அன்றாடம் கீரை(பாகம் – 2)

முளைக்கீரை (அ) தண்டுக்கீரை

முளைக்கீரையை அறியாதோர் தமிழகத்தில் இருக்கமாட்டார்கள். இக்கீரையில் வைட்டமின் A 9200 I.U’ உள்ளது. இதர தாதுப் பொருள்களோடு சோடியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, பரஸ்பரஸ் போன்றவைகளும் உள்ளன. மேலும் உயிர்ச் சத்துக்களான “எ” யும் “சி”யும் உள்ளன.

மருந்துக் குணம்:

இதைக் கடைந்து உண்டால் உடல் உட்சூடு, இரத்தக் கொதிப்பு பித்த எரிச்சல் முதலியவைகள் குறைவதுடன், கண்கள் குளிர்ச்சி பெறும். நல்ல பசியைத் தரும். சொறி சிரங்கு நீங்கும்.

சாகுபடி:

இதை எல்லாக் காலத்திலும் பயிரிடலாமாயினும் கோடைக் காலமே சிறந்தது.

வகை கோ 1:

இதை முளைக்கீரையாகவும் தண்டுக் கீரையாகவும் பயன்படுத்தலாம்.

நிலத்தை நான்கைந்து முறை உழுது எக்டருக்கு 25 டன் தொழு உரம் இட்டு உழவேண்டும். கடைசி உழுவதற்குமுன் 125 கிலோ அமோனியம் சல்பேட், 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் 60 கிலோ மூரியேட் ஆப்பொட்டாஷ் (சாம்பல்சத்து) இட்டு உழுது 3’X3’ பாத்திகளாகப் பிரித்து வைக்கலாம்.

விதைத்தல்:

எக்டருக்கு 2.5 கிலோ விதையுடன் 10 மடங்கு சிறுமணல் சேர்த்து விதைத்து நீர் பாய்ச்ச வேண்டும். நிலத்தின் தன்மையைப் பொறுத்து 5 முதல் 7 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சுதல் நன்று.

அறுவடை:

விதைத்த 15 முதல் 20 நாளில் வேருடன் பறித்து முளைக்கீரையாகப் பயன்படுத்துவர். அப்படியே பூமியில் விட்டு 50 நாளில் எடுத்தால் தண்டுக்கீரையாகப் பயன்படுத்தலாம். முளைக்கீரையாக 6000 முதல் 10,000 கிலோ வரை கிடைக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு:

விதைத்ததும் விதைகளை எறும்பு எடுத்துச்செல்லாமல் காக்க பி.எச்.சி. 10/- மருந்தைத் தூவுக.

மூக்கு வண்டு:

தண்டைத் துளைக்கும் மூக்கு வண்டைத் தடுக்க மாலதியான் 0.5 தெளிக்கலாம் (ஒரு லீட்டர் நீரில் 2அட மருந்து கலத்தல் நல்லது)

இலைப்புள்ளி நோய்:

இதைத் தடுக்க டைதேன் Z, 78 0.15% தெளித்தல் நன்று. (3’X3’_ வீட்டுத் தோட்டத்தில் விதைக்க 10 ச.அடி பாத்தி கொத்தி 5 கிலோ மக்கிய எரு விட்டு நன்கு கிளறி ஒரு கிராம் (அ) 2 கிராம் விதையுடன் 10 கிராம் மணல் கலந்து பரவலாக விதைக்கலாம். விதைத்து நீர்ப் பாய்ச்சி வந்தால் 15 நாளில் இருந்து முளைக்கீரையாக எடுத்துப் பயன்படுத்தலாம்.

கைக் கத்தையாக சுமார் 10 கத்தை கிடைக்கும். எடுக்கும் போது 15 முதல் 20 செ.மி. ஒரு செடியை விட்டு மற்றதை இரு நாளைக்கு ஒருமுறை எடுக்கலாம். 30 நாட்களுக்குப்பிறகு விட்ட தண்டுக் கீரையில் இருந்து கீரைகளை மட்டும் பறித்துப் பயன்படுத்தலாம். இதைப் போல் தொட்டிக்கு 3 செடி வீதம் நட்டு 5 மண் தொட்டியில் விதைத்தால் ஒரு குடும்பத்துக்குத் தேவையான கீரையைத் தொடர்ந்து பெற முடியும்.

கீரை விதை:

கீரை தண்டுக் கீரையாக விட்டால் விதை பெறலாம். கீரைவிதையில் 15% புரதம் உள்ளது. நெல், கம்பு, கேழ்வரகு முதலியவைகளை விட கீரைவிதையில் புரதம் உள்ளது. புரதச்சத்து பற்றாக்குறையான இந்நாளில் கீரையை ஏக்கரளவில் பயிரிட்டுக் கீரையைப் பயன்படுத்துவதோடு விதையையும் பயன்படுத்தலாம்.

விதையை மாவாக்கி இதர மாவு மாதிரிப் பயன்படுத்தலாம். விதையில் இருந்து பொரி செய்து உண்ணலாம். கீரை விதை மாவை வறுத்து வெல்லம் (அ) சர்க்கரை சேர்த்துண்ணலாம். இதர கேழ்வரகு, அரிசி கம்பு மாவுகளுடன் சேர்த்துப் பயன்படுத்திப் புரதச்சத்துப் பெறலாம்.

கீரை விதைகளை 80 முதல் 90 நாளில் பெறலாம் ஏக்கருக்கு 800 முதல் 1000 கிலோ விதை வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் கீரை இலையையும் விதையையும் பயன்படுத்தி உடல்நலம் பேணுவோமாக.

கொடிப் பசளைக் கீரை:

இதை வயலைக்கீரை என்றும் வழங்குவர். தமிழ் இலக்கியத்தில் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பே இந்த வயலைக் கீரை இடம்பெற்றுள்ளது. இக்கீரையில் அதிகமாகச் சுண்ணாம்புச்சத்தும், பாஸ்பரஸ் சத்தும் அடங்கியுள்ளன.

மருத்துவக்குணம்:

இக்கீரையால் மூத்திரக்கடுப்பு, வெள்ளை ஒழுக்கு, வாந்தி ஆகியவை நீங்கும்.

இவ்விலையைப் பருப்புடன் சேர்த்து (அ) தனியாகவோ கடைத்துண்ணலாம். இதன் மூலம் அதிக இரத்த விருத்தி ஏற்படும், தேகவெப்பத்தைத் தணிக்கும். நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு இவைகளை நீக்கும். மலமிளக்கும் சொரி சிறங்கு நீங்கும்.

வகைகள்:

இதில் சிவப்புப்பசளை (Basellarulra) பச்சைப்பசளை (Basella alba) என இரு கொடி வகையுண்டு. இதுவன்றிச் செடிப்பசளையும் உண்டு. இப்பசளை இலைகள் தடிப்பாக நீர்ச்சத்து அதிகமாகக் கொண்டிருக்கும்.

சாகுபடி முறை:

கொடித்துண்டில் ஓ ரிரு கணுக்கள் இருக்கும்படிப் பார்த்து நறுக்கி, கணுக்களை மண்ணில் பதிய வைத்து நீரூற்றி வளர்க்கலாம். எளிதில் வளரும். வீட்டில் உள்ள மரங்களின் அருகே கொடித்துண்டுகளை நட்டு மரத்தின் மீது ஏற்றி (அ) வீட்டின் மீது ஏற்றி வளர்க்கலாம். வீட்டுத் தோட்ட வேலியில் ஏற்றி படரவிடின் பார்க்க அழகாக இருத்தலோடு வாரத்திற்கு ஒருமுறை பசலை இலைகளைப் பறித்துச் சமைத்துண்ணலாம்.

மண் தொட்டிகளில் (அ) காலிப் பெட்டிகளில் இக் கொடித் துண்டை நட்டு வீட்டுச்சன்னல் ஓரத்தில் வைத்துச் சன்னலீவ் குறுக்கே நூல் கட்டி அதில் ஏற்றிப்படர விடலாம். அழகுணர்ச்சிக்கு (Easthetic Sense) ஆதரவு தருவதோடு கீரையாக இலைகளைப் பறித்துப் பயன்படுத்தலாம்.

செடிப்பசளை:

காய்கறித் தோட்டங்களில் கால்வாய் ஓரங்களில் கொழுந்தை (அ) இலைக் காம்பை நட்டு வளர்க்கலாம். 15 (அ) 20 நாட்கட்கு ஒருமுறை இலைகளின் கொழுத்துடன் அரிந்து சமைக்கலாம். பசளை இனத்திற்கு விதையும் உண்டு. விதையை எடுத்து உலர்த்தி தேவைப்படும் இடத்தில் ஊன்றி வளர்க்கலாம். கொடிகள் இரண்டு மூன்று ஆண்டுகளில் முற்றி இலை சிறுக்கத் துவங்கியதும் வேறு கொடித்துண்டுகளை நட்டு அது வளர்ந்ததும் முற்றிய கொடியை வேருடன் நீக்கி விடலாம்.

ஓம் சக்தி!

நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 12 (1982) பக்கம்: 25-27

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here