புகள் எப்படித் திறக்கப்பட்டன? எவர் முயற்சி அது? என்று வியந்த நிலையில், அம்மனின் அருள் நோக்கே அனைத்தையும் செய்தது என்று அகம் பூரித்தார் அன்பர். அவர் வேண்டியபடித் தன் பணியைச் சென்னையில் வந்து ஏற்றுக்கொண்டார். அது முதல் அல்லும் பகலும் அம்மனையே சிந்தித்து வாழ்கிறார். வழிபடுகிறார்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 11 (1982)
பக்கம்: 27-28