ஆடிப்பூர அதிசயம்!

சக்தி திருமதி அடிகளார்

ஓம் சக்தி…

அன்பார்ந்த சக்திகளே!
நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைச் சந்திக்கின்றேன்.

இந்த ஆண்டு மழை இல்லாமல் எல்லோரும் எப்படி அவதிப்பட்டோம்
என்பது எல்லாருக்கும் தெரிந்ததே.

” முகிலின் வரவை எதிர் நோக்கும் மயில் போல, மழையின் வரவை எதிர் நோக்கி காத்து இருந்தோம்”.

நாங்கள் பக்தர்களுக்காகவும், பொது மக்களுக்காகவும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் உறுதுணையோடு ஏரியைச் சுத்தம் செய்தல் பாலம் அமைத்தல் போன்ற ஆயத்தப் பணிகளைச் சீர் செய்து மழையின் வரவை எதிர் நோக்கி இருந்தோம்.

குறிப்பாக அருள்திரு அடிகளார் அவர்கள், ஆடிப்பூரத்திற்காக பக்தர்களுக்கு தண்ணீர் தேவை என்பதில் கவனமாக இருந்து கிணறு தூர்வாருதல் கிணற்றை ஆழப் படுத்துதல் என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.

*மழை என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்*

ஆடிப்பூரமும் வந்தது ஆடிப்பூரத்திற்கு முந்தைய தினங்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் எப்படி வெயிலின் கடுமையைத் தாங்கப் போகிறார்கள்? என்று நினைத்துக் கொண்டிருந்தோம். நினைத்த அளவு இல்லாமல் எப்படியோ இல்லாமல் சமாளித்தோம்.

கஞ்சி ஊற்றுதல் பாலபிடேகம் என்ற நிகழ்வுகளும் எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி நிறைவேறின.
பால் அபிடேகம் முடிந்து அம்மனுக்கு அபிடேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கருவறையில் அம்மாவுக்கு அபிடேகம் செய்வதற்கு முன்பு என் மனதில் ஏதோ ஒரு எண்ணம் தோன்றியது ” இந்த முறை சுயம்புவுக்கு செய்யும் அபிடேகப் பொருட்கள் அனைத்தையும் அம்மாவுக்கு செய்ய வேண்டும் ” என்று நினைத்தேன்.

இதுவரை மருவத்தூர் வரலாற்றில் இதுவரை யாரும் இதுபோல் செய்தது இல்லை. நம் அம்மாவுக்குத்தானே! ஆசையாகச் செய்வோம் என்று,சுயம்பு மற்றும் அம்மாவுக்கு முறையாக அபிடேகம் செய்தோம்.திரு.வீரராகவன் , திருமதி ஸ்ரீலேகா ஆகியோர் உடன் இருந்தனர். சிறப்பாக அபிடேகம் நடந்து முடிந்தது.

இப்பதான் கிளைமேக்ஸ்க்கு வரப்போகிறேன் கவனமாக படியுங்கள்! அபிடேகம் முடிந்ததும் அம்மா தொடையை சீண்டி ” அம்மா! ஆசையா அபிடேகம் செய்து உன்னை குளிர வைத்திருக்கிறேன்.
கட்டாயம் மழையை கொடுத்துடு என் செல்லம்! என்று அம்மாவின் திருமுகத்தை தடவிக் கொடுத்து வேண்டிக்கொண்டேன்.
எல்லோரும் நான் செய்வதைப் பார்த்து சிரித்தார்கள்.

எல்லாம் நல்ல படியாக முடிந்து வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் நல்ல மழை! என்ன ஆச்சரியம்…

பரவாயில்லையே! நம் வேண்டுதலுக்கு கூட அம்மா செவி சாய்த்து இருக்கிறார்களே! என்று மகிழ்ச்சி அடைந்தேன். இது ஒரு சாதாரண நிகழ்வாகக் கூட இருக்கலாம். நாம் மனமுருக வேண்டும் போது நடந்தால் மகிழ்ச்சி தானே!

மறுநாள் விடிந்து அம்மா என்னைப் பார்க்கும் போது *”பராவியில்லையே! விழாவையும் முடிச்சுட்ட! மழையையும் வரவழச்சிட்ட”* என்று மகிழ்ச்சியாகக் கூறினார்கள். இதுவே எனக்கு கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொண்டேன். இதுபோல ஒவ்வொரு நிகழ்வும் நடக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

அன்னை ஆதிபராசக்தி மனம் வைத்தால் தான் எதுவும் நடக்கும் என்பது எனக்கு தெரியும். என்னுடைய மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி!