ஆடிப்பூரம் என்றால் கஞ்சிவார்ப்பும் பாலபிடேகமும் உயிர்ப்பான நிகழ்ச்சிகள்.

தைப்பூசம் என்றால் ஆன்மிகஜோதி தரிசனமும், இருமுடியும் உயிர்ப்பான நிகழ்ச்சிகள். நவராத்திரி என்றால் அகண்ட விளக்கில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தரிசிப்பதும் இலட்சார்ச்சனையில் கலந்து கொள்வதும் உயிர்பான நிகழ்ச்சிகள்

– இவை நம் அம்மா பக்தர்களும், செவ்வாடைத் தொண்டர்களும் அறிந்த விஷயங்கள்

-அவரவர் ஊழ்வினைகளை அவரவரும் அனுபவித்தே கழிக்க வேண்டும் என்கிற கருமச்சட்டத்தை வகுத்த வைத்த அன்னை, இந்த அவதார காலத்தில் நம் ஊழ்வினைகளைக் கரைத்துக் கொள்வதற்கென்றே சில வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுத்திருக்கிறாள். அவற்றுள் ஒன்று தான் இலட்சார்ச்சனை.

ஊழ்வினையைக் கரைத்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனினும் நம்மிடம் வைத்த எல்லையில்லாக் கருணை காரணமாகச் சில வாய்ப்புகளை அன்னை உருவாக்கித் தந்து இருக்கிறாள்.

“கொடுக்கின்ற வாய்ப்பையும் கிடைக்கிற வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்” என்று சொல்லியும் காட்டுகிறாள். தெய்வத் தொண்டு, வேள்வித் தொண்டு, மந்திரத் வழிபாடு, தானம், தருமம், மன்றம் அமைத்து ஆன்மிகப் பணி செய்தல், சமுதாயத் தொண்டுகள் செய்தல் என்னும் வாய்ப்புகள் எல்லாம் நம் ஊழ்வினையைக் கரைப்பவை.

அன்னையிடம் வந்தும், பலன் பெற்றும் நமக்கு அந்தப் பிரச்சனை தீரவில்லையே இந்தப் பிரச்சனை தீரவில்லையே….அம்மா தீர்த்து வைக்கமாட்டேன் என்கிறாளே என்று குறைப்பட்டுக் கொள்கிறோம்.

இதற்கு முன்பு பல பிறவிகள் எடுத்து இந்தப் பிறவிக்கு வந்திருக்கிறோம். நமது வினை மூட்டைக் கணக்கில் இருப்பு எவ்வளவு என்பது நமக்குத் தெரிவதில்லை. நமது பிரச்சனைகளின் தன்மையை வைத்தே நமது வினை மூட்டைகளை எண்ணிப் புரிந்து கொள்ள வேண்டியது தான். அம்மா எத்தனை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறாளோ அத்தனை வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்திக் கொள்வது தான் முறை!  ஊழ்வினைகளைக் கரைத்துக் கொள்வது தான் முறை! அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளாது போனால் அது நமது குறையே தவிர அன்னையின் குறையன்று அவளது கருணையில் குறை இல்லை.

தெய்வ வழிபாட்டில் மந்திர வழிபாடு முக்கியம். அன்னையின் நாமங்களையும், அவளது பெருமை சொல்லும் 108, 1008 மந்திரங்களையும் படித்து வழிபட்டு வருவது ஊழ்வினையைக் கரைத்துக் கொள்ள ஒரு வழி.

நமக்காக நாமே வேண்டிக் கொள்வதை விட நமக்காகப் பிறர் வேண்டுவதும், பிரார்த்தனை செய்வதும், அர்ச்சனை செய்வதும் மிகுந்த பயன் தரும். அத்தகைய பிரார்த்தனைக்குச் சக்தி அதிகம். இந்த வாய்ப்பு இலட்சார்ச்சனை மூலமாக நமக்குக் கிடைக்கிறது.

நவராத்திரி விழாவின் போது ஆயிரக்கணக்கான மகளிர் புற்று மண்டபத்திலும் கருவறை மண்டபத்திலும் அமர்ந்து, நமது பெயரைச் சொல்லி, நமது நட்சத்திரம் சொல்லி ” இன்னார் குடும்பம் நலம் பெற, வளம் பெற ஓம் சக்தியே!” என்று சங்கல்பத்துடன் நமது சித்தர்பீடத்தில் இலட்சார்ச்சனை நடைபெறுகிறது.

நவராத்திரி விழா ஒன்பது நாளும் இப்படி மற்றவர்கள் நன்மைக்காக இந்த லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நமது இலட்சியம் நிறைவேற இந்த இலட்சார்ச்சனை துணைபுரிகின்றது.

இந்த இலட்சார்ச்சனையில் கலந்து கொண்டு அம்மா பக்தர்களும், நம் செவ்வாடைத் தொண்டர்களும் மட்டும் பயன் அடைந்தால் போதுமா? நாம் பெற்ற இன்பம் மற்றவர்களும் பெற வேண்டாமா?

எனவே, உங்கள் ஊரில் துன்பத்தால் நலிகிறவர்கள், நோய் நொடிகளால் அவதிப்படுகிறவர்கள். பிரச்சனைகளில் அழுத்தம் தாங்க முடியாமல் மன வேதனைப் படுகிறவர்கள் இவர்கள் அனைவரையும் இலட்சார்ச்சனையில் பங்குபெறச் செய்யுங்கள்! நமது வார வழிபாட்டு மன்றங்கள் இதில் முழுக்கவனம் செலுத்தித் தங்கள் பகுதி மக்களைப் பங்கு பெறச் செய்யுங்கள். “இவர் தான் அம்மா கோயிலுக்கு என்னை அழைத்து வந்தவர். அம்மாவிடம் வருவதற்கு இவர் தான் காரணம்!” என்று உங்களை மற்றவர்கள் நன்றியோடு புகழ்கிறார்களே…. அது எவ்வளவு புண்ணியம்.?

ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபட்டால் போதும் ! அதை வைத்து ஒவ்வொருவருக்கும் பலன் தரவே அம்மாவின் திருவுள்ளம் கருதுகிறது. இருமுடி போடுவதற்கு நாம் அழைத்த போது தயங்கியவர்கள். நமது வற்புறுத்தலால் இருமுடி செலுத்திப் பயனை அனுபவிக்கும் போது நம்மை நன்றியோடு பாராட்டுகிறார்கள் அல்லவா..? எவ்வளவு வற்புறுத்தினாலும் எதற்கும் ஒருவர் இசையவில்லையேல் அவரது ஊழ்வினை அவர் கண்ணை மறைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அம்மாவிடம் வந்து அருள் பெறுவதற்கு அவருக்கு நேரம் வரவில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஆனாலும் நம் நாட்டு மக்கள் அனைவரையும் அம்மாவிடம் ஆற்றுப்படுத்திக் கொண்டு வந்து சேர்ப்பது நம் செவ்வாடைத் தொண்டர்களின் தலையாய பணி! இலட்சார்ச்சனையில் பங்கு பெற வைப்பது நமது கடமை! ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், கேரள மாநிலம், என்று இப்போதே பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் ஆயிரம் ஆயிரமாக வரத் தொடங்கி விட்டார்கள். இது அவதாரம் என்று புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் அவதார நிழலில் ஒதுங்குவதில் நாம் பின் நிற்க கூடாது.   எனவே மக்களிடம் சொல்லி இலட்சார்ச்சனையில் பங்குபெறச் செய்யுங்கள்!  நீங்களும் பங்கு பெறுங்கள்! இது நம் தொண்டர்களின் தலையாய கடமை!

                                                              ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி 1996 செப்டெம்பர் பக்கம் 4-6.

 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here