*ஆனால் சீடர்கள் என்ற முறையில்….? ஆம்! அது கேள்விக்குறிதான்!*

நம்மில் பலரும் நாம் அம்மா அவர்களின் சீடர்கள் என்றுதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.யார் வேண்டுமானாலும் அம்மாவின் தொண்டராகலாம். ஆனால் ஆன்மிக குரு யாரை சீடராக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள்தான் சீடன் என்ற உயர்வான நிலையைப் பெற முடியும். ஒரு குருவினால் பாய்ச்சப்பட்டுச் சீடனுள் புகும் அறிவொளியை விட உயர்ந்ததும், புனிதமானதுமான வேறு ஒன்று இருக்க முடியாது. ஒரு குருவைக் கண்டுபிடிக்கும் வரையில் உங்களுக்கு அது கிடைக்காது. குருவைக் கண்டுபிடியுங்கள். அவருக்குச் சேவை செய்யுங்கள். குருவினுடைய ஆதிக்கம் உள்ளே செல்ல உங்கள் இதயத்தை திறவுங்கள். அவரிடம் கடவுள் வெளிப்படுவதைக் காணுங்கள். குருவின் ஆன்மாவிலிருந்து இத்தகைய தூண்டுதல் வரும்போது, யாருடைய மனம் இந்தத் தூண்டுதலை ஏற்கிறதோ அவன் தான் சீடன், மாணவன். அந்தத் தூண்டுதலைப் பெறுபவர் அதை ஏற்பதற்கான தகுதி படைத்தவராக இருக்க வேண்டும். அவர்களே உண்மையான சீடர்கள் என்று கூறுகிறார் விவேகானந்தர். ஓ…! சீடன் என்பதற்கு இத்தகைய முதல் தகுதி அடிப்படையாக ஒருவரிடம் இருக்க வேண்டுமா…? என்று நம் அறிவு கற்றுக் கொண்டிருக்கும் பொழுதே இந்த உலக வாழ்க்கையில் இது முடியக் கூடிய காரியமா என்ற பயமும் ஏற்படுகிறது. உலகில் பெரும்பாலான மனிதர்களும்,ஏன் நாமும் கூட, பெற்றோர், மனைவி, குழந்தைகள் மீது பற்றுடையவர்களாக இருக்கிறோம். அவர்கள் ஆசைப்படுவதையெல்லாம் நம் சக்திக்கு ஏற்றபடி வழங்குகிறோம். நட்புடன் பலரோடு பழகுகிறோம். உலகியலில் தொல்லை தருபவர்களைப் பகைக்கிறோம். தொண்டு செய்கிறோம். அம்மா கொடுத்த படிப்பினைகளால் தருமம் செய்கிறோம். இப்படிப்பட்ட இயல்பு வாழ்க்கையில் வாழ்ந்து பழகிய *நாம் இதிலிருந்து விலகி குரு சொல்லும் சொற்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு வாழும்படியாக நம்மைப் பழக்க இயலுமா….? குரு சொல்லும்படியாக மட்டுமே வாழ நம் மனமும் , மனதில் தேங்கி நிற்கும் ஆசைகளும் அதற்கு வழி விடுமா…?* இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் எழுகின்றன. எழுவது மட்டுமல்ல…உள்ளத்தை உலுக்குகின்றன. நமது குடும்பத்தாருடன் வாழ்ந்தாலும் அவர்களுக்கான தமது கடமைகளைச் செய்தாலும் , மனதை அவர்கள் மீது வைக்காமல் முற்றிலும் தம் குருவின் மீது வைப்பதே ஒரு சீடனின் முதற்கடமை எனத் தெரியவருகிறது. இரத்த சொந்தங்களை மட்டுமல்லாமல், குருவின் கட்டளைகளைச் செய்ய நினைக்கும் சீடன் தன் உயிரைக் கூட வெறுப்பவனாக இருக்க வேண்டுமாம். தனக்கு என்று சொத்துக்கள் இருந்தாலும் செல்வாக்கில் தான் உயர்ந்திருந்தாலும் அதையெல்லாம் ஒரு சீடன் விட்டு விட்டு ஓடிவிட வேண்டியதில்லை. மாறாக அதை ஒரு பொருட்டாக மதிக்கத் தேவையில்லை. அவை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டாலும் அல்லது பறிக்க முற்பட்டாலும் குருவின் வாக்கே வேதமாக ஏற்றுச் செயல்பட வேண்டும். அவற்றை மீட்க உலக வழிகளை நாடக்கூடாது. தன்னிடம் உள்ள பொன், பொருள், புகழ் இவற்றைக் கொண்டு பெருமை, பொறாமை ஆகிய குணங்கள் தன்னை அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தன் செல்வாக்கை ஒரு பொருட்டாக நினையாமல் சிறுவர்களிடமும் தாழ்மையாக நடந்து கொள்ள வேண்டும். குருவின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களாக இருந்தால் உலகத்தின் மீது பற்றற்ற நிலை மனதில் உருவாகியிருப்பதை உணர முடியும். அப்படி இல்லாமல் பக்தியும் வேண்டும், உலகமும் வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அந்த பக்தி எவ்வாறாயினும் அது ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே இருக்கும் என்று நூல்கள் கூறுகின்றன. பல்லாண்டுகளுக்கு முன்பே அன்னை, *” மகனே! நாற்பதாயிரம் பேருக்கு நல்வாக்குக் கூறிவிட்டு ஆன்மிகத்திற்காக நாலுபேர் கூட இல்லையே என்று அவன் தவிக்கிற தவிப்பு யாருக்கடா தெரியும்? யாருக்கடா புரியும்?”*என்றாள். அத்தகைய ஒரு ஆன்மிக சீடனாக நம்மையே நாம் உருவகப்படுத்தி, நம் உள் மனதில் உள்ளே சென்று ஆழ்ந்து பார்த்தால் மேற்கண்ட தகுதிகள் நமக்கு உள்ளனவா என்று தேடும் தேடல் நமக்குள் வரும். வர வேண்டும். எதுவாக இருப்பினும் அதற்கும் அம்மா மனம் வைக்க வேண்டும். அதற்கும் அம்மாவை வேண்டுவோம். கே.வி.எம் சக்திஒளி ஜூலை 2014
]]>