அம்மாவிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன. *ஆனால் அம்மாவின் கண்களைப் பார்த்தபோது….எல்லாமே மறந்துவிட்டேன்.* *அந்தப் பார்வையில் என் வாழ்க்கையை நான் உணர்ந்தேன்.* *ஏன்…?* *ஒவ்வொருவர் வாழ்க்கையின் அர்த்தமும் கூட அதில் இருந்தது.* அன்னை ஆதிபராசக்தியின் அளவிட முடியாத அன்பைப் பற்றியும், அவளுடைய சீற்றத்தைப் பற்றியும் ஒரு இந்துக் குடும்பத்தில் வளர்ந்த நான் என் சிறு வயது முதலே கற்பிக்கப்பட்டிருந்தேன். *அம்மா தன்னுடைய ஒரு பார்வையில் இந்த நம்பிக்கையைத் தகர்த்து விட்டாள்…* *ஒரே பார்வைதான்…..* என் மகளுக்கு வானமும், பறவைகளும், இடியும் மின்னலும் தெரிந்தனவாம். என் கணவரின் கண்களுக்கு அம்மாவின் கண்களில் கடலும், கடல் அலைகளும் தெரிந்தனவாம். *என் கண்களுக்கோ, கிடைத்த குறுகிய நொடியில் அம்மாவின் அளப்பரிய இரக்கம்! கருணை! இவைதான் தெரிந்தன.* *எல்லாவற்றிற்கும் மேலாக என் உடல், ஆன்மா, மனம் முதலிய அனைத்தையும் அம்மா ஆட்கொண்ட அனுபவத்தை நான் உணர்ந்தேன்.* இது எனக்குப் புதிது! இந்தச் செய்தியை என் உள்ளம் உணர்ந்த போது அந்தச் செய்தியை இந்த உலகமே கேட்டதாக உணர்ந்தேன். *என் ஆன்மா அவளிடம் இருந்தே வந்திருந்தாலும், என் மனிதக் குற்றங்களால் அதிக அழுக்கேறி இருந்தாலும் அவள் என்னை அவற்றுடனேயே முழுமையாக ஏற்றுக் கொண்டாள் என்பதை உணர்ந்தேன்.* *அவள் காட்டிய அந்த அன்பும், என்னை ஏற்றுக்கொண்ட பாங்கும் அப்பப்பா…! அது அவளால் மட்டுமே முடியும்.* *கடவுளைப் பற்றிய பயம் அங்கு இல்லை! மாறாக உள்ளமெல்லாம் மகிழ்ச்சி ததும்பிக் கடவுளை நேசிக்கும் உணர்வுகளே அங்கு நிறைந்திருந்தன!* எனக்கு நானே கடினமாக இருப்பதை அம்மா எனக்குக் காட்டினாள். *அப்போது…நான் அம்மாவை மறந்தேன். அம்மா வந்த நோக்கத்தை மறந்தேன். என் கேள்விகளை மறந்தேன்.* *அதுவரை என் வாழ்நாளில் அறிந்திராத அன்பையும், அரவணைப்பையும் அம்மா எனக்குக் காட்டினாள்.* *நம்மில் பெரும்பாலோர் அம்மாவின் அற்புதங்களை வைத்தே அவளை நம்புகிறோம்.* *ஆனால்…இந்த பூமியில் அம்மா காட்சி தருவதே மனித குலத்தின் மேல் அவளுக்குள்ள அதிகமான அன்பினால்தான் என்பது இப்போது எனக்குப் புரிந்தது.* *நான் அவளுடைய ஒளிப்பிழம்பிலிருந்து வந்த ஒரு சிறு பொறிதான் என்பதை நினைவு படுத்தத்தான் இங்கு வந்திருக்கிறாள் என்னும் பேருண்மையை வினாடிக்குள்ளே குறுகிய காலத்தில் அந்த ஒரு பார்வையில் எனக்கு உணர்த்தினாள்.* *நான் உணர்ந்தேன்.* *நான் அவளைத் தவிர எதையும் எவரையும் மேலோ கீழோ பார்க்கத் தேவையில்லை.* *நான் யாருக்கும் பெரியவளும் அல்ல! சிறியவளும் அல்ல!* *என்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்னால் முடிந்த அளவு மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதும், எல்லாப் பொருள்களிலும் அவளைக் காண்பதுவும் தான்.* *நான் முழுவதுமாக அம்மாவுக்கே உரிமையானவள் என்று தெரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் புதிய ஏடு திறந்தது.* *சுவற்றின் மேல் அமர்ந்திருக்கக் கூடிய ஒரு சிறிய பூச்சியிடம் கூட அம்மாவின் ஒளி உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டேன்.* *இனி நான் மற்றவர்களிடம் பெருமை பேசமாட்டேன். மூர்க்கத்தனமாகப் பேசமாட்டேன்.* *என் சொற்களில் மேலோங்கிய பரிவுதான் இனி இருக்கும்.* *இந்த பூமியில் அம்மா அவதரித்து வந்ததில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளவும், புரிந்தபடி நடந்து கொள்ளவும் ஒவ்வொரு காரியம் உள்ளது என்றுகூட நான் உணர்ந்து கொண்டேன்.அம்மாவின் இந்தச் செய்தியை என் இதயமும் மனமும் உணர்ந்ததும் நான் அவளைப் பணிந்தேன்.* *அவள் எனக்கு உணர்த்தியபடியே இனி ஒவ்வொருவரிடமும் நான் அன்பு செலுத்துவேன்.* *யாரையும் எடைபோட முயற்சிக்க மாட்டேன். என்னையும் கூட….* *மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதே எப்பொழுதும் என் முயற்சியாக இருக்கும்.* *என்னுடைய இந்த முயற்சியில் நான் தோற்றுப் போகலாம். சில நேரங்களில் பரிதாபமாகக் கூட தோற்றுப் போகலாம்.* *ஆனால் இந்த மதிப்பீடுகளால் அம்மா என்மீது காட்டும் அன்பும், இரக்கமும் சிறிதும் மாறப் போவதில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறேன்.* *இத்தகைய இரக்கம், அன்பு ,கருணை எல்லாமே நம் வாழ்வில் நம்முடன் இருக்கும்பொழுது நம்மால் எதைத்தான் சாதிக்க முடியாது.* *ஏனென்றால் சாதனைகூட நம்முடையது அல்லவே…* சக்தி ஒளி ஆகஸ்ட் 2012]]>